பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பெண்களுக்கான வலுதூக்குதலில் வெள்ளி வென்ற தமிழ் வீராங்கனை கஸ்தூரி ராஜாமணிக்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
தமிழ்நாடு அரசு சார்பில் 50 லட்சம் ரூபாய் உயரிய ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றும் அறிவித்து உள்ளார்.
வெள்ளி வென்ற வீராங்கனை
இதுதொடர்பாக, முதல்வர் விஜய் கூறி இருப்பதாவது;
ஜப்பானில் நடைபெற்றுவரும் 5ஆவது பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், பெண்களுக்கான வலுதூக்குதல் போட்டியில், 67 கிலோ எடைப் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்று தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்த்துள்ள வீராங்கனை கஸ்தூரி ராஜாமணிக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளையும், நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
ரூ.50 லட்சம் ஊக்கத்தொகை
அவரது சாதனையைப் பாராட்டும் வகையில், தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.50 லட்சம் உயரிய ஊக்கத்தொகை வழங்கப்படும். வீராங்கனை கஸ்தூரி ராஜாமணியின் தன்னம்பிக்கை, அயராத உழைப்பு, விடாமுயற்சி ஆகியவற்றின் மூலம் பெற்றுள்ள இந்த மகத்தான வெற்றி, தமிழ்நாட்டின் இளம் பாரா விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்குப் புதிய உத்வேகத்தை அளிக்கும்.
அவர் தொடர்ந்து பல வெற்றிகளைப் பெற்று தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்க்க எனது வாழ்த்துக்கள்.
இவ்வாறு முதலமைச்சர் விஜய் கூறி உள்ளார்.