Also Watch
Read this
டெல்லியில், 16 வயது சிறுமியை 3 மைனர்கள் உட்பட 4 பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாக கொ* செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சிசிடிவி தடயங்களை வைத்து, கொடூர செயலில் ஈடுபட்ட 3 சிறுவர்கள் உட்பட 4 காம மிருகங்களையும் கூண்டோடு தூக்கி சிறையில் அடைத்து உள்ளனர்.

நிர்பயா சம்பவத்தின்...
கடந்த 2012ஆம் ஆண்டு, இந்தியாவையே உலுக்கிய நிர்பயா சம்பவத்தின் ரத்தக்கறை படிந்த வடு, இன்னும் மக்கள் மனதை விட்டு அகலாத நிலையில், டெல்லியின் சுவரூப் நகர் பகுதியில் 16 வயது சிறுமிக்கு நடந்த இந்த அநீதி, தலைநகரில் பெண்கள் பாதுகாப்பை மீண்டும் புதைசேற்றில் தள்ளியுள்ளது.

தெருநாய்களின் பசிக்கு...
கடந்த செப்டம்பர் 13ஆம் தேதி, சுவரூப் நகர் பகுதியின் ஒதுக்குப்புறமான ஒரு வெறிச்சோடிய வயல்வெளியில், தெரு நாய்கள் கூட்டம் கூட்டமாக ஏதோ ஒன்றை கடித்து குதறி கொண்டிருந்தன. சந்தேகமடைந்த பொதுமக்கள் ஓடிச்சென்று பார்த்தபோது, அங்கே கண்ட காட்சி அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்தது. தெரு நாய்கள் கடித்து குதறியதால் முகம் முற்றிலும் சிதைந்து, யார் என்றே அடையாளம் காண முடியாத நிலையில், ஒரு பெண் சடலம் கிடந்தது. தகவலறிந்து வந்த சுவரூப் நகர் காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

கொடூரத்தின் உச்சம்
பிரேத பரிசோதனை அறிக்கையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளிச்சத்திற்கு வந்தன. சடலமாக கிடந்தது 16 வயதேயான ஒரு சிறுமி என்பதும், அந்த சிறுமியை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து, உடலின் 6 இடங்களில் கத்தியால் சரமாரியாக குத்தி கொ* செய்திருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து, இந்த கொடூரத்தை செய்த மிருகங்களை பிடிக்க டெல்லி காவல்துறை அதிரடி வேட்டையில் இறங்கியது.

சிசிடிவி காட்சியில்...
சம்பவம் நடந்த பகுதியை சுற்றியிருந்த சிசிடிவி காட்சிகளை போலீசார் அங்குலம் அங்குலமாக அலசியபோது ஒரு முக்கிய தடயம் சிக்கியது. சம்பவம் நடந்த போது, அந்த சிறுமி தனது நண்பர்களுடன் ஒரு டெம்போவில் பயணித்த காட்சி பதிவாகி இருந்தது. அந்த டெம்போ எண்ணை வைத்து, மின்னல் வேக நடவடிக்கையில் டெம்போவையும் அதன் ஓட்டுநரையும் தூக்கியது காவல்துறை. ஓட்டுநரிடம் நடத்தப்பட்ட கிடுக்கிப்பிடி விசாரணையில், இந்த மிருகத்தனமான சம்பவத்தில் அவனும், 3 சிறுவர்களும் ஈடுபட்டிருப்பது அம்பலமானது.

மூன்று சிறுவர்கள் உள்பட...
இதையடுத்து, களத்தில் இறங்கிய போலீசார் டெம்போ ஓட்டுநர் மற்றும் 3 சிறுவர்கள் உட்பட மொத்தம் 4 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். தேசத்தையே உலுக்கிய நிர்பயா வழக்குக்கு பிறகு எத்தனையோ கடுமையான சட்டப் பிரிவுகள் வந்தபோதிலும், டெல்லியில் பெண்களுக்குப் பாதுகாப்பு என்பது இன்னும் எட்டாக்கனியாகவும், தொடர் கேள்விக்குறியாகவுமே நீடிக்கிறது. சிறுமியை கொடூரமாக சிதைத்த இந்தக் காம மிருகங்களுக்கு உச்சகட்ட தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதே ஒட்டுமொத்த தேசத்தின் எதிர்பார்ப்பாக உள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved