தமிழ் சினிமாவுக்கும் அரசியலுக்கும் உள்ள தொடர்பு ஒன்றும் புதிதல்ல, லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா 2031 சட்டமன்றத் தேர்தலை இலக்காகக் கொண்டு அரசியலில் தடம் பதிக்கப் போகிறார் என்ற தகவல் கோலிவுட்டிலும் அரசியல் வட்டாரத்திலும் காட்டுத்தீ போல் பரவி வருகிறது.
சினிமா பின்னணியில் இருந்து வந்து தமிழக முதலமைச்சராக அரியணை ஏறிய, மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவோடு நயன்தாராவை ஒப்பிட்டும், நடிகை த்ரிஷாவோடு இணைத்தும் பல யூகங்கள் சோஷியல் மீடியாக்களில் அனலைக் கிளப்புகின்றன.
அரசியலுக்கு வருகிறார்?
நடிகை நயன்தாரா அரசியலுக்கு வருகிறார் என்ற பேச்சு இப்போது திடீரென தீவிரமடைய என்ன காரணம்? முதலாவதாக, விஜய் அரசியலில் காலடி எடுத்து வைத்ததைத் தொடர்ந்து, தமிழ் சினிமாவில் அடுத்ததாக உச்சத்தில் இருக்கும் எந்த நட்சத்திரம் பொதுவாழ்வுக்கு வருவார் என்ற தேடல் இயல்பாகவே அதிகரித்துள்ளது.
இரண்டாவதாக, லேடி சூப்பர் ஸ்டார் என்ற இமேஜ், தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா என தென்னிந்தியா முழுவதும் நயனுக்கு இருக்கும் பிரம்மாண்டமான ரசிகர் பட்டாளமும் தான் இந்த எதிர்பார்ப்புக்குப் பிரதான அடித்தளமாக அமைந்துள்ளது.
மூன்றாவதாக, திரைத்துறை நிகழ்வுகள், ஆடியோ வெளியீடுகள் மற்றும் தனிப்பட்ட அறிக்கைகளில் நயன்தாரா காட்டி வரும் துணிச்சலான அணுகுமுறையும், பெண்களை மையமாகக் கொண்ட படங்களைத் தோளில் தாங்கி, வெற்றி பெற வைக்கும் அவரது ஆளுமையும் தான், அரசியல் விமர்சகர்கள் மத்தியிலும் பொதுமக்கள் மத்தியிலும் இந்த விவாதத்தைத் தூண்டி உள்ளது.
துணிச்சல்... துணிச்சல்...
இதுமட்டுமன்றி, நயன்தாரா எப்போதும் வெறும் நடிகையாக மட்டுமே நின்றுவிடாமல், சமூக நலன் சார்ந்த மற்றும் பாலின சமத்துவம் சார்ந்த விவகாரங்களில் அவ்வப்போது தனது குரலைப் பதிவு செய்ய தவறுவதில்லை.
கடந்த 2019ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் பெண் மருத்துவர் படுகொ* செய்யப்பட்ட கொடூர சம்பவத்தின் போது, குற்றவாளிகளுக்கு எதிராக மிகக் கடுமையான சட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி, தெலுங்கானா காவல்துறையின் நடவடிக்கையைப் பாராட்டித் துணிச்சலாக அறிக்கை வெளியிட்டார்.
2019ல், மூக்குத்தி அம்மன் பட ஆடியோ வெளியீட்டு விழாவில் மூத்த நடிகர் ராதாரவி, நடிகைகளை இழிவுபடுத்திப் பேசியதற்கு எதிராகப் பொங்கி எழுந்து, நடிகர் சங்கத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு மற்றும் விசாரணை கமிட்டி அமைக்கப்பட வேண்டும் என்று முதன்முதலில் போர்க்கொடி தூக்கியவரும் நயன்தாரா தான்.
அரசியல் மேடைகளில்...
சமீப காலங்களில், அரசியல் மேடைகளில் சினிமா நடிகைகளைக் கொச்சைப்படுத்திப் பேசும் அரசியல்வாதிகளின் பேச்சுகளுக்கு எதிரான பொதுமக்கள் மற்றும் ரசிகர்களின் எதிர்வினைகள், நயன்தாரா போன்ற முன்னணி நடிகைகளுக்கான சமூக ஆதரவை வெளிச்சம் போட்டுக்காட்டின.
அதேபோல, 2019ல் மூக்குத்தி அம்மன் படப்பிடிப்பின் போது கன்னியாகுமரி ஸ்வாமிதோப்பு அய்யாவழி கோயிலுக்கு நயன்தாரா ஆன்மீகப் பயணம் மேற்கொண்டதும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆன்மீகப் பயணங்களோடு ஒப்பிடப்பட்டு, அப்போதே அவரது அரசியல் வருகை குறித்த யூகங்கள் கிளம்பின.
ஆனாலும், இது போன்ற சமூக குரல்களும், ஆன்மீகப் பயணங்களும் அல்லது சமூகப் பிரச்சினைகளில் அக்கறை காட்டுவதும் மட்டுமே ஒருவர் நேரடி தேர்தல் அரசியலில் குதிப்பதற்கான அடையாளம் அல்ல என்பதை நிபுணர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.
என்ன சொல்கிறார் விக்னேஷ் சிவன்?
சமீபத்தில், உலக உணவு தின நிகழ்வொன்றில் கலந்துகொண்ட நயன்தாராவின் கணவரும் இயக்குநருமான விக்னேஷ் சிவன், நயன்தாராவின் அரசியல் வருகை குறித்து வெளிப்படையாகப் பேசி இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
நயன்தாரா தற்போது தாய்மையை முழுமையாக அனுபவித்து வருகிறார். எங்கள் குழந்தைகள், குடும்ப வாழ்க்கை மற்றும் சினிமா கேரியர் ஆகிய இரண்டில் மட்டுமே எங்கள் முழு கவனமும் உள்ளது. இதுவே எங்களுக்கு மனநிறைவைத் தருகிறது என்று அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
2031ல் நயன்தாரா...
தொழில் ரீதியாகப் பார்த்தால், நயன்தாராவின் சமீபத்திய டாக்சிக் படம் பாக்ஸ் ஆபிஸில் சோபிக்கத் தவறியபோதிலும், மூக்குத்தி அம்மன் 2 உள்ளிட்ட பல முக்கிய திரைப்படங்களில் அவர் தொடர்ந்து தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறார். விக்னேஷ் சிவனின் விளக்கம் நயன்தாராவின் தற்போதைய முழு ஃபோக்கஸ் குடும்பமும், சினிமாவும் மட்டுமே என்பதை வெட்டவெளிச்சமாக்கி உள்ளது.
எது எப்படியோ, இப்போதைக்கு லேடி சூப்பர் ஸ்டாரின் கவனம் கேமரா வெளிச்சத்தின் மீதே இருந்தாலும், எதிர்காலத்தில், அதாவது 2031ல் அவரது அரசியல் களம் சாத்தியமாகுமா? என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
சமூகப் பிரச்சினைகளுக்குக் குரல் கொடுப்பதும், பெண் உரிமை பேசுவதும் ஒரு நடிகையின் சமூகப் பொறுப்பாக இருக்கலாம். ஆனால், அதை தேர்தல் அரசியலோடு முடிச்சுப்போட்டுப் பார்கத் துவங்கி உள்ளனர்.
விக்னேஷ் சிவன் கூறியது போல், குடும்ப வாழ்க்கையை ரசித்து அனுபவித்து வரும் நயன்தாரா, வருங்காலத்தில் அரசியல் களத்தில் அடியெடுத்து வைப்பாரா? அல்லது திரை அரியணையிலேயே அமர்ந்திருப்பாரா? என்பதை காலம் மட்டுமே தீர்மானிக்கும்.