பிரான்ஸ் போராட்டத்தில் வன்முறை 
news

பிரான்ஸ் போராட்டத்தில் வன்முறை

பிரான்ஸ் நாட்டில், கல்வித்துறைக்கான நிதிக் குறைப்பைக் கண்டித்து நடைபெற்ற போராட்டங்கள், வன்முறையாக மாறியுள்ளன.

Azhagiri Arumugam

பிரான்ஸ் நாட்டில், அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவு மற்றும் கல்வித்துறைக்கான நிதிக் குறைப்பைக் கண்டித்து நடைபெற்ற போராட்டங்கள், வன்முறையாக மாறியுள்ளன.

நகராட்சி கட்டடங்கள் தீக்கிரையாக்கப்பட்டதுடன், வணிக நிறுவனங்களும் சூறையாடப்பட்டுள்ள நிலையில், வன்முறையில் ஈடுபட்டதாக சுமார் 1,200க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மாணவர்களின் கல்விக் கோரிக்கைகளுடன் தொடங்கிய போராட்டம், அரசுக்கு எதிரான போராட்டமாக மாறியது ஏன்? பிரான்சில் என்னதான் நடக்கிறது?

போராட்டம் வன்முறையானது...
வாழ்க்கைச் செலவு உயர்வு, எரிபொருள் விலை அதிகரிப்பு, கல்வித்துறையில் ஆசிரியர் பற்றாக்குறை, மோசமான பள்ளிச் சூழல்... இந்தக் கோரிக்கைகளுடன் தொடங்கிய போராட்டம், பிரான்ஸ் நாட்டின் பல்வேறு நகரங்களில் வன்முறையாக வெடித்துள்ளது.

பிரான்ஸ்
நாட்டின் கல்வித்துறையில் நிலவும் சீர்கேடுகளை கண்டித்து கடந்த செப்டம்பர் மாதம் பள்ளி மாணவர்கள் போராட்டத்தில் குதித்த நிலையில், அவர்களுக்கு இடதுசாரி அமைப்புகள் ஆதரவளித்தன.

மாணவர் போராட்டம், மக்கள் போராட்டம்
தொடக்கத்தில், அரசுக்கு எதிரான மாணவர்கள் போராட்டம் பின்னர், விலைவாசி உயர்வுக்கு எதிரான மக்கள் போராட்டமாக மாறியது. நாட்டின் பல்வேறு நகரங்களில் சனிக்கிழமை நடைபெற்ற போராட்டங்களில், பிரான்சில் வசித்து வரும் புலம் பெயர்ந்தோரும் பெருமளவில் கலந்து கொண்டனர்.

அரசுக்கு எதிரான பேரணி பெரும்பாலான இடங்களில் அமைதியாக நடந்தபோதும், பாரிஸ், மார்செய், நீஸ், நாந்த், போர்டோ, லிமோஜ், லில், துலூஸ் மற்றும் ஸ்ட்ராஸ்பூர் உள்ளிட்ட நகரங்களில் வன்முறையாக வெடித்தன. போராட்டக்காரர்கள் அரசுக் கட்டடங்களைத் தாக்கியதுடன், வணிக வளாகங்கள் மற்றும் பல்பொருள் அங்காடிகளை சூறையாடி உள்ளனர்.

பொருட்கள் சூறை, கொள்ளை
தலைநகர் பாரீசில், முககவசம் மற்றும் கையுறைகளை அணிந்திருந்த வன்முறை கும்பல், முதலில் கண்காணிப்பு கேமராக்களின் இணைப்பைத் துண்டித்துவிட்டு, பின்னர் கடைகளின் கண்ணாடிகளை உடைத்து உள்ளே புகுந்து பொருள்களை சூறையாடியதுடன், தேவையானவற்றை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

பிரான்சின் லிமோஜ் நகரில் 140 ஆண்டுகளுக்கும் மேலான பழமையான நகராட்சி கட்டடத்திற்கு, முககவசம் அணிந்த போராட்டக்காரர்கள் உள்ளே புகுந்து தீ வைத்ததில் பெருமளவில் சேதமடைந்தது.

மார்செய் மற்றும் லில் நகரங்களிலும் உள்ளாட்சி நிர்வாகக் கட்டடங்களுக்குள் புகுந்த போராட்டக்காரர்கள், அங்கிருந்த பொருட்களை சேதப்படுத்தியுள்ளனர்.

போர்டோ நகரில் காவல்துறை வளாகம் சேதப்படுத்தப்பட்ட நிலையில், லியோன் நகரில் சுற்றுலா அலுவலகத்திற்கும் போராட்டக்காரர்கள் தீ வைத்துள்ளனர்.

பிரதமர் எச்சரிக்கை
’வன்முறையை ஒருபோதும் அனுமதிக்க முடியாது,’ என பிரதமர் செபாஸ்டியன் லெகோர்னு எச்சரித்துள்ளார். ’தாக்குதல்களில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,’ என பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோன் உறுதியளித்துள்ளார்.

நாடு முழுவதும் சுமார் 5 லட்சத்து 50 ஆயிரம் பேர் போராட்டத்தில் பங்கேற்றதாகவும், வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டதாக, இதுவரை ஆயிரத்து 200 போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், 150க்கும் மேற்பட்ட காவலர்கள் காயமடைந்துள்ளதாகவும் பிரான்ஸ் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தில்...
வாழ்க்கைச் செலவு உயர்வு மற்றும் கல்விச் செலவுகள் தொடர்பான போராட்டங்கள் ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள பெல்ஜியம், போர்ச்சுகல், இத்தாலி உள்ளிட்ட நாடுகளிலும் நடைபெற்றுள்ளன.

மாணவர்களின் கல்வி வசதிக் கோரிக்கைகளுடன் தொடங்கிய எதிர்ப்பு, தற்போது வாழ்க்கைச் செலவு, பொருளாதார ஏற்றத்தாழ்வு மற்றும் காவல்துறை நடவடிக்கைகள் தொடர்பான போராட்டமாக விரிவடைந்துள்ளது.

ஒருபுறம் போராட்டக்காரர்களின் கோரிக்கைகள், மறுபுறம் வன்முறைக்கு எதிரான அரசின் கடும் எச்சரிக்கை என பிரான்சில் பதற்றம் நீடிக்கும் நிலையில், இந்தப் போராட்டம் அடுத்தகட்டமாக எந்தத் திசையில் செல்லும் என்பது உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.