Also Watch
Read this
மதுரையில் தனியார் கடை திறப்பு விழாவிற்கு வந்த நடிகை கயாடு லோஹரை காண எக்கச்சக்க இளைஞர்கள் கூட்டம் முண்டியடித்தது. காரில் இருந்து இறங்கிய கயாடு லோஹரும், இளைஞர்களின் செல்ஃபோன் செல்பிக்கு மத்தியிலேயே கடைக்குள் செல்ல, இளைய தலைமுறை இப்படி ஒரு குறுகிய வட்டத்திற்குள் நிற்கிறார்களே? கூட்டத்தில் சிக்கி ஏதேனும் அசம்பாவிதம் நிகழ்ந்தால் யாருக்கு நஷ்டம்? என பலரும் ஆதங்கம் தெரிவிக்கின்றனர்.

அறிவுரை கூறவா? கோபப்படவா?
கொளுத்தும் வெயிலுக்கு மத்தியில் கையில் செல்ஃபோனுடன் குவிந்து நிற்கும் இளைஞர்களை பார்த்து கோபப்படவா? அல்லது அறிவுரை கூறவா? என்பதே சமூக நல ஆர்வலர்களின் வருத்தம்.
பொதுவாகவே ஒரு நடிகரை பார்க்க வரும் கூட்டத்தைவிட நடிகையை பார்க்க வரும் கூட்டம் தான் அதிகம். அதிலும், கடை திறப்பு விழாக்களுக்கு ஹீரோயின்கள் வந்தால் அங்கு கூட்டம் அலைமோதும்.

நயன்தாரா வந்த போது...
சமீபத்தில், பிரபல துணிக்கடை திறப்பு விழாவிற்கு நடிகை நயன்தாரா சேலத்திற்கு வந்தபோதுகூட ரசிகர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. அவர்களை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் தடியடி நடத்தும் நிலைக்கு தள்ளப்பட்டனர். அதேபோல், கடலூரில் நடிகை அபர்ணாதாஸ் மொபைல் ஷோரூம் திறப்பு விழாவிற்கு வந்தபோது அங்குள்ள கண்ணாடி உடைந்தது. அப்போது பவுன்சர்கள் மக்களை தாக்க முயன்ற விவகாரம் காவல் நிலையம்வரை சென்றது. அதேபோல், பிரியங்கா மோகன் ஒரு கடை திறப்பு விழாவிற்கு வந்தபோதும் மக்கள் வெள்ளம் சாலையை திணறடித்தது. நகைக்கடை திறப்பு விழாவில் செல்பி எடுக்கிறேன் என்றபெயரில் கேரள நடிகை ஹனி ரோஸிடம் ரசிகர் ஒருவர் அநாகரிகமாக நடந்த சம்பவமும் நிகழ்ந்தது.

கட்டுக்கடங்காத கூட்டம்
இதுபோன்று, ஹீரோயின்களை பார்க்க ரசிகர்கள் கூட்டம் கூடி ஸ்தம்பிக்கும் நிலை ஏற்படுவது தொடர்கதையாகி வரும் நிலையிலும், தூங்கா நகரத்தில் நடிகை கயாடு லோஹரை பார்க்க இளைஞர்கள் கூட்டம் குவிந்தது பலருக்கும் கவலையையே ஏற்படுத்தி உள்ளது. சமீப நாட்களாக பவழமல்லி பாடல் மூலம் அத்தனைபேரையும் ஆட்டம்போட வைத்துள்ளவர்தான் கயாடு லோஹர். மதுரை பைபாஸ் சாலையில் உள்ள ஒரு தனியார் கடை திறப்பு விழாவிற்கு இவர் வரவுள்ள தகவலை அறிந்த ரசிகர்கள் காலைமுதலே காத்துக் கிடந்தனர். அதிலும், விடுமுறை தினம் என்பதால் கட்டுக்கடங்காத கூட்டம் முண்டியடித்தது.

ரசிகர்கள் வெள்ளத்தில்...
சிவப்பு நிற ஆடையில் வந்திருந்த கயாடு லோஹர் காரைவிட்டு இறங்கி கடைக்குள் நடந்து வந்தார் என்பதைவிட, ரசிகர்கள் வெள்ளத்தில் மிதந்து வந்தார் என்றுதான் சொல்ல வேண்டும். செல்போன் செல்பிக்கு மத்தியில் ஒருவழியாக கடைக்கு சென்ற கயாடு லோஹர், இவ்வளவு வெயிலுக்கு மத்தியில் தன்னை பார்க்க வந்த மதுரை மக்களின் அன்பு மகிழச்சி அளிப்பதாகவும், மதுரை உணவு தனக்கு மிகவும் பிடிக்கும் எனவும் கொஞ்சும் தமிழில் பேசினார்.

கடைகள் திறக்காதோ?
இதற்கு மத்தியில் பவுன்சர்கள் மற்றும் ரசிகர்களிடையே சிறிதுநேரம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்த வீடியோக்களை பார்க்கும் பலரும் நடிகையும் நம்மைப்போன்ற ஒரு மனிதர்தானே, அவர்களை பார்ப்பதற்காக கூடும் கட்டுக்கடங்காத ரசிகர்கள் மத்தியில் அசம்பாவிதம் நிகழ்ந்தால் என்ன செய்வது?


அப்படி ஏதேனும் நடந்த பின்பு வருத்தப்பட்டால் இழப்பை ஈடுகட்ட முடியுமா? என கேள்வி எழுப்புவதோடு சினிமா பிரபலங்களால் கூடும் கூட்டத்தை கட்டுப்படுத்த காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். மேலும், கடைகளை திறக்க சினிமா பிரபலங்கள் தான் வர வேண்டும் என்ற கட்டாயம் ஏதேனும் உள்ளதா? என ஆதங்கப்படும் சமூக நல ஆர்வலர்கள், பலதுறைகளில் அசாத்திய சாதனை படைத்த எத்தனையோ முன்னோடிகள் இருப்பதாகவும் அவர்களை அழைத்து திறந்தால் கடைகள் திறக்காதா? எனவும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved