சிகிச்சை அறையில் நோயாளி அடைப்பு 
மாவட்ட செய்திகள்

சிகிச்சை அறையில் நோயாளி அடைப்பு

ரூ.6 ஆயிரம் பாக்கிக்காக அறைக்குள் வைத்து நோயாளியை பூட்டி வைத்து அடாவடியில் ஈடுபட்டதாக, மருத்துவமனை மீது புகார் எழுந்துள்ளது.

Azhagiri Arumugam

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் 6 ஆயிரம் ரூபாய் பாக்கிக்காக சிகிச்சை அறைக்குள் வைத்து நோயாளியை பூட்டி வைத்து அடாவடியில் ஈடுபட்டதாக, கோச்சடையான் என்ற தனியார் மருத்துவமனை நிர்வாகம் மீது புகார் எழுந்துள்ளது.

அமைச்சர் பிரபுவிடம் பேசவே மறுத்த மருத்துவமனை நிர்வாக ஊழியர்கள், பணம் அக்கவுண்டுக்கு வந்த பின்னரே நோயாளியை வெளியே விட்டுள்ளனர்.

தனியார் மருத்துவமனையில்...
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியை சேர்ந்த வேலம்மாள் என்பவருக்கு சனிக்கிழமை இரவு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அதே பகுதியிலுள்ள கோச்சடையான் என்ற தனியார் மருத்துவமனைக்கு குடும்பத்தினர் அழைத்துச் சென்றுள்ளனர்.

அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், வேலம்மாவுக்கு சர்க்கரையின் அளவு அதிகரித்து உள்ளதால் உடனடியாக டெஸ்ட் எடுக்க வேண்டுமென கூறி எமெர்ஜென்சி பிரிவில் அனுமதித்தனர். திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் கையில் காசில்லாமல் பரிதவித்த குடும்பம், வேலம்மாளின் தங்க தோடை அடகு வைத்து பணத்தை புரட்டி உள்ளனர்.

ரூ.20,000 கேட்டு...
மருத்துவமனையில், முதல்கட்டமாக 5 ஆயிரத்து 500 ரூபாய் பில் செலுத்திய பின்னர், உடல்நலம் சற்று தேறியதால் வேலம்மாளை வீட்டுக்கு அழைத்து செல்கிறோம் என மருத்துவமனை நிர்வாகத்திடம் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அப்போது, மேற்கொண்டு 20 ஆயிரம் ரூபாய் செலுத்துமாறு, மருத்துவமனை நிர்வாகம் பில்லை தீட்டி உள்ளது.

ஆனால் தங்கநகையை அடகு வைத்த பணத்தில் மீதம் இருப்பதோ, வெறும் 14 ஆயிரத்து 500 ரூபாய் மட்டுமே. மீதமுள்ள 6 ஆயிரம் ரூபாய் தங்களிடம் இல்லையென குடும்பத்தினர் கூறியதால், வேலம்மாளை சிகிச்சை அறைக்குள் வைத்து பூட்டிவிட்டு மருத்துவமனை நிர்வாகம் அடாவடியில் ஈடுபட்டதாக புகார் எழுந்துள்ளது.

நோயாளியை விட மறுப்பு
திருப்பத்தூர் தொகுதி எம்.எல்.ஏ. சீனிவாச சேதுபதியின் அண்ணனுக்கு சொந்தமான இந்த மருத்துவமனையிலேயே இந்த அடாவடி சம்பவம் நிகழ்ந்திருப்பது குறித்து தகவலறிந்து நிகழ்விடத்துக்கு சென்ற செய்தியாளர் ஒருவர், தன்னிடமிருந்த ஆயிரம் ரூபாயை கொடுத்தும், துளியும் பரிவு இல்லாத நிர்வாகம், வேலம்மாளை வெளியே விட மறுத்துள்ளது.

அமைச்சர் பேசியும்...
இதனையடுத்து, அமைச்சர் பிரபுவை தொடர்பு கொண்டு உதவி கேட்டபோது, தொலைபேசியில் பிரபுவிடம் பேச மறுத்த மருத்துவமனை நிர்வாகம், பணம் கொடுத்தால் தான் வேலம்மாளை விடுவோம் என கட் அண்ட் ரைட்டாக சொல்லிவிட்டது.

இதனையடுத்து ஜிபேவில் அமைச்சர் பிரபு 6 ஆயிரம் ரூபாய் செலுத்திய பின்னரே, நோயாளியை வெளியே விட்டுள்ளனர். அமைச்சரின் காதுக்கு தகவல் சென்றபோதும் கூட நோயாளியை பூட்டி வைத்து காசு கேட்டு மிரட்டிய மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்ற கோரிக்கை வலுத்துள்ளது.