மருத்துவ செலவுகளை ஏற்றுக்கொள்வதாகவும், வெளியில் யாரிடமும் சொல்ல வேண்டாம் எனவும் மத்தியஸ்தம் பேசிய ஆசிரியைகள் தற்போது, தனது மகன் வழக்கறிஞர் தான் எங்கு வேண்டுமானாலும் புகார் கொடுங்கள் என மிரட்டுவதாகவும் மாற்றுத்திறனாளி புலம்பி உள்ளார்.
கால் உடைந்து, கைப்பிடி உடைந்து, துருப்பிடித்து பயன்படுத்தவே லாயக்கில்லாத இரும்பு பீரோவால் ஒரு பிஞ்சு சிறுவனின் கை எலும்பு முறிந்தது. மருத்துவ செலவை சமாளிக்க முடியாத மாற்றுத்திறனாளி தகப்பனோ, என்ன செய்வதென தெரியாமல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை தேடி ஓடிவரும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
சரிவர படிக்கவில்லை...
மயிலாடுதுறை மாவட்டம் வில்லியநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மாற்றுத்திறனாளி மதிவாணன். இவர் கடந்த 4 ஆண்டுகளாக பாலையூரில் உள்ள தனது மாமியார் வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது மகன் சிவ வாணன் அங்குள்ள அரசு நல தொடக்கப்பள்ளியில் 3ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில், சரிவர படிக்கவில்லை எனக்கூறி கடந்த அக்டோபர் 7ஆம் தேதி மாணவன் சிவவாணனை பள்ளி தலைமை ஆசிரியர் லதா அடித்ததாக கூறப்படுகிறது. அப்போது, வலி தாங்க முடியாத மாணவன் அடியில் இருந்து தப்பிப்பதற்காக சுவரை ஒட்டி தள்ளிச் சென்றுள்ளார். ஒருபக்கம் செங்கற்களும், மறுபக்கம் நெளிந்திருந்த இரும்பு கால்கள் சப்போர்ட்டிலும் சுவர் ஓரம் வைக்கப்பட்டிருந்த பீரோ மாணவனின் மேல் சாய்ந்து விழுந்ததாக தெரிகிறது.
எப்படி மாணவரை அடிக்கலாம்?
இதில், இடது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டதோடு, தலையிலும் காயமடைந்த மாணவனை பள்ளிக்கு எதிரில் வேலை செய்து கொண்டிருந்த 100 நாள் வேலை பணியாளர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாக கூறப்படுகிறது. மாணவர்களை அடிக்கவே கூடாது என்ற விதிமுறையைமீறி தலைமை ஆசிரியர் எப்படி அடிக்கலாம்?
"பழைய இரும்பு சாமான், ஈயம், பித்தளைக்குப் பேரீச்சம்பழம்" என கூவிக்கொண்டு வரும் வியாபாரிகூட அடிமாட்டு விலைக்கு வாங்க முடியாத நிலையில் உள்ள ஒரு பீரோவை பள்ளியில் வைத்திருக்கலாமா? ஆசிரியர்களை நம்பிதானே பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புகிறோம் என நியாயம் கேட்பதற்காக மாணவனின் பெற்றோரும் உறவினர்களும் பள்ளிக்கு சென்றுள்ளனர்.
ரூ.30,000 மட்டும்...
’சிவவாணன் தங்களின் சொந்த பிள்ளை, எத்தனை லட்சங்கள் செலவானாலும் நாங்கள் பொறுப்பு, தங்கள் மீது தவறுதான்,’ என படாரென சரணடைந்த ஆசிரியைகள் முதலில் ரூ.30 ஆயிரம் மட்டும் மருத்துவ செலவிற்காக கொடுத்ததாக தெரிகிறது.
ஆனால், மயிலாடுதுறை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவனுக்கு அறுவை சிகிச்சை, கையில் பொருத்தப்பட்ட பிளேட், சிலவாரங்கள் பெட் வாடகை, டிஸ்சார்ஜ் ஆனபிறகு தினமும் கட்டை மாற்றுவதற்காக சிறுவனை அழைத்துச்செல்ல கார், மீண்டும் வீட்டுக்கு அழைத்து வருவதற்கு கார், மருந்து மாத்திரை என தினமும் பணம் தண்ணீர்போல செலவாகி உள்ளது.
வெளியில் கூற வேண்டாம்
கணவன் மாற்றுத்திறனாளி, மனைவி கைக்குழந்தையை வைத்துக்கொண்டு வேலைக்கு செல்ல முடியாது என்பதால் செலவை சமாளிக்க முடியாத தம்பதி, தலைமையாசிரியை லதா மற்றும் வகுப்பு ஆசிரியை சாவித்ரி ஆகியோரிடம் நிலைமையை எடுத்துக்கூறி உள்ளனர். அப்போதும்கூட, முழு செலவையும் நாங்களே ஏற்றுக்கொள்வதாக செல்போனிலேயே பேசிப்பேசி சமாளித்த இருவரும், வெளியில் யாரிடமும் சொல்ல வேண்டாம் என கேட்டுக்கொண்டதாகவும் தெரிகிறது. அதனை நம்பிய தம்பதியும் கடன் வாங்கி செலவு செய்தனர். ஆனால், ஆசிரியைகள் பணத்தை மட்டும் கண்ணில் காட்டவில்லை.
ஆட்சியரிடம் புகார்
இதுகுறித்து சிறுவனின் தந்தை கேட்டபோது, தனது மகன் வழக்கறிஞர் தான், யாரிடம்போய் வேண்டுமானாலும் புகார் கொடுக்கலாம் என தலைமை ஆசிரியை லதா மிரட்டியதாக கூறப்படுகிறது. அதன்பிறகு, பாலையூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்ற மதிவாணனை போலீசார் விரட்டியதாக தெரிகிறது.
பின்னர், தனது மகனை எப்படி பள்ளிக்கு அனுப்பினேனோ அதேபோன்று மீண்டும் தன்னிடம் ஒப்படைக்க வேண்டும், முழு மருத்துவ செலவையும் தலைமை ஆசிரியை ஏற்க வேண்டும் எனக்கூறி மதிவாணன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.
இதுஒருபுறமிருக்க, இத்துப்போன ஒரு பீரோவை பயன்படுத்த வேண்டிய அவசியம் என்ன? சில ஆயிரங்களே உள்ள ஒரு பீரோவைகூட பள்ளி நிர்வாகம் வாங்க முடியாதா? தலைமை ஆசிரியை லதா மாணவனை அடித்தது உண்மைதானா?
அப்படியானால் அவர் மீது மாவட்ட கல்வி அதிகாரிகள் என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறார்கள்? என கேள்வி எழுப்பும் பலர், தீவிர விசாரணை மேற்கொண்டு ஏழை தம்பதிக்கு நியாயம் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வீடியோவைக் காணலாம்