Also Watch
Read this
குவைத்தில் அடைத்து வைக்கப்பட்டு சித்ரவதைக்கு ஆளான தமிழக பெண் மீட்கப்பட்டார்.
பணிப்பெண் வேலைக்காக...
கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் 35 வயதான வனிதா. கணவரை பிரிந்து வாழும் இவருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். குடும்ப வறுமை காரணமாக, வீட்டு பணிப்பெண் வேலைக்காக ஏஜென்ட் மூலம் குவைத் நாட்டுக்கு, கடந்த 3 மாதங்களுக்கு முன்பு, வனிதா சென்றார். இந்நிலையில், தான் வேலை பார்க்கும் வீட்டில் சிறிய அறையில் அடைத்து வைத்து சித்ரவதை செய்வதாகவும், 2 மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை எனவும் கூறி வனிதா உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

கண்ணீருடன் வீடியோ வெளியீடு
வீடியோவில் இரு கைகளை கூப்பியபடி கண்ணீருடன் வனிதா பேசியதாவது;
நான் கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவள். இங்கு வந்து மூன்று மாதங்கள் ஆகின்றன. என்னைச் சித்ரவதை செய்கிறார்கள். இரண்டு மாதமாகச் சம்பளமும் தரவில்லை. கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் தான் என்னை மீட்டு, என் தாய்நாடான இந்தியாவிற்குத் திரும்ப அழைத்துச் செல்ல வேண்டும்.
இவ்வாறு வனிதா கூறி இருந்தார்.

வைரலான வனிதா வீடியோ
இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து, வனிதாவின் தாய் வெண்ணிலா கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்தார். தனது மகளை ஏஜென்ட் ஏமாற்றி விட்டதாகவும், அவரை உயிருடன் மீட்டுத் தரும்படியும் வெண்ணிலா கோரிக்கை விடுத்தார். இதையடுத்து, கள்ளக்குறிச்சி மாவட்டக் காவல் துறை இது குறித்து, மத்திய வெளியுறவுத்துறை மற்றும் உரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து, வனிதாவை மீட்பதற்கான முயற்சிகளை தீவிரப்படுத்தியது.

நன்றி தெரிவித்து வீடியோ
இதற்கிடையில், வனிதாவின் வீடியோ குவைத்தில் உள்ள இந்திய தூதரகத்தின் கவனத்துக்கு சென்றது. இதனை தொடர்ந்து தூதரக அதிகாரிகள் வனிதாவின் இருப்பிடத்தை கண்டறிந்து அவரை மீட்டனர். தற்போது அவர் இந்திய தூதரகத்தில் பாதுகாப்பாக உள்ளார். இது தொடர்பாக இந்திய தூதரகத்துக்கு நன்றி தெரிவித்து வனிதா புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்திய தூதரகத்தில்...
பச்சை நிற குர்தா அணிந்து, கைகளை கூப்பி மகிழ்ச்சியுடன் வனிதா பேசியதாவது;
என்னை மீட்க இந்திய தூதரகத்தின் உதவியை நாடினேன். இப்போது நான் இந்தியத் தூதரகத்தில் பாதுகாப்பாக இருக்கிறேன். இந்தியத் தூதரகத்திற்கு நன்றி. இப்போது எனக்கு நல்ல உடையும் நல்ல உணவும் கிடைக்கிறது.
இவ்வாறு வனிதா கூறி உள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved