Also Watch
Read this
திமுக ஆட்சியில, கோலோச்சுன உதயமான ஐஏஎஸ் அதிகாரி இப்போ முதல்வருக்கு நெருக்கமாயிட்டாராம், பவர்ஃபுல்லான அதிகாரியா சீக்கிரமே கம் பேக் கொடுப்பாருன்னு கோட்டையில பேசிக்கறாங்க.
திமுக ஆட்சியில கோட்டையில கோலோச்சுன அந்த உதயமான ஐஏஎஸ் அதிகாரியே, ஒரு கட்டத்துல திமுக ஆட்சி மேல எழுந்த அதிருப்திக்கும் காரணமா இருந்தாருன்னு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுச்சு. ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு முக்கியமான துறையில அவருக்கு பதவி கொடுக்கப்பட்டாலும், போன ஆட்சி மாதிரி நினைச்சத சாதிக்குற அளவுக்கான பெரிய லாபியெல்லாம் இப்போ அவர்கிட்ட இல்லை. இந்த சூழ்நிலையில தவெக கூட்டணியில இருக்கற எழுத்தாளர் எம்.பி. மற்றும் ஒரு என்.ஜி.ஓ அமைப்பு மூலமா முதல்வர் விஜய்க்கு ரொம்ப நெருக்கமானவரா மாறிட்டாராம்.

குறிப்பா, பரந்தூர் விமான நிலைய விவகாரத்துல தவெகவோட கொள்கை முடிவை செயல்படுத்த பல ஐடியாக்களை முதல்வருக்கு கொடுத்ததே இந்த அதிகாரிதானாம். விமான நிலையத்துக்கான மாற்று இடத்தைப் பத்துன விவரங்களையும், திமுக ஆட்சியில பரந்தூர் விமான நிலையம் கொண்டு வந்ததுக்குப் பின்னால் இருந்த அரசியலையும், இப்போ விமான நிலைய ரத்துக்கு திமுக எழுப்புற கேள்விகளுக்கு எந்த மாதிரியான பதில்களை அமைச்சர்கள் சொல்லணும்ங்கறதையும் ஒரு ரிப்போர்ட்டாவே தயார் செஞ்சு முதல்வர்ட்ட கொடுத்திருக்காராம். இப்போ எந்த நேரத்திலும் முதல்வர்கூட பேசக் கூடிய அளவுக்கு விஜய் கேம்ப்ல விவிஐபியா மாறிட்டாராம்.

போலீஸ் ஸ்டேஷன்ல இருக்கற ரிசப்ஷனிஸ்ட் எல்லாம் இன்ஸ்பெக்டர்களா மாறி அதிகாரத்த கையில எடுத்துக்கிட்டதுதான் காக்கி வட்டாரத்தோட ஹாட் டாபிக்கா இருக்கு.
தமிழ்நாடு முழுக்க இருக்கற காவல்நிலையங்கள்ல திமுக ஆட்சியில வரவேற்பாளர்களா டேட்டா எண்ட்ரி ஆபரேட்டர்களை நிர்வாகப் பணியாளர்களா நியமிச்சது காவல்துறை. இவங்க வேலை என்னன்னா புகார் கொடுக்க வர்றவங்களை வரவேத்து, ஸ்டேஷன்ல இருக்கற சம்பந்தப்பட்டவங்ககிட்ட அனுப்பி வைக்குறதும், அவங்களப் பத்துன விவரங்களை பதிவு செய்றதும்தான். ஆனா இப்படி அப்பாயிண்ட் செய்யப்பட்ட ரிசப்ஷனிஸ்ட் டியூட்டியில சேர்றப்போ எந்த ஸ்டேஷன்ல இருந்தாங்களோ அதே ஸ்டேஷன்லயே மூன்றரை வருஷத்துக்கு மேல இருக்காங்களாம். குறிப்பா சென்னையில யாரையுமே மாத்தலையாம்.

ஒரு ஸ்டேஷனோட செயல்பாடுகள், ஸ்டேஷன் லிமிட்டுக்குள்ள நடக்குற குற்ற சம்பவங்கள்ன்னு எல்லாத்தையும் ஸ்டடி செஞ்ச இவங்கள்ல பலர், இப்போ ஒரு இன்ஸ்பெக்டராவே மாறிட்டாங்களாம். பல ஸ்டேஷன்கள்ல இவங்களே புகார் கொடுக்க வர்றவங்களை விசாரிக்கத் துவங்கி கல்லா கட்டவும் ஆரம்பிச்சுட்டாங்களாம். இதுல இன்னும் ஒரு படி மேலே போன அரக்கோணம் ஸ்டேஷன் ரிசப்ஷனிஸ்ட் பாஸ்போர்ட் வெரிஃபிகேஷனுக்காக லஞ்சம் வாங்கி லஞ்ச ஒழிப்புத் துறையால கைதும் செய்யப்பட்டிருக்காரு. போலீஸ்காரங்கள மாதிரி இவங்களையும் டிரான்ஸ்ஃபர் செய்றதுதான் இந்தப்பிரச்னைக்கு தீர்வா இருக்கும்னு காக்கி வட்டாரங்கள்ல பேசிக்கிறாங்க.

சட்டமன்றத்துல தவெக அமைச்சர்களுக்கு முன்னால திமுக எம்.எல்.ஏ.க்கள் வளைஞ்சு நெளிஞ்சு பேசுனதுக்கு திமுக செயற்குழுவுல விழுந்த டோஸுக்கு பிறகு பழைய மாதிரி ஆக்ரோஷமான எதிர்கட்சியா திமுக மாறியிருக்காம்.
சட்டமன்றத்துல தவெக அமைச்சர்களை மாமன் மச்சான்னு திமுக எம்.எல்.ஏ.க்கள் முறைவெச்சுப்பேசியும், எங்க குடும்பத்து மாப்பிள்ளைன்னு ஐஸ் வெச்சும் பேசுனது திமுக தொண்டர்களை கொதிக்க வெச்சிருக்கு. இது கட்சித் தலைமைக்கு புகார்களா பறக்க, அறிவாலயத்துல தேர்தல் தோல்விக்குப் பிறகு நடந்த செயற்குழு கூட்டத்துல ஸ்டாலினும், துரைமுருகனும் எம்.எல்.ஏ.க்களுக்கு செம டோஸ் விட்டாங்களாம்.

வசந்தம் கார்த்திகேயன், பூண்டி கலைவாணன், முன்னாள் அமைச்சர்கள் எ.வ.வேலு, கே.என்.நேரு உள்ளிட்டவங்க வளைஞ்சு நெளிஞ்சு பேசுனதப்பத்தி செயற்குழுவுல துரைமுருகன் நக்கலாவும், சீரியஸாவும் பேச, அதுல இருந்து ஸ்டாலினும் எல்லா எம்.எல்.ஏ.க்களையும் ஒருபிடிபிடிக்க இப்போ சட்டமன்றத்துல திமுக எம்.எல்.ஏ.க்கள் ஆக்ரோஷமா பழைய திமுகவ தவெகவுக்கு ஞாபகப்படுத்தத் துவங்கியிருக்காங்க. குறிப்பா அமைச்சர்களோட ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் சபையையே ஸ்தம்பிக்கச் செய்ற அளவுக்கு கூச்சல் போட்டு இருக்கையில இருந்து எழுந்து டஃப் கொடுக்க ஆரம்பிச்சிருக்காங்க. திமுக எம்.எல்.ஏ.க்கள் சூடாகுறதை தெரிஞ்சுக்கிட்ட தவெக அமைச்சர்களும் ஊழல், பினாமின்னு வேற லெவல்ல வம்புக்கிழுக்க சபையே போர்க்களமா மாறத் துவங்கியிருக்கு.

தவெகவின் முதல் டார்கெட் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜிதான் என்றாலும் எ.வ.வேலு மீதான ஆதாரங்களையும் திரட்ட ஆதவ் அர்ஜூனாவுக்கு முதல்வர் அலுவலகம் அசைன்மெண்ட் கொடுத்திருக்காம்.
முன்னாள் பொதுப்பணித்துறை அமைச்சர் வேலுவுக்கு எதிரான ஊழல் ஆதாரங்களை திரட்டும் வேலைகளில் இன்னாள் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் தீவிரம் காட்டி வருகிறாராம், நந்தனம் சைதாப்பேட்டை மேம்பால டெண்டர் முதல் திருவண்ணாமலை மாவட்டத்தில் நடந்திருக்கும் அரசு திட்டங்கள் வரை தோண்டத் துவங்கி இருக்கிறாராம்,

திருவண்ணாமலை மாவட்ட பொறுப்பு அமைச்சராகவும் இருக்கும் ஆதவ். குறிப்பாக சட்டத்தின் முன்பு சரியான ஆதாரங்களை சமர்ப்பிக்கும் பணிகள் வேகமெடுத்திருக்காம். சி.எம் டேபிளில் இருக்கும் முக்கியமான ஃபைல்களில் பொதுப்பணித்துறை ஃபைலும் இருக்காம்.

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved