Also Watch
Read this
சேலத்தில், சுங்க வசூலுக்கான குத்தகை காலம் முடிந்தும் சாலையோர ஏழை வியாபாரிகளிடம் சட்டவிரோத வசூல் வேட்டையில் ஈடுபட்ட ஒருவரை மடக்கி பிடித்து நியூஸ் தமிழ் செய்திக்குழுவினர் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். அந்த நபரை ஒப்படைக்க விடாமல் காவல் நிலையம் முன்பே ஒருவர் ஸ்கூட்டியில் சுற்றி சுற்றி வந்து சுத்துப்போட, சிங்கப்பெண்கள் சிறப்பு அதிரடிப்படை காவலர்களை கண்டபிறகே அவர் வேறுவழியின்றி அங்கிருந்து நகர்ந்து சென்றார்.
சாலையோர வியாபாரிகளிடம்...
சேலம் மாநகர் பழைய பேருந்து நிலையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருக்கக் கூடிய சாலையோர வியாபாரிகளிடம் இருந்து சுங்கக்கட்டணம் எனக்கூறி தினமும் ரூ.80 முதல் 250 வரை கடைக்கு ஏற்றவாறு வசூலிக்கப்படுவதாகவும், சுங்க கட்டணம் வசூலிப்பதற்கான குத்தகை காலம் கடந்த 4 மாதங்களுக்கு முன்பே முடிந்து விட்டதாகவும் நியூஸ் தமிழ் செய்திக்குழுவுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற செய்தியாளர் வினோத், பணம் வசூல் செய்து கொண்டிருந்த சரவணன் என்பவரது கையில் இருந்த ரசீதை வாங்கி பார்த்தார். அதில், சேலம் மாநகராட்சி, அம்மாபேட்டை வார்டு அலுவலகம், ஆனந்தா சாலை சுங்க வசூல் என குறிப்பிடப்பட்டிருந்ததே தவிர டோக்கன் எண்ணோ, எந்த ஆண்டிலிருந்து எந்த ஆண்டுவரை குத்தகை காலம், சீல் என எந்த விவரமும் இல்லாமல் இருந்தது.

தெரியவே தெரியாது...
”நான் வெறும் அம்புதான் எய்தவன் வேறு” என மாநகராட்சி அதிகாரிகளின் தலையில் வசூல் விவகாரத்தை சரவணன் தூக்கிப்போட, சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரியின் செல்போன் எண்ணை சரவணனிடமே வாங்கி லவுட் ஸ்பீக்கரில் பேசினார் செய்தியாளர் வினோத். ’சரவணனா? அப்படி ஒரு நபரை தெரியவே தெரியாது, நாங்கள் யாரையும் பணம் வசூலிக்க சொல்லவே இல்லை,’ என மாநகராட்சி பில் கலெக்டர் என கூறப்படும் யாஷின் எதிர்முனையில் கூறினார்.
பதில் சொல்லவே இல்லை
அதேபோல், குத்தகைதாரர் பெயர் செந்தில்குமார் என சரவணன் கூறிய நபரிடம் செய்தியாளர் பேசியபோது, நாங்கள் வசூலிக்கும் பணம் மாநகராட்சியில் வரவு வைக்கப்படும் எனக்கூறிய அவர் மாநகராட்சியின் வேலையை நீங்கள் ஏன் செய்ய வேண்டும்? அப்படி ஏதாவது உத்தரவு வந்துள்ளதா? யார் அந்த உத்தரவை போட்டது? என்ற கேள்விகளுக்கு பதில் சொல்லவே இல்லை.

அப்பாவி வியாபாரிகள்...
இதனிடையே, சரவணனை காப்பாற்ற அங்கு ஸ்கூட்டியில் வந்த சாகுல் என்பவரிடம் வியாபாரி ஒருவர், தினமும் ஏழைகளிடம் கொள்ளை அடிப்பதாகவும், இவர்களுக்கு இதுதான் வேலையே எனவும் கோபத்தில் சீற, நான் வசூலித்தேனா? நீங்கள் பார்த்துள்ளீர்களா? என துள்ளினார் சாகுல். அதேபோல், தங்களுக்கு லாபமோ நஷ்டமோ இவர்களுக்கு பணம் கொடுத்துக் கொண்டிருப்பதாக அப்பாவியாய் பேசிய சுப்ரமணியம் என்ற வாழைக்காய் வியாபாரி, வயிற்றுப்பிழைப்புக்கு வேறு வழியில்லையே என நொந்து கொண்டார்.
செய்தியாளருடன் மல்லுக்கட்டு
இதையடுத்து சரவணனை அருகே உள்ள காவல் நிலையத்தில் ஒப்படைப்பதற்காக செய்தியாளர் அழைத்து வந்தபோது, மீண்டும் ஸ்கூட்டியில் என்ட்ரியான சாகுல் வண்டியில் ஏறுமாறு கண்களால் சிக்னல் காட்டினார். ஆனால் செய்தியாளர் விடாமல் மறிக்க, ஒருகட்டத்தில் டென்ஷன் ஆன சாகுல், சரவணனை நோக்கி தன்னுடன் வண்டியில் ஏறுங்கள் என கூறியதோடு, நீங்கள் யார் கேள்வி கேட்க என செய்தியாளரிடம் பாய்ந்தார்.

சிங்கப்பெண் படை வந்ததும்...
இதனிடையே, காவல் நிலையத்திற்குள் இருந்து வெளியே வந்த சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை காவலர்கள் சரவணனை உள்ளே செல்லுமாறு உத்தரவிட்டனர். அதன்பிறகுதான் சாகுலும் அங்கிருந்து இடத்தையே காலி செய்தார். தனக்கு சம்பளம் ரூ.500 மற்றபடி எதுவுமே தெரியாது என செய்தியாளரிடம் பேசியபடியே சரவணன் காவல் நிலையத்திற்குள் சென்றார்.

நீதி கிடைக்குமா?
குத்தகை காலம் முடிந்தும் வசூல் வேட்டையில் யார் யாரெல்லாம் ஈடுபடுகிறார்கள்? கடந்த 4 மாதங்களாக வசூலிக்கப்பட்ட பணம் யார் கைகளுக்கு சென்றது? மாநகராட்சி அதிகாரிகளுக்கு உண்மையிலேயே இந்த விவகாரம் தெரியுமா தெரியாதா? அல்லது மாநகராட்சி அதிகாரிகளின் பெயரை சொல்லி ஏற்கெனவே பணம் வசூலித்த குத்தகைதாரர் மோசடியில் ஈடுபடுகிறாரா? பழைய குத்தகைதாரரின் பெயர் பாபு என கூறப்படும் நிலையில் செந்தில்குமார் யார்? பில் கலெக்டர் என சொல்லப்படும் யாஷின் உண்மையிலேயே மாநகராட்சி ஊழியர்தானா? சரவணனுக்கு பணம் வசூல் செய்வது மட்டும்தான் வேலையா? கண்ணால் சமிஞ்ஞை செய்து ஓடி ஓடி காப்பாற்ற வந்த சாகுல் யார்? என பல கேள்விகள் எழும் நிலையில் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் விசாரணை செய்தால்தான் மட்டும்தான் இத்தனைக்கும் விடை கிடைக்கும். ஏழை வியாபாரிகளுக்கும் நீதி கிடைக்கும்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved