news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news
tv

Also Watch

காவல்துறையை மறுகட்டமைக்கும் புதிய திட்டம்

29,000 புதிய போலீஸ், அதிகரிக்கும் பெண்கள்

30

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

தமிழக காவல்துறையில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் 29,108 புதிய காவலர் பணியிடங்களை உருவாக்கும் அறிவிப்பு, வழக்கமான அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு என்பதைத் தாண்டி பரந்த நிர்வாக முக்கியத்துவத்தைக் கொண்டிருக்கிறது.

முதல்வர் விஜய் அறிவிப்பு
காவல்துறையின் மனிதவளப் பற்றாக்குறையை சமாளிப்பது, பெண்களின் பங்களிப்பை அதிகரிப்பது, காவல் நிலையங்களின் செயல்பாட்டுத் திறனை மேம்படுத்துவது, குற்ற விசாரணையில் நவீன தொழில்நுட்பங்களை கொண்டுவருவது, தடயவியல் கட்டமைப்பை மாவட்டங்களுக்குப் பரவலாக்குவது என பல்வேறு தளங்களை ஒரே நேரத்தில் தொடும் முயற்சியாக, முதலமைச்சர் விஜய்யின் அறிவிப்புகள் அமைந்துள்ளன.

காவலர் எண்ணிக்கையை அதிகரிப்பது ஏன் அவசியம்?
தற்போதைய அனுமதிக்கப்பட்ட காவல்துறையின் பலம் 1,34,667 ஆக உள்ளது. சுமார் 15,000 பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. தமிழகத்தின் காவலர் – மக்கள் தொகை விகிதம் 1:675 எனவும், தேசிய அளவில் அது 1:831 எனவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, தமிழகத்தில் காவல்துறையினரின் மக்கள் தொகை சார்ந்த விகிதம், தேசிய சராசரியைவிடச் சிறப்பாக உள்ளது. ஆனால், இந்தப் புள்ளி விவரத்தை வைத்து தமிழக காவல்துறையில் ஆள் பற்றாக்குறை இல்லை என்று முடிவு செய்துவிட முடியாது.

675 பேருக்கு ஒரு காவலர்
உதாரணமாக, 675 பேருக்கு ஒரு காவலர் என்ற மாநில சராசரி, அந்த காவலர் 24 மணி நேரமும் ஒரே இடத்தில் பணியில் இருப்பதாக அர்த்தமல்ல. காவல்துறையில் சட்டம்–ஒழுங்கு, குற்றத்தடுப்புப் பிரிவு, ஆயுதப்படை, போக்குவரத்து, பாதுகாப்புப் பணிகள், சிறப்புப் பிரிவுகள், நிர்வாகப் பணிகள் என பல்வேறு பொறுப்புகள் உள்ளன. இந்த பின்னணியில் நடப்பு ஆண்டிலேயே 10,000 காவலர்கள், அவர்களில் 5,000 பெண்கள் உட்பட, பணியமர்த்தப்பட உள்ளதாக முதலமைச்சர் விஜய் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.

காவல் நிலைய நிர்வாகத்தில்...
அடுத்த ஐந்து ஆண்டுகளில் 29,108 பேர் காவல்துறையில் சேர்க்கப்பட உள்ளனர். மனிதவளத்தை அதிகரிப்பதுடன், காவல்துறையின் தொழில்நுட்ப திறனை உயர்த்துவதற்காக ₹212 கோடி நவீனமயமாக்கல் நிதி ஒதுக்கப்பட உள்ளது. புதிய வாகனங்களை வாங்குவதற்காக மேலும் ₹200 கோடி ஒதுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நடுத்தர காவல் நிலையங்களுக்கான மாதாந்திர அவசரகால நிதி ₹6,000லிருந்து ₹40,000 ஆகவும், பெரிய காவல் நிலையங்களுக்கான நிதி ₹8,250லிருந்து ₹50,000 ஆகவும் உயர்த்தப்பட உள்ளது. இந்த உயர்வு, காவல் நிலையங்களின் அன்றாட நிர்வாகத்தில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியது.

தடயவியல்: விசாரணையை அறிவியல் பாதைக்கு நகர்த்தும் முயற்சி
தடய அறிவியல் துறையில் ஆவணங்களைச் சோதிக்கப் பயன்படும் நவீன டிஜிட்டல் இமேஜிங் தொழில்நுட்பக் கருவியான Video Spectral Comparator சென்னைக்கு வழங்கப்படுகிறது. துப்பாக்கி மற்றும் தோட்டாக்களைக் கொண்டு நடக்கும் குற்றங்களை மிக விரைவாகவும் துல்லியமாகவும் துப்பறிய உதவும் ஒரு மேம்பட்ட தடய அறிவியல் தொழில்நுட்பமான Automated Ballistics Identification சிஸ்டத்தை கொள்முதல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

சேலம் மற்றும் விழுப்புரத்தில் ₹14 கோடி செலவில் DNA பரிசோதனை வசதிகள் உருவாக்கப்பட உள்ளன. சேலம் மற்றும் திருநெல்வேலியில் ₹18.73 கோடி செலவில் சைபர் குற்றங்கள் தொடர்பான கணினி தடயவியல் பிரிவுகள் அமைக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. காவல் விசாரணையை ஒப்புதல் வாக்குமூலங்கள் மற்றும் நேரடி சாட்சிகளிலிருந்து அறிவியல் ஆதாரங்களின் பக்கம் நகர்த்தும் முக்கியமான மாற்றத்தைக் இவை அனைத்தும் காட்டுகின்றன.

பெண்களின் பிரதிநிதித்துவம்: மாற்றம்
புதிய அறிவிப்பின் அரசியல் மற்றும் சமூக ரீதியாக முக்கியமான அம்சங்களில் ஒன்று காவல்துறையில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை 22 சதவீதத்திலிருந்து 30 சதவீதமாக உயர்த்துவதாகும். நடப்பு ஆண்டில் சேர்க்கப்பட உள்ள 10,000 பேரில் 5,000 பேர் பெண்களாக இருப்பார்கள் என்ற அறிவிப்பு, இந்த இலக்கை வேகமாக அடைவதற்கான முயற்சியாக பார்க்கப்படுகிறது. பெண் காவலர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது பெண்கள் தொடர்பான வழக்குகளை கையாள்வதற்கான திறனை மட்டுமல்லாமல், காவல் நிலையத்தின் சமூக அணுகலையும் மாற்றக்கூடியது.

நிர்வாக ரீதியிலான மாற்றம்
பெண்களுக்கு எதிரான வன்முறை, பாலியல் குற்றங்கள், குடும்ப வன்முறை, குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் போன்ற வழக்குகளில் புகார் அளிக்கும் பெண்களுக்கு, பெண் காவலர்களின் இருப்பு, உளவியல் ரீதியாகவும் நிர்வாக ரீதியாகவும் முக்கியமானதாக இருக்கிறது. காவல் நிலையங்களில் பெண் காவலர்களை அதிகரிப்பதோடு, விசாரணை அதிகாரிகள், தொழில்நுட்பப் பிரிவுகள், சிறப்புப் படைகள், நிர்வாகப் பொறுப்புகள் மற்றும் உயர் பதவிகளிலும் அவர்களின் பங்கேற்பு அதிகரிக்க வேண்டும். அப்போதுதான் இந்த மாற்றம் வெறும் எண்ணிக்கை சார்ந்த இலக்காக இல்லாமல், நிறுவன ரீதியான மாற்றமாக மாறும்.

Related Link
ஜிடிபி சர்ச்சை, மத்திய அரசு பொய் சொல்கிறதா?

ஜிடிபி சர்ச்சை, மத்திய அரசு பொய் சொல்கிறதா?

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நடிகை நயன்தாரா சர்பிரைஸ் விசிட்

28
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved