Also Watch
Read this
சமூக வலைதளங்களில் லட்சக்கணக்கான ஃபாலோயர்களை கொண்டு DREAM COUPLE என நெட்டிசன்களால் கொண்டாடப்பட்ட பிரபல கேரள இன்ஃப்ளூயன்சர் அகில் NRD - மேகா தம்பதியின் வாழ்க்கையில் நடந்துள்ள நிகழ்வுகள், தற்போது இணையதளங்களில் பெரும் விவாத பொருளாக மாறியிருக்கிறது.

திருமண நாளன்று...
"இனிமே எந்தப் பொண்ணையும் ஏறெடுத்தும் பார்க்கக் கூடாது," என திருமணத்தன்று மேகா கேட்ட இந்த கோரிக்கைக்கு, அகிலும் மனைவியின் தலைமேல் கைவைத்து, "சத்தியமா வேற எந்தப் பொண்ணையும் பார்க்க மாட்டேன்," என வாக்கு கொடுத்தார். அன்று இணையத்தில் வைரலாகி டிரீம் ஜோடி என்று கொண்டாடப்பட்ட அதே மேகா, இன்று கணவனுக்கு தெரியாமல் பஸ் டிரைவருடன் ஓடிப்போயிருக்கும் செய்தி, ஒட்டுமொத்த குடும்பத்தினரையும் அதிர்ச்சியில் உறைய வைத்திருக்கிறது.

ரசிகர் பட்டாளம்
ஆழப்புழா மாவட்டத்தை சேர்ந்த அகில் NRD, தனது நகைச்சுவை வீடியோக்கள் மூலம் கேரளம் மட்டுமின்றி தமிழகத்திலும் அதிக ரசிகர்களை பெற்றவர். சில மலையாள திரைப்படங்களிலும் நடித்துள்ள இவர், சமூக வலைதளங்கள் மூலம் மாதம் 10 லட்சம் ரூபாய்க்கும் மேல் வருமானம் ஈட்டி வந்ததாக கூறப்படுகிறது.

ஒரே தெருவில் வசித்து வந்த அகிலும், மேகாவும் காதலித்து வந்த நிலையில், கடந்த 2024ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இரு வீட்டார் சம்மதத்துடன் இவர்களது திருமணம் நடைபெற்றது. அதன்பிறகு இருவரும் இணைந்து பல வீடியோக்களை பதிவிட்டு வந்தனர்.

மேகாவை காணவில்லை...
இந்த சூழலில் தான், இன்ஸ்டாகிராமில் டிரீம் ஜோடி என அழைக்கப்பட்ட இவர்களின் வாழ்க்கையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு எதிர்பாராத திருப்பம் ஏற்பட்டது. வீட்டிலிருந்த மேகாவை காணவில்லை என அகில் காவல்நிலையத்தில் புகாரளித்ததை தொடர்ந்து, போலீசார் அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தபோது அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின.

நள்ளிரவு நேரத்தில், மேகா வீட்டிலிருந்த பணம், நகைகளை அள்ளிக்கொண்டு, பஸ் டிரைவருடன் வீட்டைவிட்டு வெளியேறியது தெரிய வந்தது.

பரஸ்பரம் புகார்கள்...
சட்டப்பூர்வமாக விவாகரத்து பெறாமல், கணவருக்கு தெரியாமல் நள்ளிரவில் வீட்டைவிட்டு வெளியேறிய இச்சம்பவம் கேரள மக்கள் மத்தியிலும், இன்ஸ்டா வாசிகளும் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இதனிடையே, இந்த விவகாரம் குறித்து பல்வேறு தகவல்கள் பரவி வருகின்றன.

அகிலுக்கு பல பெண்களுடன் தொடர்பு இருந்ததாகவும், அதனால்தான் வீட்டைவிட்டு வெளியேறியதாகவும் மேகா வீடியோ ஒன்றை வெளியிட்டு பின்னர் நீக்கியதாக கூறப்படுகிறது. மறுபுறம், அந்த பஸ் டிரைவருக்கு சமீபத்தில் அரசுப் பணி கிடைத்ததாகவும், அவருக்கு ஏற்கெனவே சில பெண்களுடன் தொடர்பு இருப்பதாக புகார்கள் இருந்ததாகவும் சமூக வலைதளங்களில் தகவல்கள் உலா வருகின்றன.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved