இந்த ஆண்டின் தொடக்கத்தில் தங்கம் அடைந்த வரலாறு காணாத உயரத்தையும், அதன்பிறகு ஏற்பட்ட ஏற்ற, இறக்கங்களையும் கணக்கில் எடுத்துக்கொண்டால், தற்போதைய சரிவு தங்கச் சந்தையில் ஏற்பட்டுள்ள முக்கியமான திருப்பமாகவே பார்க்கப்படுகிறது.
இதன் பொருள் தங்கத்தின் விலை தொடர்ந்து சரிந்து கொண்டே இருக்கும் என்பதா? அல்லது மிக வேகமாக உயர்ந்த தங்கம் இப்போது தனது விலையைச் சரிசெய்து கொண்டிருக்கிறதா?
2026ஆம் ஆண்டு தங்கத்துக்கு முன்னெப்போதும் இல்லாத ஏற்றத்தைக் கொடுத்த ஆண்டாக அமைந்தது. ஜனவரி 29ஆம் தேதி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் ஒரு கிராம் விலை ரூ.16,800 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.1,34,400 ஆகவும் உயர்ந்து வரலாற்று உச்சத்தைத் தொட்டது. ஜனவரி மாத உச்சத்திலிருந்து படிப்படியாகச் சரிந்து வந்திருக்கிறது.
நவம்பர் மாதத்தில் இந்தச் சரிவு மேலும் வேகமடைந்துள்ளது. கடந்த 13 நாட்களில் மட்டும் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.9,360 குறைந்திருக்கிறது. ஏறத்தாழ 11 மாதங்களுக்குப் பிறகு தங்கம் மீண்டும் ஒரு லட்சம் ரூபாய்க்குக் கீழே வந்திருக்கிறது. நவம்பர் 18ஆம் தேதி நிலவரப்படி ரூ.97,720 என்ற நிலைக்கு வந்ததன் மூலம் ஒரு சவரனுக்கு ரூ.36,680 குறைந்துள்ளது. அதாவது, இந்த ஆண்டின் உச்ச விலையுடன் ஒப்பிடும்போது சுமார் 27 சதவீதம் சரிவு ஏற்பட்டிருக்கிறது.
இன்றைய தங்கம் விலையைக் காண...
முதலீட்டாளர்களின் பதற்றமான விற்பனையால் தங்கம் விலை சரிவு
தற்போதைய சரிவுக்கான முக்கியக் காரணம் சர்வதேசத் தங்கச் சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள். நவம்பர் 18ஆம் தேதி சர்வதேசச் சந்தையில் ஏறத்தாழ 2 சதவீதம் வீழ்ச்சி ஏற்பட்டு, ஓராண்டில் இல்லாத அளவுக்கு குறைந்த விலையைத் தங்கம் எட்டியுள்ளது. இதற்குப் பின்னால் அமெரிக்க டாலரின் வலுவான நிலை, அமெரிக்க வட்டி விகிதம் உயரக்கூடும் என்ற எதிர்பார்ப்பு உள்ளிட்ட மூன்று முக்கியக் காரணங்கள் உள்ளன. மூன்றாவது முக்கிய காரணம், முதலீட்டாளர்களின் பதற்றமான விற்பனை.
தங்கத்தின் விலை வேகமாகக் குறையத் தொடங்கும்போது, ஏற்கெனவே அதிக விலைக்கு வாங்கிய முதலீட்டாளர்கள் மேலும் இழப்பு ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காக விற்பனை செய்யலாம். சில முதலீட்டாளர்கள் பிற முதலீடுகளில் ஏற்பட்ட இழப்புகளைச் சமாளிக்கவும் தங்கத்தை விற்றுப் பணமாக்குகின்றனர். இதுபோன்ற விற்பனை அதிகரிக்கும்போது விலை மேலும் குறைகிறது. விலை குறைவதைப் பார்த்து மற்றவர்களும் விற்பனை செய்வதால் சரிவு வேகம் பெறுகிறது.
இதுவும் தற்போதைய தங்கச் சந்தையின் அழுத்தத்துக்குக் காரணமாக இருக்கிறது. தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்துகொண்டே இருக்கும் என்ற எதிர்பார்ப்பில் கடன் வாங்கி முதலீடு செய்திருப்பவர்களுக்கு தற்போதைய சரிவு எச்சரிக்கை மணியாகும். தங்கம் பாதுகாப்பான முதலீடு என்று சொல்லப்பட்டாலும், குறுகிய காலத்தில் அதன் விலை பெருமளவு ஏற்ற இறக்கங்களுக்கு உள்ளாகும் என்பதை இந்த ஆண்டு சந்தை நிரூபித்திருக்கிறது.
தங்கத்தின் விலை இன்னும் குறையுமா? இல்லை மீண்டும் ஏறுமா?
தற்போதைய சர்வதேசச் சந்தை நிலவரங்களைப் பார்க்கும்போது, குறுகிய காலத்தில் தங்கத்தின் விலையில் மேலும் சரிவு ஏற்படுவதற்கான சூழல்கள் இருக்கின்றன. அமெரிக்காவில் வட்டி விகிதம் உயர்த்தப்பட்டால், டாலர் மேலும் வலுப்பெறலாம். இதனால் தங்கத்தின் மீதான முதலீட்டு ஆர்வம் குறையக்கூடும். சர்வதேசச் சந்தையில் தங்கம் மேலும் அழுத்தத்தைச் சந்திக்கலாம்.
ஏற்கெனவே தங்கத்தின் விலை உச்சத்திலிருந்து கணிசமாகக் குறைந்திருப்பதால், முதலீட்டாளர்களின் லாபப் பாதுகாப்பு நடவடிக்கைகளும் விற்பனையை அதிகரிக்கக்கூடும். சில சந்தை மதிப்பீடுகள் தற்போதைய விலையிலிருந்து மேலும் 4 முதல் 5 சதவீதம் வரை சரிவதற்கான சாத்தியத்தையும் சுட்டிக்காட்டுகின்றன. ஆனால், இதை உறுதியான முன்னறிவிப்பாக எடுத்துக்கொள்ள முடியாது.
அதேநேரத்தில், தங்கம் மீண்டும் விலை உயர்வதற்கான காரணிகளும் இருக்கின்றன.
உலக நாடுகளுக்கு இடையிலான போர், அரசியல் மோதல்கள், வர்த்தகப் பதற்றங்கள் அதிகரித்தால் பாதுகாப்பான முதலீடாகத் தங்கத்தை வாங்கும் ஆர்வம் மீண்டும் அதிகரிக்கலாம். பல்வேறு நாடுகளின் மத்திய வங்கிகள் தங்களுடைய அந்நியச் செலாவணி இருப்பில் தங்கத்தின் பங்கை அதிகரிக்க விரும்புகின்றன.
இந்தக் கொள்முதல் தங்கத்துக்கு நீண்டகால ஆதரவாக அமையலாம். எதிர்காலத்தில் அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தைக் குறைக்கும் நிலை ஏற்பட்டால், தங்கத்தின் மீதான முதலீட்டு ஆர்வம் அதிகரிக்கலாம். டாலரின் மதிப்பு குறைந்தால் சர்வதேசச் சந்தையில் தங்கத்துக்கான தேவை அதிகரிக்க வாய்ப்புள்ளது.
ஏறுமுகத்தில் இருந்த தங்கத்தின் விலையில் தற்காலிக இடைநிறுத்தமா?
இந்த ஆண்டின் தொடக்கத்தில் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்தபோது, இனி தங்கம் சாமானிய மக்களுக்கு எட்டாத பொருளாகிவிடுமோ? என்ற அச்சம் உருவானது. ஒரு சவரன் ரூ.1.34 லட்சத்தைத் தாண்டியது அந்த அச்சத்தை மேலும் அதிகரித்தது. ஆனால், இப்போது அதே தங்கம் ரூ.97,720 என்ற நிலைக்குச் சரிந்திருக்கிறது.
ஒரே ஆண்டில் இவ்வளவு பெரிய ஏற்றத்தையும் இறக்கத்தையும் சந்தித்திருப்பது தங்கச் சந்தையின் நிலையற்ற தன்மையை வெளிப்படுத்துகிறது.
தற்போதைய சரிவை தங்கத்தின் நீண்டகால மதிப்பிழப்பாகப் பார்ப்பதைவிட, மிக வேகமான விலை உயர்வுக்குப் பிறகு ஏற்பட்டுள்ள சந்தைத் திருத்தமாகப் பார்ப்பதே பொருத்தமானது. அதேநேரத்தில், சர்வதேச வட்டி விகிதச் சூழல் மாறும் வரை குறுகிய காலத்தில் ஏற்ற இறக்கங்கள் தொடரலாம்.
தங்கம் விலை சரிவுப் பாதையில் இறங்கியிருக்கிறது என்பது உண்மை. ஆனால், அதன் நீண்டகால ஏற்றப் பயணம் முடிந்துவிட்டது என்று சொல்வதற்கு இப்போதைக்கு போதுமான ஆதாரங்கள் இல்லை.
அடுத்த முக்கியமான திருப்பம் அமெரிக்க மத்திய வங்கியின் டிசம்பர் மாத வட்டி விகித முடிவாக இருக்கப்போகிறது. அந்த முடிவு தங்கத்தின் அடுத்தகட்டப் பயணம் எந்த திசையில் இருக்கும் என்பதைத் தீர்மானிக்கலாம்.