Also Watch
Read this
தவெக அமைச்சர்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளரை சந்தித்து, வரும் 9ஆம் தேதி நடக்கவுள்ள கூட்டணி கட்சி சந்திப்பு கூட்டத்தில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்துள்ள நிலையில் அதன் பின்னால் பெரிய திட்டமே ஒளிந்துள்ளதாக அரசியல் வட்டாரம் கூறுகிறது. தவெக தலைமையிலான மெகா கூட்டணியை உருவாக்கி திமுகவை பலமிழக்க செய்ய வேண்டும் என்பதுதான் முக்கிய அஜெண்டா எனவும் அதனை முன்வைத்தே தவெக அமைச்சர்கள் நைசாக காய் நகர்த்தி வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

யார் யாருடன் கூட்டணி?
2026 சட்டமன்ற தேர்தலில், பல அரசியல் வியூகவாதிகளின் கணிப்புகளை எல்லாம் தவிடுபொடியாக்கி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது தவெக. ஆனாலும், ஆட்சியமைக்க ஆதரவு கட்சிகளின் உதவி தேவை என்ற நிலைக்கு தவெக தள்ளப்பட காங்கிரஸ் தன் கனிவுப்பார்வையை உதிர்த்தது. அடுத்து, ஜனாதிபதி ஆட்சி அமைந்துவிடக்கூடாது என்ற ஒரே காரணத்தை முன்வைத்து வெளியிலிருந்து தான் ஆதரவு, அமைச்சரவையில் இடம் பெறமாட்டோம் என்ற கட்டுப்பாட்டோடு விசிக, சிபிஐ, சிபிஎம், ஐயூஎம்எல் கட்சிகள் தவெகவிற்கு ஆதரவு தெரிவித்தது. இந்த கட்டுப்பாட்டை சில நாட்களிலேயே தளர்த்திக் கொண்ட விசிகவும், ஐயூஎம்எல்லும் தவெக அமைச்சரவையில் இடம்பிடித்தன. ஆனாலும், திமுகவுடன் நட்புறவில்தான் இருப்பதாக பழைய பாசத்தை மறக்க முடியாமல் உழன்று வந்த திருமா, சமீபத்தில் உளுந்தூர்பேட்டையில் நடந்த தமிழ் தேசிய எழுச்சி மாநாட்டில் இனி தவெகவுடன்தான் கூட்டணி என அறிவித்துவிட்டார்.

தவெக தலைமையில்...
கம்யூனிஸ்ட் கட்சிகளின் நிலைப்பாடு என்னவோ அதுவே தங்களின் நிலைப்பாடு என நிலையாய் நின்ற விசிக ஒருவழியாக தவெக கூடாரத்திற்குள் வந்துவிட்டது. அதேபோல், மதிமுகவும் திமுகவுடனான கூட்டணியை முறித்துவிட்டு தவெகவுடன் தான் நம் வருங்கால பயணம் என கூறிவிட்டது. தேர்தலுக்கு முன்பு தவெக யாருடனும் கூட்டணியில் இல்லை. தற்போது ஆதரவு அடிப்படையில் கூட்டணியாக பரிணாமம் அடைந்துள்ளது. அந்த பரிணாமத்தை தங்கள் தலைமையிலான கூட்டணியாக கட்டியெழுப்பும் முயற்சியில் இறங்கி உள்ளது தவெக.

தவெக உறுதி
இதில், 2 கம்யூனிஸ்ட் கட்சிகளையும் உள்ளே இழுக்க வேண்டிய தேவை தவெகவிற்கு உள்ளது. ஆனால், ஆட்சிக்காக மட்டுமே தவெகவிற்கு ஆதரவு என்பதில் கம்யூனிஸ்ட் கட்சிகள் தற்போதுவரை தெளிவாகவே இருக்கின்றன. அதற்கு, தவெக நடத்திய முதல் கூட்டணி கட்சிகள் சந்திப்பு கூட்டத்தையே கம்யூனிஸ்ட் கட்சிகள் புறக்கணித்ததுதான் சாட்சி. ஆனால், முரண்டு பிடித்தால் அப்படியே விட்டுவிட முடியுமா? கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும் என்ற நம்பிக்கையோடு நடைபோடும் தவெக, உருண்டு புரண்டாவது கம்யூனிஸ்ட் கட்சிகளை நம்பக்கம் இழுத்தால்தான் நாம் முற்போக்கு கூட்டணியாக முழுமையடையும் என்ற நினைப்பில் உறுதியாக இருக்கிறார்களாம்.

மார்க்சிஸ்ட் அலுவலகத்தில்...
திமுக உடனான கம்யூனிஸ்ட் கட்சிகளின் வருத்தங்களையும், மனக் கசப்புகளையும் தூசி தட்டி அதற்கு ஏற்ப காய் நகர்த்தினால் கனிய வாய்ப்புள்ளது என்ற அஜெண்டாவோடு, சென்னை தி.நகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் மாநில செயலாளர் சண்முகத்தை, தவெக அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமார் ஆகியோர் சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கெனவே நடந்த கூட்டணி கட்சி சந்திப்பில்தான் கலந்து கொள்ளவில்லை, வரும் 9ஆம் தேதி நடக்கவுள்ள 2ஆவது கூட்டணி கட்சி சந்திப்பில் கட்டாயம் கலந்துகொள்ள வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்களாம். வெறும் கோரிக்கையோடு நிறுத்தாமல் பல முக்கிய விஷயங்களையும் குறிப்பிட்டு கூட்டணியில் இணையுமாறு வலியுறுத்தி உள்ளதாக அரசியல் வட்டாரம் கூறுகிறது.

மேயர் பதவி உறுதி
கடந்த தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு ஆளுக்கு 5 தொகுதிகளை மட்டுமே கொடுத்து உள்ள உளைச்சலுக்கு ஆளாக்கிய திமுக புதிய வரவான தேமுதிகவிற்கு தொகுதிகளை வாரி வழங்கி மகிழ்ச்சியில் திளைக்க வைத்தது. அதுபோன்ற செயல்களில் ஈடுபடமாட்டோம் என தவெக அமைச்சர்கள் கூறியுள்ளார்களாம். ஏற்கெனவே தொகுதிகள் விவாகரத்தில்தான் திமுக மீது கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு வருத்தமே. நேக்காக அந்த வருத்தத்தையே வட்டம்போட்டு காட்டி தவெகவினர் தன்பக்கம் இழுக்க பார்க்கிறார்களாம்.

இதுமட்டுமல்லாது, மேயர்வரை பதவி கொடுக்கவும் தயார் எனக்கூறிய தவெக அமைச்சர்கள், திமுகவில் துணை மேயர் பதவியை மட்டும்தானே கண்ணில்காட்டினார்கள் எனவும் முடிந்துபோன கதையை மீண்டும் நினைவுபடுத்துகிறார்களாம். தொழிலாளர்துறை சார்ந்த வாரியங்கள் தருவதாகவும், தொழிலாளர்கள் சார்ந்த கோரிக்கைகள் உடனுக்குடன் நிறைவேற்றப்படும் எனவும் உறுதி அளித்துள்ளார்களாம்.

தவெகவின் மெகா திட்டம்
மொத்தத்தில் வரும் உள்ளாட்சி மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் உங்கள் பயணம் எங்களுடன் அமைய வேண்டும், அதைதான் முதலமைச்சரும் விரும்புவதாக கூறி உள்ளார்களாம் அமைச்சர்பெருமக்கள். அனைத்தையும் கேட்டுக்கொண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில தலைவர் கட்சியின் செயற்குழு மற்றும் நிர்வாகக்குழு கூட்டத்தை கூட்டி, முடிவெடுத்துவிட்டு தங்கள் முடிவை கூறுவதாக அனுப்பி வைத்து விட்டாராம்.

இதனிடையே, பாஜகவிற்கு எதிரான கட்சிகளை வலுப்படுத்த வேண்டிய தேவை இடதுசாரிகளுக்கு இருப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன் ஏற்கெனவே தெரிவித்துள்ளார். இதன்மூலம், கம்யூனிஸ்ட் கட்சிகளும் கூடியவிரைவில் தவெக கூட்டணியில் ஐயக்கியமாவார்கள் என அரசியல் வட்டாரத்தில் முணுமுணுக்கப்படுகிறது. அப்படி, கம்யூனிஸ்ட் கட்சிகளும் இணைந்துவிட்டால் திமுக நிச்சயம் பலவீனமாகுமாம். இதுதான் தவெகவின் மெகா திட்டமாம்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved