Also Watch
Read this
FQL Exchange மற்றும் VG Investment செயலி மூலமாக பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாக ஆசை வார்த்தை காட்டி, ஆயிரக்கணக்கான மக்களின் பணத்தை ஏமாற்றிய தம்பதியை, மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கஸ்டடியில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

லட்சாதிபதி ஆகலாம்...
’இரண்டே மாதத்தில், பணத்தை டபுளாக்கி தருகிறோம்,’ என்று காதில் பூ சுற்றி, கிராமப்புற மக்களின் வியர்வை சிந்திய கோடிக்கணக்கான ரூபாயை ஒரே அடியில் சுவாஹா செய்த டிஜிட்டல் ஆப் விவகாரம் அடுத்த கட்டத்தை எட்டியிருக்கிறது.

திண்டுக்கல், மதுரை, மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களின் வியர்வை சிந்திய பணத்தை குறிவைத்து FQL Exchange மற்றும் VG Investment என்ற மொபைல் செயலிகள் களம் இறக்கப்பட்டுள்ளன.

’50 ஆயிரம் ரூபாய் முதலீடு பண்ணா போதும், குறுகிய காலத்தில் லட்சாதிபதி ஆகலாம்,’ எனத் தூண்டில் போட்டு பணத்தை வசூலித்துள்ளனர். ரொக்கமாகவும், கூகுள் பே மூலமாகவும் வாங்கிய பணத்திற்கு, போலியான ஐடிக்களை உருவாக்கி, அதில் USDT என்ற டிஜிட்டல் கரன்சி வரவு வைக்கப்பட்டிருப்பதாக மொபைல் திரையில் போலி கணக்குகளை காட்டி நம்ப வைத்து உள்ளனர்.

10 பேர் மீது வழக்கு
ஆனால், கஷ்டப்பட்டு சேர்த்த அசலையும், திரையில் மின்னிய போலி லாபத்தையும் கணக்கிலிருந்து திரும்ப எடுக்க முயன்ற போதுதான் மக்களுக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. சர்வர் கோளாறு, டெக்னிக்கல் அப்டேட் என சாக்குபோக்கு சொல்லி, பணத்தை தராமல் இழுத்தடித்த கும்பல், ஒரு கட்டத்தில் செயலியை ஒட்டுமொத்தமாக முடக்கிவிட்டு நைஸாக ஆப்ஸ்காண்ட் ஆகியுள்ளது. ஏமாற்றப்பட்டதை உணர்ந்து அலறியடித்த மக்கள், நத்தம் காவல் நிலையத்தை முற்றுகையிட, விஷயம் காட்டுத்தீ போல பரவி திண்டுக்கல் மாவட்ட காவல்துறையின் கவனித்திற்கு சென்றது. இதையடுத்து, திண்டுக்கல் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் பாரதிய நியாய சன்ஹிதா, தகவல் தொழில்நுட்பச் சட்டங்களின் கீழ் 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

முக்கிய குற்றவாளி யார்?
முதற்கட்டமாக ரமேஷ், விஜய், அனிதா ஆகியோரை கைது செய்த போலீசார், சப்-ஏஜென்ட்களாக செயல்பட்ட வீரமணி, விஜயன், ஜெயபிரகாஷ், சுரேஷ் என அடுத்தடுத்து 6 பேரையும் தூக்கி உள்ளே தள்ளினர். சப்-ஏஜென்ட்களை வைத்து நெட்வொர்க்கை விரிவாக்கிய இந்த ஒட்டுமொத்த கிரிப்டோ ராக்கெட்டின் உண்மையான குற்றவாளிகள் மற்றும் முதன்மை மூளை யார்? என்ற கேள்வி எழுந்தபோது தான் விசாரணையின் போக்கே மாறியது. இந்த மெகா மோசடி நெட்வொர்க்கின் பின்னணியில் மதுரையை சேர்ந்த ரஞ்சித் மற்றும் அவரது மனைவி பிரியதர்ஷினி தம்பதிதான் என்பது அம்பலமானது.

ரூ.30 கோடி...
மக்கள் தனது வீட்டை முற்றுகையிட்டதால் பயந்து போன, ரஞ்சித் வெளியிட்ட கண்ணீர் வீடியோவின் பின்னணியை போலீசார் தோண்டியபோது அதிர்ச்சி உண்மை வெளிவந்தது.

வெளிநாட்டிலிருந்து திரும்பிய ரஞ்சித், தனது மனைவியுடன் இணைந்து இந்த போலி செயலிகளை உருவாக்கி, கிராமப்புறங்களில் கமிஷன் ஆசை காட்டி சப்-ஏஜென்ட்களை நியமித்து இந்த 30 கோடி ரூபாய் கிரிப்டோ ஆட்டத்தை இயக்கியுள்ளார்.

ரகசிய விசாரணை
வழக்கின் விஸ்வரூபத்தையும், மாநிலம் தழுவிய கிரிப்டோ தொடர்பையும் பார்த்த டி.ஜி.பி அலுவலகம், விசாரணையை உடனடியாக மதுரை பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றியது.

லுக்-அவுட் நோட்டீஸ், போலீஸ் கிடுக்கிப்பிடி என நாலாபுறமும் வளையம் இறுகியதால், வேறு வழியின்றி தலைமறைவாக இருந்த ரஞ்சித் - பிரியதர்ஷினி தம்பதி திண்டுக்கல் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். அவர்களை கஸ்டடியில் எடுத்த மதுரை போலீசார், அவர்களை ரகசிய இடத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved