Also Watch
Read this
நேபாள எல்லையில், அசுர வேகத்தில் கரைபுரண்ட வெள்ளத்தில் சிக்கியுள்ள, தமிழ்நாட்டு பக்தர்கள் பலரின் கதி என்னவென்றே தெரியாமல் மாயமாகியிருப்பது, அவர்களது குடும்பங்களை சொல்லொணாத் துயரத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

தங்கள் உறவுகளின் குரலை கேட்க முடியாமலும், அவர்களின் பாதுகாப்பு குறித்த எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் கிடைக்காமலும், ஒவ்வொரு நொடியும் கண்ணீரும் கம்பலையுமாய் தவித்து வரும் குடும்பத்தினர், அவர்களை பத்திரமாக மீட்டு தர வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இமயத்தில் உச்சிக்கு...
ஈசனின் பாதம் தொட இமயத்தின் உச்சிக்கு பேரார்வத்தோடு புறப்பட்டு சென்ற ஆன்மீக பயணம், இப்படி ஒரு கொடூர சூழலில் முடியும் என யாருமே சற்றும் எதிர்பார்க்கவில்லை. தமிழக பக்தர்கள் பலரின் கதி என்னவென்றே தெரியாமல் மாயமாகியிருப்பது உறவினர்களை நிலைகுலைய வைத்திருக்கிறது.

தமிழகத்தில் இருந்து...
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் சூப்பர் யாத்ரா ஏஜென்சி, சென்னையை சேர்ந்த மகாதேவி யாத்ரா நிறுவனங்கள் மூலமாக, 13 நாட்கள் கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்காக தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 57 பேர் கொண்ட குழுவினர் கடந்த 23ஆம் தேதி புறப்பட்டு சென்றனர். இவர்கள் நேபாளம் - சீனா எல்லையில் உள்ள ரசுவாகதி எல்லைக்கு வடகிழக்கே 20 கிலோமீட்டர் தொலைவில் 3 பேருந்துகளில் பயணித்து கொண்டிருந்தனர்.

அப்போது, இமயமலையின் உச்சிப் பகுதியில் இருந்த ராட்சத பனிப்பாறை திடீரென உடைந்து கரைபுரண்டு ஓடியது. அத்துடன் ராட்சத நிலச்சரிவும் ஏற்பட, பக்தர்கள் பயணித்த வாகனங்கள் வெள்ளத்திலும் மண்ணிலும் சிக்கிச் சின்னப்பின்னமாகின. இதில், ஒரு பேருந்தில் சென்ற 21 பயணிகள் மட்டுமே அதிர்ஷ்டவசமாக மீட்கப்பட்டு உள்ளனர்.

குடும்பத்தினர் தவிப்பு
மயிலாடுதுறையிலிருந்து ஆன்மீகப் பயணம் மேற்கொண்ட 7 பேரில், லேசான காயங்களுடன் தப்பிய 17 பேரின் புகைப்படத்தை கொண்டு வட்டாட்சியர் விஜயராகவன் நடத்திய விசாரணையில், ரத்தினகுமார், பூங்குழலி, புஷ்பலதா ஆகிய 3 பேர் பாதுகாப்பாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆனால், உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி சிவஞானம் வீராசாமி, மணிமேகலை சுகுமார், வெங்கட்ராமன் கிருஷ்ணமூர்த்தி ஆகிய 4 பேரின் நிலை என்னவென்று தெரியாமல் அவர்களது குடும்பத்தினர் பெரும் தவிப்பில் மூழ்கியிருக்கின்றனர்.

தாயின் குரல்...
’அரசு அறிவித்த டோல் ஃப்ரீ எண்ணை யாருமே எடுக்கல, டிவியையே பார்த்துக்கிட்டு கண்ணீரோட காத்துக்கிட்டு இருக்கேன், என் மனைவி ராஜேஸ்வரியோட நிலை என்னன்னு உடனே அறிவிக்கலைனா, ஆட்சியர் அலுவலகம் முன்னாடி தீக்குளிப்பேன்,’ என ராஜேஸ்வரியின் கணவர் உதயகுமார் வேதனையுடன் தெரிவித்தார்.

நாமக்கல் மாவட்டம் வேப்பநத்தம் காலனியை சேர்ந்த ஓய்வுபெற்ற அரசுப் பள்ளி ஆசிரியை கிருஷ்ணவேணி என்பவரின் கைபேசி முற்றிலும் செயலிழந்துள்ளது. லண்டனில் உள்ள மகனும், திண்டிவனத்தில் உள்ள மகளும் தாயின் குரல் கேட்க முடியாமல் கண்ணீருடன் தவிக்கின்றனர்.

உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு...
’கைலாசம் போகணும்ங்கிறதுதான் அம்மாவோட வாழ்நாள் கனவு, தன்னுடடைய சொந்த சேமிப்புப் பணத்துலதான் போனாங்க, நேத்து காலைல கூட போன் பண்ணி போட்டோ அனுப்புனாங்க,’ என பேரழிவில் சிக்கியுள்ள தஞ்சாவூரை சேர்ந்த இளவரசியின் மகன் உடைந்து போய் கூறியுள்ளார்.
இதேபோல், புதுச்சேரியை சேர்ந்த கீதா, வைஷ்ணவி, ஆனந்தசுந்தரி ஆகிய 3 பேர் பத்திரமாக இருப்பதாகப் பேரிடர் மேலாண்மைத்துறை சொன்னாலும், நேரடி போன் தொடர்பு கிடைக்காததால் மகன் விஷ்ணுராம் உள்ளிட்ட குடும்பத்தினர் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு காத்துள்ளனர்.

ஒற்றை கோரிக்கையாக...
இமயமலையில் நிலவும் சீரற்ற வானிலை மற்றும் தொடர்பு சேவை துண்டிப்பு காரணமாக மீட்புப் பணிகளில் பெரும் தொய்வு ஏற்பட்டுள்ளது.

இயற்கை சீற்றத்தில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் தமிழ்நாட்டு மக்களை மீட்க, மத்திய, மாநில அரசுகள் உடனே நேபாள அரசுடன் உயர்மட்ட பேச்சுவார்த்தை நடத்தி ராணுவத்தையும் மீட்புக் குழுவையும் களமிறக்கி அனைவரையும் சொந்த ஊருக்கு பத்திரமாக மீட்டு வர வேண்டும் என்பதே பாதிக்கப்பட்ட குடும்பங்களின் ஒற்றை கோரிக்கையாகவுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved