Also Watch
Read this

மதுராந்தகம், தாராபுரம் சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
வழக்கறிஞர் வழக்கு...
சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்த வழக்கறிஞர் சுதன், சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளார். அதில் கூறி இருப்பதாவது;
தேர்தல் முடிவுகள் வெளியான குறுகிய காலத்தில் மக்கள் தீர்ப்பை புறக்கணித்து, அரசியல் காரணங்களுக்காக எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ததால், இடைத்தேர்தலில் அவர்கள் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்யும்போது, தேர்தல் செலவை டெபாசிட் செய்யும் வகையில் உரிய நடைமுறையை வகுக்கும்படி தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்.

ராஜினாமா செய்தால்...
சொந்த காரணங்களுக்காக, எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்வதால் பொது மக்களின் வரிப்பணத்தில் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டி உள்ளது. இந்த செலவுகளுக்கு அவர்கள் பொறுப்பேற்கும் வகையில் உரிய சட்ட நடைமுறைகளை வகுக்க வேண்டும். அதேபோன்று இப்படி ராஜினாமா செய்பவர்கள் குறிப்பிட்ட காலத்துக்கு தேர்தலில் போட்டியிட தடை விதிக்கும் வகையில் சட்டம் கொண்டு வருவது குறித்து ஆய்வு செய்ய வேண்டும்.

தடை விதிக்க வேண்டும்
இந்த வழக்கு முடியும் வரை, மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தடை விதிக்க வேண்டும். இந்த தொகுதிகளுக்கு தமிழக வெற்றி கழக வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ள முன்னாள் எம்எல்ஏக்கள் மரகதம் குமரவேல், சத்தியபாமா ஆகியோரின் வேட்புமனுக்களை ஏற்க தேர்தல் ஆணையத்துக்கு தடை விதிக்க வேண்டும்.

தேர்தல் ஆணையத்திற்கு...
திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, பெருந்துறை, அம்பாசமுத்திரம், மதுராந்தகம், தாராபுரம் ஆகிய தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த ஆகும் செலவுகளை அறிக்கையாக தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே வழக்கு, உத்தரவு
2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஏழு பேர், தங்கள் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஆளும் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர். இதனால் தமிழகத்தில் ஏழு தொகுதிகள் காலியாக உள்ளன. இவர்கள் ராஜினாமாவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிமுக சார்பில் வழக்கும் தொடரப்பட்டது.

5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தடை
அந்தந்த தொகுதி வேட்பாளர்கள் மற்றும் வாக்காளர்கள் தாக்கல் செய்த தேர்தல் வழக்கை ஏற்று, விராலிமலை, கரூர், பெருந்துறை, திருச்சி கிழக்கு, அம்பாசமுத்திரம் ஆகிய தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.
இதனால், இந்த ஐந்து தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்படவில்லை. தாராபுரம் மற்றும் மதுராந்தகம் ஆகிய இரு தொகுதிகளுக்கு வரும் அக்டோபர் 6ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved