Also Watch
Read this
சென்னையில் பிரபல உணவகத்தின் தொழிற்சாலை வளாகத்திற்கு சென்று, தான் மாநகராட்சி அதிகாரி எனவும் பத்திரிகையாளர் எனவும் மிரட்டி பணம் கேட்ட போலி செய்தியாளரை கோயம்பேடு போலீசார் கோழி அமுக்குவதுபோல் அமுக்கி புழல் சிறையில் அடைத்துள்ளனர்.
செய்தி சேகரிப்பதற்கான கேமரா வாங்குவதற்கே தான் பணம் கேட்பதாகவும், தனது தனிப்பட்ட செலவிற்கு யார் கையையும் எதிர்பார்க்கமாட்டேன் எனவும் உத்தமன் நாடகம் ஆடியும் உள்ளே செல்ல வேண்டிய நிலையை போலி செய்தியாளரால் தடுக்க முடியவில்லை.

உண்மைக்கு...
பணம் சுருட்டும் நோக்கில் சுற்றிவரும் போலி பத்திரிகையாளரால், மழை, வெயில், புயல் என எந்த பேரிடரையும் கண்டு அஞ்சாமல் ஜனநாயகத்தின் 4ஆவது தூணை கட்டிக்காப்பாற்றும் உண்மையான பத்திரிகையாளர்களின் பெயர்கள்தான் சேர்ந்து கெடும் நிலை உருவாகிறது.

ரெய்டுக்கு வந்த போலி அதிகாரி
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் 25 கிளைகளுடன் கடந்த 16 ஆண்டுகளாக இயங்கி வரும் பிரபல தனியார் உணவகத்தின் தொழிற்சாலை நெற்குன்றத்தில் இயங்கி வருகிறது. இங்கு கடந்த மாதம் 20ஆம் தேதி மாலை 6 மணியளவில் வந்த ரங்கராஜ் என்பவர், தான் மாநகராட்சி அதிகாரி என்றும் உங்கள் உணவகத்தின் அத்தனை கிளைகள் மீதும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் குவிந்து வருவதாகவும், லைசென்ஸ் உள்ளிட்ட ஆவணங்களை காட்டுமாறும் அதிகார தோரணையில் பேசி உள்ளார்.

போலி செய்தியாளர்...
அந்த நேரத்தில் மேனேஜர் உள்ளிட்டோர் உணவகத்தில் இல்லாததால் கடைநிலை ஊழியர்களை அவர் மிரட்ட, அதனைக்கண்டு பயந்த ஊழியர்களும் மேனேஜரின் செல்போன் எண்ணை கொடுத்து பேச வைத்துள்ளனர். தங்களிடம் அனைத்து ஆவணங்களும் சரியாக உள்ளது எனக்கூறிய மேனேஜரிடம் நாளை காலை வருவதாகவும், அத்தனையையும் காட்டுமாறும் கூறி உள்ளார் ரங்கராஜ்.

நேற்று அதிகாரி, இன்று செய்தியாளர்...
மறுநாள் மீண்டும் மேனேஜரை செல்போனில் அழைத்த அவர், தான் “முதல்வன் நாற்காலி” என்ற நாளிதழின் பத்திரிகையாளர் எனவும் உணவகத்தின் மீதான குற்றச்சாட்டுகளை ஆதாரத்துடன் அம்பலப்படுத்துவேன் எனவும் மிரட்டி உள்ளார். அது எப்படி? முதல் நாள் மாநகராட்சி அதிகாரி, மறுநாள் பத்திரிகையாளரா? என்ற சந்தேகம் உணவக நிர்வாகத்திற்கு எழுந்தது. அதுகுறித்து கேட்டபோது, உணவகத்தின் மீதான பொய் குற்றச்சாட்டுகள் அடங்கிய ஒரு கட்டுரையை மேனேஜருக்கு அனுப்பி, இதுதான் முதல் பக்கத்தில் வரும்,பார்த்துக் கொள்ளுங்கள் எனக்கூறி உள்ளார்.

என்ன தான் வேண்டும்?
அடுத்து, மிரட்டல் குறுஞ்செய்திகளும் நீண்டுள்ளது. ஒருகட்டத்தில் பொறுமையிழந்த மேனேஜர், என்னதான் சார் உங்களுக்கு வேண்டும் எனக்கேட்க, அப்போதுதான் ரங்கராஜ் காந்தி நோட்டுக்கு அடிபோட்ட விவரமே தெரியவந்தது. ’தலைமை அலுவலகத்திற்கு நேரில் வாருங்கள், பேசிக்கொள்ளலாம்,’ என ரங்கராஜிடம் கூறிய மேனேஜர், கடந்த 8ஆம் தேதி கோயம்பேடு போலீஸ் ஸ்டேஷனுக்கும் தகவல் கொடுத்துள்ளார்.

நல்லவன் போல்...
கட்டுக்கட்டாக பணம் வாங்கும் நோக்கில் உணவகத்தின் தலைமை அலுவலகத்திற்கு மறுநாள் வந்த ரங்கராஜ் ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் கொடுத்தால் செய்தி வராமல் தான் பார்த்துக் கொள்வதாக மேனேஜரிடம் பேரம் பேசி உள்ளார். தான் செய்தி சேகரிப்பதற்கான கேமரா வாங்குவதற்கு தான் அந்த தொகையை கேட்பதாகவும், தனது தனிப்பட்ட செலவிற்கு மற்றவரிடம் பணத்தை எதிர்பார்ப்பவன் நான் அல்ல எனவும் நல்லவன் போல் பேசி உள்ளார்.

புழல் சிறையில் போலி செய்தியாளர்
ஆனால், இந்த நாடகமெல்லாம் எடுபடாமல்போக, அங்கு விரைந்து வந்த போலீசார் ரங்கராஜை கைது செய்து விசாரித்தனர். அப்போதுதான், அவர் உண்மையான பத்திரிகையாளரே கிடையாது, ஓட்டல், தங்கும் விடுதி மற்றும் பணம் படைத்தவர்களை குறிவைத்து பணம் பறிக்கும் நோக்கில் சுற்றிக் கொண்டிருக்கும் போலி பத்திரிகையாளர் என்பது தெரியவந்தது. கையும், களவுமாக சிக்கிய போலி பத்திரிகையாளர் ரங்கராஜ் தற்போது புழல் சிறையில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved