BIG STORIES

சமையல் உலகின் சக்ரவர்த்தி 'தாமு அப்பா'

பிரபல சமையல் கலை நிபுணரும், பத்மஸ்ரீ விருது பெற்றவருமான செஃப் தாமு உடல்நலக்குறைவால் சென்னையில் உயிரிழந்தார். அவரது மறைவு ஒட்டு மொத்த சமையல் கலைத் துறையினரையும், திரை உலகினரையும் மற்றும் கோடிக்கணக்கான ரசிகர்களையும் மீளாத் துயரில் ஆழ்த்தியுள்ளது.

Azhagiri Arumugam

மக்கள் மனதில்...

தனித்துவமான சமையல் திறன், எளிமையான பேச்சு மற்றும் சமையல் கலையில் செய்த உலக சாதனை மூலம் உலகெங்கிலும் உள்ள தமிழ் மக்களின் மனதில் இடம் பிடித்தவர் செஃப் தாமு.

சென்னையில் 1954ல் பிறந்த தாமோதரன் என்ற அந்த எளிய இளைஞர், சமையல் உலகின் உச்சாணிக் கொம்பைத் தொடுவார் என்று அன்று யாரும் நினைத்திருக்க மாட்டார்கள். உணவகங்களில் பாத்திரம் கழுவும் அடிமட்டப் பணியில் இருந்தே தனது அக்னிப் பரீட்சையான சமையல் உலகப் பயணத்தைத் தொடங்கினார் செஃப் தாமு.

செஃப் தாமு

முதல் சமையல் கலைஞர்

மும்பையின் பிரம்மாண்ட தாஜ் ஹோட்டலில் சமையல் கலை நிபுணராகத் தனது பணியைத் தொடங்கியவர், சமையல் கலை மீது கொண்ட தீராத காதலால், கரண்டியைப் பிடித்த கையோடு பேனாவையும் பிடித்தார். 2004ஆம் ஆண்டில் சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஹோட்டல் மேலாண்மைத் துறையில் முனைவர் பட்டம் பெற்ற முதல் இந்தியச் சமையல் கலைஞர் என்ற இமய சாதனை படைத்தார். சமையல் உலகின் முழுநேர ராஜாவாக மாறுவதற்கு முன், பேராசிரியராகவும் மாறி அடுத்த தலைமுறைக்கு வித்திட்டார்.

தாமு அப்பா...

தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான சுவையோ சுவை, அடுப்பங்கரை, சமையல் தர்பார், கலர்ஸ் கிச்சன் மூலம் தமிழ்நாட்டு இல்லத்தரசிகளின் இதய அரியணையில் அமர்ந்தார் செஃப் தாமு.

இருப்பினும், தற்போதைய 2K கிட்ஸ் தலைமுறையினரிடமும் அவரை கொண்டு சேர்த்த பிரம்மாண்ட மேடை விஜய் தொலைக்காட்சியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சிதான். அதில் நடுவராக அவர் காட்டிய கனிவான அணுகுமுறையும், தட்டிக்கொடுக்கும் தந்தை உள்ளமும், ’தாமு அப்பா’ என்ற அந்த ஒற்றை வார்த்தையும் ஒட்டுமொத்த உலகத் தமிழர்களையும் காந்தமாய் ஈர்த்தன.

தாமு

சமையல் துறைக்கு மகுடம்

2010ல் தொடர்ந்து 24 மணி நேரம் நான்-ஸ்டாப்பாக சமைத்து கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் முத்திரை பதித்தவர், 2021ல் சுமார் 99.4 கிலோ எடை கொண்ட உலகின் மிகப்பெரிய இட்லியைத் தயாரித்து மீண்டும் ஒருமுறை கின்னஸ் சாதனையைத் தன் வசமாக்கினார்.

அஞ்சறைப் பெட்டிக்குள் ஒளிந்திருந்த இந்தியாவின் பாரம்பரிய கிராமத்துச் சுவைகளை உலக அரங்கிற்கு கொண்டு சென்ற சுவைகளின் காவலருக்கு கடந்த 2025ஆம் ஆண்டு இந்திய அரசு உயரிய பத்மஸ்ரீ விருது வழங்கி ஒட்டுமொத்த சமையல் துறைக்கே மகுடம் சூட்டியது.

நீங்கா சுவை...

வெறும் சமையலறையோடு தன் எல்லையைச் சுருக்கிக் கொள்ளாத தாமு, கல்லாப்படம், உள்குத்து, ஒருபக்க கதை, என்ன சொல்லப் போகிறாய் உள்ளிட்ட திரைப்படங்களிலும் தனது எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி வெள்ளித்திரையிலும் ரசிகர்களைக் கவர்ந்தார்.

அவரது உடல் மறைந்தாலும், அவர் சமைத்துப் பரிமாறிய சுவையும், அவர் ஊட்டிய பாசமும், கோடிக்கணக்கான மக்களின் நெஞ்சங்களில் நீங்கா சுவையாக எப்போதும் வாழும்.