காலாவதியான பெர்மிட் ஆவணங்களுடன் கால்நடைகள் கொண்டு செல்லப்படும் லாரிகளை பிடித்து ஒப்படைத்தும், நடவடிக்கை எடுக்காமல் மேச்சேரி போலீஸ் விடுவிக்க, கடத்தலின் பின்னணியில் பிரபல தென் மாவட்ட ரவுடி ராக்கெட் ராஜா இருப்பதாக அதிர வைக்கும் தகவலும் கிடைத்துள்ளது.
கிருஷ்ணகிரியில் அதிர்ச்சி
வட மாநிலங்களில் இருந்து சேலம் வழியாக கேரளாவுக்கு கால்நடைகள் கடத்தப்படுவதாக நியூஸ் தமிழ் செய்திக் குழுவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து, செய்திக் குழுவும் அதிரடியாக கள ஆய்வில் இறங்கியது. அப்போது, கிருஷ்ணகிரி மாவட்டம் காரியமங்கலம் மாந்தோப்புக்குள் வைத்து RR என ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்த லாரிகளில் மாடுகள் வரிசையாக ஏற்றப்பட்டன.
வட மாநிலங்களில் இருந்து சரக்கு லாரிகளில் கொண்டு வரப்படும் மாடுகள், மாந்தோப்புக்கு நடுவே அமைக்கப்பட்டுள்ள ரகசிய குடோன்களில் அடைத்து வைக்கப்படுகிறது. அங்கிருந்து கண்டெய்னர் லாரிகளில் ஏற்றப்படும் மாடுகள், கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கு கடத்திச் செல்லப்படுவது டிரோன் காட்சிகளில் சிக்கியது.
டிரோன் காட்சியில் அதிர்ச்சி
கால்நடைகள் லாரிகளில் ஏற்றப்படும் போதே, அந்த இடத்தை ட்ரோன் மூலம் கண்காணித்த செய்திக் குழு, அடுத்தபடியாக கால்நடைகளை ஏற்றிச் சென்ற லாரிகளை பின் தொடர்ந்தது. சுமார் 100 கிலோ மீட்டர் தூரம் பின் தொடர்ந்து வந்த செய்திக் குழு, எருமைப்பட்டி டோல்கேட்டில் வைத்து மடக்கியது. லாரி ஒட்டுநரிடம் மைக்கை நீட்டி செய்தியாளர் கேள்வி எழுப்ப, ஆந்திராவில் இருந்துலோடு வருவதாக கூறினார்.
பெர்மிட் இருக்கிறதா? என்ற கேள்விக்கு ஒரு ரசீதை எடுத்து நீட்ட, அந்த ஆவணமோ காலாவதியாகியிருந்தது.
லாரிகளைப் பிடித்தும் ஏமாற்றம்
அதே வேகத்தில் இன்னொரு லாரியை மடக்கி பிடித்த செய்தியாளர், அந்த ஓட்டுநரிடமும் சரமாரியாக கேள்வி எழுப்பினார். ஆனால், அந்த ஓட்டுநர் பதில் ஏதும் கூறாமல் செல்போனை கொடுத்து பேச சொன்னார். செய்தியாளருக்கு எதிர்முனையில் பேசிய நபர், மாடு வியாபாரி ஜாகீர் பாரூக் என்பது தெரியவந்தது. செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு ஜாகீர் பாய் தெளிவாக பதில் சொல்லாமல் இருக்க, மடக்கி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரிகள் திடீரென அங்கிருந்த புறப்பட்டன.
செய்தியாளர் நின்று கொண்டிருக்கும் போதே, லாரிகளை எடுத்துக் கொண்டு ஓட்டுநர்கள் ஓட்டம்பிடித்தனர். ஆனாலும், செய்தியாளர் லாரிகளை பின் தொடர்ந்து வந்து மேச்சேரி காவல் நிலையத்திலேயே ஒப்படைத்தார். போலீசும் உடனே நடவடிக்கை எடுப்பார்கள் என எதிர்பார்த்தால் ஏமாற்றம் தான் மிஞ்சியது.
லாரிகள் விடுவிப்பு, அதிர்ச்சி
லாரிகள் காரியமங்கலத்தில் இருந்து புறப்படும் போதே, எஸ்.பி., அலுவலகத்திற்கும், மேச்சேரி போலீசுக்கும் செய்தியாளர் அழைத்து தகவல் சொல்லியிருக்கிறார். ஆனால், செய்தியாளர் கூறியதை காதிலேயே போட்டுக் கொள்ளாத போலீசார், வழக்கம் போல கண்டு கொள்ளாமல் இருக்க, காவல் நிலைய வாசலிலேயே கடத்தல் லாரிகளை ஒப்படைத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் லாரிகளை விடுவித்தது அதிர்ச்சி கொடுக்கும் வகையில் இருந்தது.
போலீசாரின் அலட்சியம் குறித்து செய்தியாளர் நேரலையில் பேசிக் கொண்டிருக்க, மேச்சேரி காவல் நிலைய எஸ்.எஸ்.ஐ., டிஎஸ்பி சண்முகசுந்தரம் பேசுவதாக கூறி செல்போனை கொடுத்தார். செல்போனை வாங்கியதும், ‘நீங்கள் என்ன போலீஸா?’ என உரத்த குரலில் செய்தியாளரை கேட்ட டிஎஸ்பி சண்முகசுந்தரம், ’எங்கள் வேலையை எங்களுக்கு பார்க்க தெரியும், இல்லை என்றால் கேஸ் போடுவேன்,’ என பகிரங்க மிரட்டல் விடுத்தார்.
போலீஸ் ஸ்டேஷன் வாசலிலேயே லாரிகளை ஒப்படைத்தும் நடவடிக்கை எடுக்காமல் கோட்டை விட்டதின் மூலம், காவல் துறையே கடத்தல் சம்பவத்திற்கு சிவப்பு கம்பளம் விரிக்கிறதா? என்ற சந்தேகம்தான் எழுந்துள்ளது.
அதிர வைத்த விளக்கம்
இதனிடையே, மாட்டு வியாபாரி ஜாகீர் ஃபாரூக்கிடம் இருந்து செய்தியாளருக்கு அழைப்பு வந்தது. அப்போது, மாடுகள் எங்கிருந்து ஏற்றி வரப்படுகின்றன? எங்கெல்லாம் கொண்டு செல்லப்படுகிறது? என்ற விபரங்களை எல்லாம் பகிர்ந்து கொண்ட அவர், அனுமதி பெற்று தான் மாடுகள் ஏற்றிச் செல்லப்படுகிறது என விளக்கம் கொடுத்தார். ஆனால், பெர்மிட் ஆவணங்களில் தேதி தவறாக இருப்பதாக செய்தியாளர் கூற, ‘அது சட்டவிரோதம் இல்லை, விதிமீறல் தான்,’ என வினோத விளக்கம் கொடுத்து அதிர வைத்தார்.
ராக்கெட் ராஜாவின் டிராவல்ஸ்...
இது ஒரு பக்கம் இருக்க, மாடுகளை ஏற்றிச் செல்லும் லாரிகளில் RR எனக் குறிப்பிடப்பட்டிருந்தது பிரபல ரவுடி ராக்கெட் ராஜா என்ற தகவலும் கிடைத்துள்ளது. இது குறித்து மாடு வியாபாரியிடம் கேட்ட போது முதலில் மழுப்பலாக பதில் அளித்த அவர், பின்னர் ராக்கெட் ராஜாவின் டிராவல்ஸில் இருந்து லாரிகள் வாடகைக்கு எடுத்து ஓட்டி வருவதாக கூறினார்.
அதிகாரிகளுக்கு லஞ்சம்
ஆனால், கடத்தல் லாரிகளை கண்டு கொள்ளாமல் இருக்க, விதியை மீறி கால்நடைகளை கடத்திச் செல்ல ஒவ்வொரு லாரிக்கும் 15 ஆயிரம் ரூபாய் முதல் 20 ஆயிரம் ரூபாய் வரை அதிகாரிகளுக்கு லஞ்சமாக கொடுக்கப்படுவதாக கூறப்படுகிறது. அதாவது, வட மாநிலங்களில் முறையாக பராமரிக்கப்படாத, தடுப்பூசி செலுத்தப்படாத மாடுகளை விதியை மீறி கடத்திச் சென்று விற்பனை செய்யும் நிலையில், கண்காணிக்க வேண்டிய கால்நடைத் துறை அதிகாரிகள் கலெக்சனை பார்த்ததும் மௌனமாக இருந்து விடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
நெல்லை ரவுடியான ராக்கெட் ராஜாவுக்கு கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களில் நெருங்கிய தொடர்பு இருக்கும் நிலையில், கால்நடைகள் கடத்தல் சம்பவத்திலும் ராக்கெட் ராஜா பெயர் அடிபட தொடங்கியிருக்கிறது. ஆகையால், கால்நடைகள் தானே என சாதாரணமாக நினைக்காமல், இந்த சட்டவிரோத கடத்தலை முற்றிலும் தடுத்து நிறுத்த வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.
வீடியோவைக் காண...