இந்திய வரலாற்றிலேயே...
இதுதொடர்பாக, எதிர்க்கட்சித்தலைவர் உதயநிதி ஸ்டாலின் கூறி இருப்பதாவது;
பெண் ஐஏஎஸ் அதிகாரிக்கு கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ் தொடர்ந்து ஆபாச குறுஞ்செய்தி அனுப்பி உள்ளார். இந்திய வரலாற்றிலேயே இப்படியொரு கேவலமான விஷயம் நடந்ததில்லை. இதுமட்டுமல்லாது, குடித்துவிட்டு ஆட்சியர் வீட்டுக்கே சென்று ரகளை செய்திருக்கிறார். இந்தச் சம்பவம் ஜூலை மாதமே நடந்துள்ளது.
இது, தேனிலவுக் காலம்...
முதல் 6 மாதங்கள், தவெக ஆட்சிக்கு ‘ஹனிமூன் பீரியட்’ என்பார்கள். இந்த ஆட்சியில் உள்ள அனைவரும் அதை அப்படியே புரிந்து கொண்டனர் போல. ஜூலை 31ஆம் தேதி இந்த சம்பவம் நடந்துள்ளது. அப்போதே தலைமைச் செயலாளரிடம் பாதிக்கப்பட்ட ஆட்சியரும் புகார் அளித்திருக்கிறார்.
ஆனால், அவரோ வேறு மாவட்டத்துக்கு மாறுதல் வாங்கிச் செல்ல கூறி உள்ளார். 116 நாட்கள் கடந்து தான் இந்த சம்பவத்தில் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு உள்ளது. அதுவும் நீதிமன்ற தலையீட்டுக்குப் பின்னர். அப்படியென்றால் அதுவரை முதல்வர் தூங்கிக் கொண்டிருந்தாரா?
116 நாட்கள் அமைதி ஏன்?
இதனிடையே ‘தவெக வர்ச்சுவல் வாரியர்ஸ்’ இணையவெளியில் பாதிக்கப்பட்ட நபரையே தாக்கிக் கொண்டிருக்கின்றனர். டிஜிபியிடம் கொடுத்த புகாரில், மாவட்ட ஆட்சியரிடம் தலைமைச் செயலாளர் சமரசம் பேசியிருக்கிறார். அதனால் அவரையும் குற்றவாளியாக சேர்க்க வேண்டும் என்று கோரி உள்ளேன்.
தலைமைச் செயலாளர், ஆட்சியர் புகார் குறித்து முதல்வரிடம் சொன்னாரா இல்லையா? அப்படிச் சொல்லியிருந்தால் முதல்வர் ஏன் 116 நாட்கள் அமைதியாக இருக்கிறார்?
அமைச்சர் என்ன செய்யப்போகிறார்?
இப்படிப்பட்ட சம்பவமே நடக்கவில்லை என்று அமைச்சர் ஒருவர் கூறினார். இப்போது, அவர் என்ன செய்யப்போகிறார்?
இந்தச் சம்பவம் மட்டுமல்லாது, இந்த ஆட்சியில் இன்னொன்றும் நடந்தது. துணை சபாநாயகர், மனு கொடுக்க வந்தவரை அடித்தார். அந்தச் சம்பவத்தின் மீது 16 நாட்கள் ஆகியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இனியாவது, ‘தூங்குமூஞ்சி முதல்வர்’ எழுந்து சட்டம்-ஒழுங்கு மீறல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். எம்எல்ஏ, துணை சபாநாயகரை கைது செய்ய வேண்டும்.
ஆனால், இந்த அரசு இவர்களைக் காப்பாற்றுவதில் தான் குறியாக இருக்கிறது எனத் தோன்றுகிறது. இந்த அரசின் மீது எங்களுக்கு நம்பிக்கையில்லை. அதனால், இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும்.
இந்த மாதிரி ஒரு குற்றச்சாட்டு இந்தியாவில் எந்த மாநிலத்திலேயே நடந்துள்ளதா? மாற்றம் கொண்டு வருவேன் என்றார்களே! இதுதான் அவர்கள் கொண்டு வந்த மாற்றமா?
இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
வீடியோவில் காணலாம்