ஆனால், அது தனது குரலே இல்லை, டீக்கடையில் இருந்த தனது செல்போன் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக விளக்க வீடியோ வெளியிட்ட வழக்கறிஞர், ’நான்தான் பேசினேன், அதனை பெரிதுபடுத்த வேண்டாம்,’ என நியூஸ் தமிழ் செய்தியாளரிடம் தனிப்பட்ட முறையில் கோரிக்கையும் வைத்துள்ளார்.
அன்பில் மகேஷ் கைது
கடந்த திமுக ஆட்சியில், தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவதாக கூறி, ரூ.100 கோடி லஞ்சம் வாங்கியதாகத் தொடரப்பட்ட வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை கடந்த 26ஆம் தேதி மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். இதற்கு மத்தியில் அடுத்த பரபரப்பாக, ’அன்பில் மகேஷ் ஜெயிலுக்கு செல்ல வேண்டியவர் தான், அவர் கைது செய்யப்பட்டது வரவேற்கத்தக்கது, கடைவீதிகளில் சரவெடி வெடித்து கொண்டாடலாம்,’ என திமுகவை சேர்ந்த ஒருவர் பேசுவது போன்ற ஆடியோ வெளியாகி உள்ளது.
யார் இந்த வழக்கறிஞர்?
திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சித்தையன்கோட்டை பேரூராட்சி மன்ற துணை தலைவராக உள்ளவர் தான் வழக்கறிஞர் ஜாகீர் உசேன். இவர் பேசுவதுபோன்று வெளியாகி உள்ள அந்த ஆடியோவில், தனது மனைவியின் பணியிட மாறுதலுக்காக ஒரு தலைமை ஆசிரியர் மூலம் அன்பில் மகேஷிடம் ரூ.7 லட்சத்து 70 ஆயிரம் கொடுத்ததாகவும், அரியலூர் சிஇஓ அலுவலகம் மூலம்தான் லெட்டரை சென்னையில்போய் கொடுத்ததாகவும் கூறுகிறார்.
ரூ,7,70,000 லஞ்சம்?
’நான் மட்டுமா பணத்தை கொடுத்தேன், என்னைப் போன்று 11 ஆசிரியர்கள் ரூ.7 லட்சத்து 70 ஆயிரம் கொடுத்து தான் வளவிச்செட்டிப்பட்டிக்கு பணியிட மாறுதலில் வந்துள்ளனர், ஒரு சீனியர் அமைச்சர், மாநிலத்தின் துணைப்பொதுச்செயலாளரான ஐ.பெரியசாமியின் லெட்டருக்கே அன்பில் மகேஷ் மதிப்பளிக்கவில்லை,’ என அந்த ஆடியோவில் ஜாகீர் உசேன் கூறுவதுபோல் உள்ளது.
’அன்பில் மகேஷ் பணம் வாங்கியது குறித்து எங்கு வேண்டுமானாலும் வந்து நிரூபிக்க தயார், சொந்த கட்சிக்காரனுக்கே இந்த நிலையென்றால் மற்றவர்களுக்கு என்ன நிலையோ? அதனால் அன்பில் கைதுக்கு யாரும் வருத்தப்பட தேவையில்லை,’ என ஜாகீர் உசேன் பேசுவதுபோல் உள்ளது அந்த ஆடியோ.
அது நான் இல்லை...
இதனிடையே, அது தன் குரலே இல்லை, மர்மநபர்களால் தனது குரல் தவறாக பதியப்பட்டுள்ளதாக விளக்கமளித்துள்ளார் ஜாகீர் உசேன். தான் வழக்கமாக ஒரு கடையில் டீ குடிப்பதாகவும், அங்கு மறந்து வைத்த தனது செல்போனை யாரோ எடுத்து குரல் பதிவில் கோல்மால் வேலை செய்து உள்ளதாகவும், இதுதொடர்பாக புகார் அளிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அது நான் தான்...
இப்படி, வீடியோவில் விளக்கமளித்த ஜாகீர் உசேனிடம் நியூஸ் தமிழ் செய்தியாளர் ஜோதிகுமாரும் செல்போனில் அழைத்து ஒரு தனியாக ஒரு விளக்கம் கேட்டார். ’அந்த ஆடியோவில் பேசியது நான்தான், வாட்ஸ்அப் குரூப்பில் விளையாட்டுக்கு அனுப்பினேன், அதுதான் பரவி வருகிறது, அதனை பெரிசுபடுத்த வேண்டாம்,’ என கேட்டுக்கொண்டார். இவர் மாறி மாறி பேசி வருவது திமுகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.