Also Watch
Read this
சமூக வலைதளங்களை சாக்கடையாக்கி, சப்ஸ்கிரிப்ஷன் என்ற பெயரில் ஆபாச வியாபாரம் செய்துவந்த நடிகை தர்ஷா குப்தா, திருச்சி சாதனா உட்பட 12 பேர் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
இளைஞர்களையும், சிறார்களையும் குறிவைத்து சல்லாப ராஜ்ஜியம் நடத்தி லட்சக்கணக்கில் கல்லா கட்டிய இந்த கும்பல் மீது, ஜாமீனில் வர முடியாத ஐடி ஆக்ட், போக்சோ சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது இணைய உலகையே அதிர வைத்திருக்கிறது.

சமூக வலை தளங்களில்...
இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் போட்டு நாலு பேருக்கு நல்லது சொல்வார்கள் என்று பார்த்தால், ’சப்ஸ்கிரைப் பண்ணுங்க மக்களே’ என காசு வாங்கிவிட்டு அந்தரங்க ஆட்டம் போட்ட இன்ஃப்ளூயன்ஸர்கள் மீது பாய்ந்துள்ளது சைபர் கிரைமின் அதிரடி ஆக்சன்.

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு...
’இன்ஸ்டாகிராம், யூடியூப் போன்ற சமூக வலைதளங்களில், எக்ஸ்க்ளூசிவ் கண்டெண்ட் தருகிறோம்,’ என்ற பெயரில் சப்ஸ்கிரிப்ஷன் வசதியை தவறாக பயன்படுத்தி சில பிரபலங்கள் ஆபாசத்தின் எல்லைக்கே சென்றுள்ளனர்.

மாத மாதம் 200,300 என கட்டணத்தை வாங்கிவிட்டு, அந்தரங்க வீடியோக்களை அனுப்புவது, கண்டமேனிக்கு ஆபாசமாக பேசுவது என இணையத்தில் சல்லாப ராஜ்ஜியம் நடத்தி, உழைக்காமலே ஈஸியாக கலெக்சன் பார்த்து லட்சக்கணக்கில் கல்லா கட்டியிருக்கிறார்கள் இந்த டிஜிட்டல் தில்லாலங்கடிகள்.

இவர்களின் இந்த தில்லாலங்கடி வலையில், சிக்கி சீரழிந்து வருவது என்னவோ 18 வயதுக்குட்பட்ட பள்ளி, கல்லூரி மாணவர்கள் என்பதுதான் சோகமான நிதர்சனம்.

12 பேர் மீது வழக்கு
இவர்களின் இந்த கட்டண கொள்ளைக்கும், ஆபாச அத்துமீறல்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்க முடிவெடுத்த சேலம் மாவட்டம் வலசையூரை சேர்ந்த வழக்கறிஞர் அஜித் சாக்கோ, மாநகர சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் ஒன்றை தட்டினார்.

’இளைஞர்களோட மனதை பாழாக்கும் இந்த சில்லறை வேலையை நிறுத்தி, இவங்களை உள்ள தள்ளுங்க,’ என அவர் கொடுத்த புகாரையடுத்து, சைபர் கிரைம் காவல்துறையும் விசாரணையை முடுக்கி விட்டிருக்கிறது.

சோஷியல் மீடியாவில் பெரிய பிரபலம் எனப் பந்தா காட்டிக் கொண்டிருந்த திருச்சி சாதனா, நடிகை தர்ஷா குப்தா, சூர்யபிரபா, ஹனி சென்னை, அபிநயா சித்ரா என அம்புட்டு பேரின் ஜாதகத்தையும் தூக்கி, மொத்தம் 12 பேர் மீது வழக்கு பாய்ந்துள்ளது.

பாய்ந்த வழக்குகள்
’காசு கொடுத்து சப்ஸ்கிரைப் பண்ணவன் சின்ன பையன்னு எங்களுக்கு தெரியாதே,’ என்று, இனி எந்த சப்பைக்கட்டும் கட்டி தப்பிக்க முடியாது என சைபர் கிரைம் போலீசார் மொறுமொறுவென வார்னிங் கொடுத்து இருக்கிறார்களாம்.

இணையத்தில் ஆபாசத்தை விற்று பிழைப்பு நடத்தியதற்காக தகவல் தொழில்நுட்ப சட்டம் 67 மற்றும் 67B என ஜாமீனே கிடைக்காத பிரிவுகள், சிறார்களுக்கு பாலியல் உணர்வைத் தூண்டும் வகையிலான செயல்களுக்காக போக்சோ சட்டத்தின் 11,12வது பிரிவுகள், பொது வெளியில் ஆபாசமாக நடந்துகொண்டதற்காக புதிய குற்றவியல் சட்டமான பாரதிய நியாய சன்ஹிதா-வின் கீழ் வழக்குகள் பாய்ந்துள்ளன.

கம்பி எண்ண வைக்கும் பாடம்
’கண்டெண்ட் போடுகிறோம்,’ என கண்டமேனிக்கு ஆட்டம் போட்ட இந்த 12 பேரின் அக்கவுண்ட்களையும் மொத்தமாக தூக்கி லாக் பண்ணுங்கள் என இன்ஸ்டாகிராம், யூடியூப் கம்பெனிகளுக்கு சேலம் சைபர் கிரைம் போலீசார் மின்னஞ்சல் பறக்க விட்டுள்ளனர்.

அடுத்த கட்டமாக, இந்த ’சல்லாப பார்ட்டி'களைக் கூண்டோடு தூக்கி ஜெயிலில் அடைக்க போலீஸ் தீவிரமாக வலைவீசி வருகிறது. சமூக வலைதளங்களில் லைக்கிற்கும், ரீல்ஸிற்கும், சில்லறை வசூலிற்கும் ஆபாசத்தை ஆயுதமாக எடுத்த இவர்களுக்கு, போலீசாரின் இந்த ஆக்சன் கம்பி எண்ண வைக்கும் பாடமாக அமையும் என்பதில் சந்தேகமே இல்லை.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved