Also Watch
Read this
By: Manigandan Raja

நாகப்பட்டினம் மாவட்டம், வாய்மேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தானிக்கோட்டகம் சோதனைச் சாவடி அருகே, வாய்மேடு காவல் நிலையம் ஆய்வாளர் பாரதிதாசனுக்கு கிடைத்த
ரகசிய தகவலின் அடிப்படையில் வாய்மேடு காவல் நிலைய போலீசார் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, ஆந்திராவிலிருந்து இலங்கைக்கு கடத்திச் செல்லும் நோக்கில் கொண்டு வரப்பட்ட சுமார் ரூ.60 லட்சம் மதிப்பிலான 120 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட 2 நான்கு சக்கர வாகனங்கள், 6 செல்போன்கள் மற்றும் 2 மோடம்கள் கைப்பற்றப்பட்டன.

இச்சம்பவம் தொடர்பாக முத்துபேட்டையை சேர்ந்த சுதாகர், குமிழிப்பூண்டியை சேர்ந்த ஜெகன், தானிக்கோட்டகத்தை சேர்ந்த சக்திகுமார், வாய்மேடுவை சேர்ந்த அருண்பாண்டியன், பூபதி, கரூரை சேர்ந்த சந்தோஷ்குமார் ஆகிய 6 நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் வாய்மேடு பகுதியைச் சேர்ந்த அருண்பாண்டியன் தமிழக வெற்றிக் கழகத்தின் வேதராண்யம் வடக்கு ஒன்றிய செயலாளராக இருந்து வந்துள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதம் சாராயம் கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட அருண்பாண்டியன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில் தற்போது கஞ்சா கடத்தலில் கைது செய்யப்பட்டு
சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் தற்போது கட்சி அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பதவிகளில் இருந்தும் நீக்கப்படுவதாக மாவட்ட செயலாளர் சுகுமார் அறிக்கை வெளியிட்டுள்ளார். கஞ்சா கடத்திய தவெக ஒன்றிய செயலாளர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டது கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved