Also Watch
Read this
By: Fyrose Banu

குடும்பத் துன்புறுத்தல், நகை பறிப்பு மற்றும் சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புவதாக தவெக பெண் நிர்வாகி கரூர் எஸ்.பி.யிடம் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டம், கடவூர் வட்டம், களத்துப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் தனலட்சுமி. இவர் தமிழக வெற்றிக் கழகத்தின் பெண் நிர்வாகியாக இருந்து வருகிறார். தனலட்சுமி தனது குடும்பப் பிரச்சினை மற்றும் சமூக வலைதளங்களில் தன்னைப் பற்றி அவதூறாக சித்தரிப்பதாகக் கூறி, கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு
அளித்துள்ளார்.

அந்த மனுவில், ராஜலிங்கம் என்பவர் உடன் தனக்கு திருமணமாகி ஆறு ஆண்டுகள் ஆகியது, கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும், கணவர் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பதாகக் கூறி அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் தெரிவித்துள்ளார். மேலும், தனது மாமனார், மாமியார், கணவர் மற்றும் அருகில் உள்ள உறவினர்கள் உள்ளிட்டோர் தன்னை துன்புறுத்தியதாகவும், தன்னிடம் இருந்த ரூ.1.50 லட்சம் கடனை தானே செலுத்த வேண்டும் எனக் கூறி தொடர்ந்து தொந்தரவு செய்ததாகவும் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து, தன்னிடம் இருந்த மூன்று பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு, தன்னை தாக்கி வீட்டை விட்டு வெளியேற்றியதாகவும், இதனால் கடந்த ஆறு மாதங்களாக தாய் வீட்டில் வசித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். இந்நிலையில், தான் கட்சிப் பொறுப்பில் இருப்பதை பயன்படுத்தி, தன்னையும் கடவூர் தவெக தெற்கு ஒன்றிய பொறுப்பில் உள்ள ஒருவரையும் தொடர்புபடுத்தி சமூக வலைதளங்களில் தவறாக சித்தரித்து வருவதாகவும், தனக்கும் அந்த நபருக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என்றும் தனலட்சுமி புகார் மனுவில் தெரிவித்துள்ளார். இது முழுக்க முழுக்க தனது குடும்பப் பிரச்சினை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பாக ஏற்கனவே குளித்தலை மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்ததாகவும், அதன் அடிப்படையில் இரு தரப்பினரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து விசாரணை மேற்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார். அப்போது, இந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தை நாடி சட்டரீதியாக தீர்வு பெற்றுக் கொள்வதாக தான் எழுத்துப்பூர்வமாக தெரிவித்ததாகவும் தனலட்சுமி கூறியுள்ளார். குறிப்பாக தவெக பெண் நிர்வாகி கணவர் ராஜலிங்கம் என்பவர் மனைவி வேறு ஒரு நபருடன் தொடர்பில் இருப்பதாக கூறி கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பால்டாயில் குடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved