Also Watch
Read this
By: Fyrose Banu

சுதந்திர தினத்தை முன்னிட்டு மாநிலத்தின் அனைத்து ஊராட்சிகளிலும் இன்று கிராம சபை கூட்டம் நடைபெற்றது. அரியலூர் மாவட்டம் மணகெதி ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் ஆட்சியர் மிருணாளினி, மாவட்ட திட்ட இயக்குனர் சங்கமித்திரை உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மாவட்ட ஆட்சியர் கிராம சபை கூட்டத்திற்கு வருவதற்கு முன்பாகவே ஊராட்சி செயலர் கிராமத்தில் நடந்து முடிந்த பணிகள் குறித்து, மைக் மூலமாக பொதுமக்களுக்கு வாசித்துக் காட்டினார். அதற்கு பொதுமக்களில் சிலர் ஊராட்சி செயலருக்கு கடும் எதிர்ப்பை கிளப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஊராட்சியில் குடிநீர் இணைப்பு மூலமாக வீடுகளுக்கு வழங்கப்படும் தண்ணீரை மின் மோட்டார் வைத்து ஒரு சிலர் புரிந்து கொள்வதால் தங்களுக்கு போதிய அளவில் குடிநீர் வருவதில்லை எனவும் குற்றம் சாட்டினர்.

அதேபோன்று குடிநீர் தொட்டியை சுத்தம் செய்வது தொடர்பாகவும் கேள்வி எழுப்பியதால், கிராமசபை கூட்டம் துவங்கும் முன்னரே அந்த இடம் கூச்சல் குழப்பமாக மாறியது. இதனையடுத்து ஆட்சியர் ந.மிருணாளினி, மாவட்ட திட்ட இயக்குனர் சங்கமித்ரா ஆகியோர் வருகை தந்து கிராம சபை கூட்டத்தை துவங்கினர். பொதுமக்களின் தேவைகளை கேட்டறிந்த ஆட்சியர் மிருணாளினி, பின்னர் நீங்கள் தந்துள்ள மனுக்களையும், குறைகளையும் கேட்டறிந்துள்ளோம். அதற்கு உரிய நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும்.

பொதுமக்கள் தங்கள் வீடுகளில் மின் மோட்டார் மூலம், ஊராட்சி வழங்கும் குடிநீரை உறிஞ்சி எடுத்தால் தாங்களாகவே முன்வந்து மின் மோட்டார்களை அகற்றிக் கொள்ள வேண்டும். இல்லையெனில் ஊராட்சி நிர்வாகம் சார்பில் வீடுகளில் முறைகேடாக பயன்படுத்தும் மின் மோட்டார்களை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் தங்களது பணியை மேற்கொள்ள வரும் அரசு அலுவலர்களுக்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்காது ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் எனவும் பொது மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved