news

அரசியல் பேசாத நடிகர் தனுஷ்? நற்பணி இயக்கத்தின் மகளிரணியுடன் மீட்டிங்

அரசியலில் வித்திட முயற்சிக்கும் நடிகர் தனுஷ், நற்பணி இயக்கத்தின் மகளிரணியை வரவழைத்து சந்திப்பு நிகழ்ச்சியை நடத்தி உள்ளார்.

Azhagiri Arumugam

சமீபகாலமாக அரசியல் எண்ட்ரி கொடுப்பாரா? மாட்டாரா? என்ற விவாதத்தில் லைம் லைட்டிலேயே இருந்து வரும் நடிகர் தனுஷ், நிகழ்ச்சி மேடையில் ஒரு நிமிடம் கூட பேசாமல் வெறும் புகைப்படங்களை எடுத்துக் கொண்டு அனுப்பியதாக தகவல் வெளியாகி உள்ளது.

தனுஷ்

ரசிகர்களுடன் சந்திப்பு

தனுஷ் ரசிகர் மன்றத்தை நற்பணி இயக்கமாக மாற்றிய பிறகு, முதன்முதலில் மகளிர் படைகளை வரவழைத்து கையில் காமாட்சி விளக்கு பரிசாக கொடுத்த நிலையில், அவர் இந்து மத மக்கள் மற்றும் பெண்களின் வாக்குகளை டார்கெட் செய்கிறாரா? என பலரையும் சிந்திக்க வைத்திருக்கிறது. அரசியலில் காலூன்ற தனுஷ் ஆழம் பார்த்துக் கொண்டிருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல் றெக்கை கட்டி பறந்து கொண்டிருந்த நிலையில், அடுத்தடுத்து ரசிகர்களுடனான சந்திப்பு நிகழ்ச்சியை நடத்தி ஆதரவு கரங்களை திரட்டி வருகிறார்.

மகளிர் அணி கூட்டம்

கடந்த செப்டம்பர் மாதம் மினி அரசியல் மாநாட்டை போல் நலத்திட்ட உதவி நிகழ்ச்சியை நடத்தி நடிகர் தனுஷ் தனது ரசிகர்களை அரசியலுக்காக பக்குவப்படுத்தியதாக பேசப்பட்டு வந்தது. இதனையடுத்து ரசிகர் மன்றத்தை நற்பணி இயக்கமாக மாற்றிய உடன் மகளிர் வாக்குகளை கவரும் வண்ணம் மகளிரணி கூட்டத்தை சென்னையை அடுத்த செம்மஞ்சேரியில் உள்ள தனியார் கல்லூரியில் தனுஷ் நடத்தியிருக்கிறார்.

மகளிர் அணி

கவனம் ஈர்த்த போஸ்டர்கள்

அரசியல் தலைவர்களுக்கென உரித்தான ஸ்டைல்களில், ‘ஆஹா ஓஹோ,’ என பாராட்டி நடிகர் தனுஷ்க்காக பேனர்கள் வைக்கப்பட்டது, பலரையும் உற்று நோக்க வைத்திருக்கிறது. ’தமிழகத்தின் தங்கமகனே, அன்பு தலைவரே’ என பட்டம் கொடுத்து நற்பணி மன்ற இயக்க நிர்வாகிகள், தனுஷை தலைவராகவே பாவித்து அனைத்து ஏற்பாடுகளையும் பிரம்மாண்டமாகவே செய்துள்ளனர். காலை 9 மணியிலிருந்து பெண்கள் கூட்டத்துக்கு வரத் தொடங்கிய நிலையில் நடிகர் தனுஷ் மாலை 3 மணிக்கே எண்ட்ரி கொடுத்ததாக சொல்லப்படுகிறது.

வெள்ளி குத்துவிளக்கும் விருந்தும்

பல நேரம் காத்திருந்தாலும் தனுஷை கண்டதும் அத்தனை கஷ்டங்களும் பறந்து போனதை போல் ரசிகைகள் உற்சாகமாக கொண்டாடித் தீர்த்தனர். நிகழ்ச்சிக்காக பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனுஷின் தீவிரமான ரசிகைகளை வெறும் கையோடு அனுப்பாமல் வெள்ளி காமாட்சி விளக்கும், வயிறார தடபுடல் மதிய விருந்தையும் ஏற்பாடு செய்திருந்தார் தனுஷ். அவருக்கு உறுதுணையாக சகோதரிகள் இருவரும் ஓடோடி வந்து மகளிரணி நிர்வாகிகளை விழுந்து விழுந்து கவனித்தனர்.

தனுஷ்

பாடல் பாடிய தனுஷ்

சமீபகாலமாகவே அரசியல் விமர்சகர்கள் தொடங்கி பலரும் தனுஷ் அரசியல் எண்ட்ரி குறித்து விவாதித்து வரும் நிலையில், நிகழ்ச்சி மேடையில் ஒரு நிமிடம் கூட தனுஷ் பேசாமல், வெறும் ரசிகைகளுடன் தனித்தனியாக புகைப்படம் எடுத்துக் கொண்டு அனுப்பியதாக சொல்லப்படுகிறது. மேலும், தனுஷ் தனது ரசிகைக்களுக்காக இட்லி கடை திரைப்படத்தில் இடம்பெற்ற ’எத்தன சாமி வந்ததயா...’ என்ற பாடலை பாடியதாக கூறப்படுகிறது.

ரசிகைகளின் ஆர்வம்

அப்போது நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் தனுஷை காண ஆர்வமுடன் திரண்டு இருந்த ஆண் ரசிகர்களை நிர்வாகி ஒருவர் தாக்கியதோடு விரட்டி அடித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

திரையில் மட்டுமே தனுஷை கண்டு ரசித்து வந்த ரசிகை ஒருவர், அவரை நேரில் கண்டதும் தலை கால் புரியாமல் குதித்தார். தனுஷுக்காக ரசிகை ஒருவர் போட்ட ஸ்டெப் நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

தனுஷ்

தனக்கான மக்கள் ஆதரவு எந்த அளவுக்கு இருக்கிறது என்பதைத் துல்லியமாகக் கணித்தறியும் நோக்கிலேயே, நடிகர் தனுஷ் தனது ரசிகர்களை அடுத்தடுத்து நேரில் சந்தித்து வருவதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். இந்நிலையில் முதலமைச்சர் விஜய்க்கு அடுத்தபடியாக தனுஷ் அரசியலில் மூழ்கி முத்து எடுப்பாரா? என்பதை வருங்காலத்தில் பார்ப்போம்.