Also Watch
Read this
சென்னையின் முக்கிய சாலைகளை தரம் உயர்த்தும் மாதிரி சாலை திட்டத்தின் டெண்டரை திடீரென ரத்து செய்து, அடுத்த 48 மணி நேரத்திற்குள் CUMTA நிர்வாகம் புதிய டெண்டர் வெளியிட்டிருப்பது சந்தேகங்களை எழுப்பி உள்ளது. இணையதள கோளாறால் ஒரே ஒரு நிறுவனம் மட்டுமே விண்ணப்பித்திருந்ததால், அனைவருக்கும் சம வாய்ப்பு தரவே இந்த நடவடிக்கை என அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். இருப்பினும், குறிப்பிட்ட நிறுவனத்திற்கு சாதகமாக விதிகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதா? என சமூக ஆர்வலர்கள் கேள்விகளை எழுப்பி உள்ளனர்.

மாதிரி நகர்ப்புற இயக்க வழித்தடங்கள் திட்டம்
தலைநகர் சென்னையின் போக்குவரத்து நெரிசலுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், சிங்கார சென்னையை உலகத்தரத்திற்கு உயர்த்தவும் தமிழ்நாடு அரசு அறிவித்த மெகா பிளான் தான் இந்த மாதிரி நகர்ப்புற இயக்க வழித்தடங்கள் திட்டம். பாதசாரிகளுக்கு பிரத்யேக நடைபாதை, தனி மிதிவண்டி தடங்கள், நவீன பொதுப்போக்குவரத்து என சென்னையின் முக்கிய சாலைகளின் முகச்சாயலையே மாற்ற திட்டமிட்டது CUMTA எனப்படும் சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து அதிகார அமைப்பு.

அதிகாரப்பூர்வ டெண்டர்
கடந்த ஆகஸ்ட் 11-ம் தேதி அன்று, இந்த மெகா திட்டத்திற்கான திட்ட அறிக்கை தயாரிப்பதற்காக சர்வதேச மற்றும் தேசியளவிலான Consultant நிறுவனத்தை தேர்வு செய்ய அதிகாரப்பூர்வ டெண்டர் கோரப்பட்டது. சுமார் ஒரு மாதத்திற்கும் மேலாக நடைமுறையில் இருந்த இந்த டெண்டர், கடந்த 16ம் தேதி திடீரென ரத்து செய்யப்பட்டது. அதுவும், எந்தவித காரணமும் குறிப்பிடப்படாமல் ரத்து செய்யப்படுகிறது, மறு டெண்டர் விடப்படும் என்று ஒற்றை வரியில் தூக்கி அடிக்கப்பட்டதுதான் அதிர்ச்சியின் முதல் அத்தியாயம்.

48 மணி நேரத்திற்குள்...
டெண்டர் ரத்தான அடுத்த 48 மணி நேரத்திற்குள் புதிய மறு டெண்டர் விளம்பரம் நாளிதழ்களில் வெளியான உடனே, ஏன் இந்த அவசரம்? பின்னணியில் என்ன நடக்கிறது? என சமூக ஆர்வலர்கள் மத்தியிலும், அரசியல் வட்டாரத்திலும் கேள்விகள் தீப்பொறியாக பறக்க தொடங்கி விட்டன. வழக்கமாக ஒரு அரசு டெண்டர் ரத்து செய்யப்பட்டால், அதற்கு பின்னால் தொழில்நுட்பக் கோளாறா, நிர்வாக காரணங்களா அல்லது நிதி சிக்கலா என தெளிவான விளக்கம் தருவதுதான் அரசு நடைமுறை. ஆனால், இதில் எந்த காரணமும் சொல்லாமல் ரகசியம் காப்பதுதான், வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டிய இடத்தில் சந்தேக புயலையே கிளப்பியிருக்கிறது.

அடுக்கடுக்கான கேள்விகள்
அடுத்ததாக, இந்த அவசர மறு டெண்டர் பின்னணியில் ஏதேனும் டீலிங் உள்ளதா? என்ற கேள்வியும் எழுகிறது. குறிப்பிட்ட ஒரு நிறுவனத்திற்கு பயனளிக்கும் வகையில் விதிகளையும், நிறுவனங்களின் முந்தைய ஆண்டு Turnover போன்ற தகுதி நிபந்தனைகளையும் மாற்றுவதற்காகத்தான் இந்த நாடகமா? என சமூக ஆர்வலர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள்.

குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு சாதகமாக தகுதியை தளர்த்தவோ அல்லது சில நிறுவனங்களை வெளியேற்றவோதான் இந்த திடீர் திட்டமா? வெறும் திருத்தங்கள் செய்து காலக்கெடுவை நீட்டித்திருந்தாலே மற்ற நிறுவனங்கள் விண்ணப்பித்திருக்க முடியும். அதை விட்டுவிட்டு, 48 மணி நேரத்திற்குள் புதிய டெண்டர் எண்ணுடன் அவசரமாக களமிறங்க வேண்டிய அவசியம் என்ன? என்ற அடுக்கடுக்கான கேள்விகள் எழுந்திருக்கிறது.

மின்னஞ்சல் வாயிலாக அதிகாரப்பூர்வ புகார்
பொது மக்களின் வரிப்பணம் வெளிப்படையாக கையாளப்படுகிறதா? என்ற சந்தேகம் பூதாகரமான நிலையில், இந்த சர்ச்சை குறித்து CUMTA உறுப்பினர் செயலாளர் விளக்கமளித்துள்ளார். அரசு மின் டெண்டர் இணையதளம் திடீரென தொழில்நுட்ப கோளாறால் முடங்கியதால், ஆர்வமாக இருந்த பல முன்னணி நிறுவனங்களால் கடைசி நேரத்தில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியவில்லையாம். இணையதள முடக்கத்தால் ஒரே ஒரு நிறுவனம் மட்டுமே வெற்றிகரமாக தங்கள் ஒப்பந்த புள்ளியை பதிவு செய்திருந்ததாம். மற்ற 6 முன்னணி நிறுவனங்கள், எங்களால் விண்ணப்பிக்க முடியவில்லை, வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது என CUMTA-வுக்கு மின்னஞ்சல் வாயிலாக அதிகாரப்பூர்வ புகார்களை பறக்கவிட்டுள்ளன.

CUMTA விளக்கமளித்துள்ளது
அரசு விதிகளின்படி ஒரே ஒரு நிறுவனம் மட்டுமே இருக்கும்போது டெண்டரை இறுதி செய்ய முடியாது என்பதாலும், வெளிப்படைத்தன்மையையும், ஆரோக்கியமான போட்டியையும் உறுதி செய்யவுமே டெண்டர் ரத்து செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாரையும் ஒதுக்கி வைக்காமல், தகுதியான அனைத்து நிறுவனங்களுக்கும் சம வாய்ப்பளிக்கும் நோக்கிலேயே அக்டோபர் 22 வரை புதிய கால அவகாசத்துடன் மறு டெண்டர் விடப்பட்டுள்ளதாக CUMTA விளக்கமளித்துள்ளது.

விளக்கம் நியாயமானதா?
இருப்பினும், அதிகாரிகள் தரப்பில் தொழில்நுட்ப கோளாறு என சமாதானம் சொன்னாலும், அடுக்கடுக்கான சந்தேக கணைகளால் இந்த சர்ச்சை புயல் ஓய்ந்தபாடில்லை. அப்படியென்றால், டெண்டர் ரத்து செய்யப்பட்டபோதே இந்த விளக்கத்தை வெளிப்படையாக கொடுக்காமல் மறைத்தது ஏன்? சர்ச்சைகள் வெடித்து, கேள்விகள் எழுந்த பிறகுதான் இந்த சம வாய்ப்பு எண்ணம் வந்ததா? என்ற கேள்விகள் முன்வைக்கப்படுகின்றன. அரசு தரப்பின் இந்த விளக்கம் நியாயமானதா? அல்லது பின்னணியில் ஏதேனும் முறைகேடு உள்ளதா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
நியூஸ் தமிழ் செய்திகளுக்காக பாஸ்கர் பாண்டியன்...
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved