news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews
tv

Also Watch

VOC மார்க்கெட்டில் ரூ.35 கோடி ஊழல், லஞ்ச வீடியோ லீக், அதிர்ச்சியில் அதிகாரிகள்

காவல்துறை மௌனம் காப்பது ஏன்?

33

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

மக்களின் வரிப்பணத்தில் உருவான, சேலம் வ.உ.சி. ஸ்மார்ட் சிட்டி சந்தை, தற்போது 35 கோடி ரூபாய் மெகா ஊழல் மையமாக மாறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. போலி சங்கம் ஒன்றை தொடங்கி, திமுக பிரமுகர் வெங்கடேசன் இடம்பெற்ற சிண்டிகேட் கும்பலால் அரங்கேற்றப்பட்ட இந்த மோசடியின் வீடியோ ஆதாரங்கள், நியூஸ் தமிழ் தொலைக்காட்சியில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஊழலின் ஸ்மார்ட் மையம்
பொது மக்களின் வரிப்பணத்தில் உருவான ஸ்மார்ட் சிட்டி மார்க்கெட், தற்போது ஊழலின் ஸ்மார்ட் மையமாக உருவெடுத்திருக்கிறது. சேலத்தின் இதய துடிப்பான வ.உ.சி. மார்க்கெட்டை, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கடந்த 2023 ஜூன் மாதம் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். ஆனால், திறந்த சில மாதங்களிலேயே அங்கு கடைகள் ஏலம் விடுவதில் முறைகேடு தொடங்கி விட்டதாக முணுமுணுக்கப்பட்டது.

இடைக்கால தடை
2023 நவம்பரில் நடந்த ஏலத்தில், லோகேஷ் என்கிற லோகநாதன் என்பவர் 9 கோடியே 11 லட்சம் ரூபாய்க்கு கடைகளை ஏலம் எடுத்திருக்கிறார். முதல் வருடத்திற்கான தொகையை சரியாக கட்டியவர், 2ஆம் ஆண்டுக்கான வாடகையை செலுத்தாமல் மாநகராட்சிக்கு தண்ணி காட்ட தொடங்கியிருக்கிறார். இதனால், கடுப்பான மாநகராட்சி நிர்வாகம் மறு ஏலம் விட தயாரானபோது, சட்டத்தின் சந்து பொந்துகளில் நுழைந்த லோகேஷ், 6 மாதங்களுக்கு முன்பே நீதிமன்றத்தில் ஒரு இடைக்கால தடையை வாங்கி வந்து மாநகராட்சியிடம் நீட்டியுள்ளார்.

வசூல் வேட்டை
இந்த ஒரு தடையால், கடந்த 6 மாதங்களில் மட்டும் சேலம் மாநகராட்சிக்கு ஏற்பட்ட வருவாய் இழப்பு சுமார் 10 கோடி ரூபாய் என புள்ளி விவரங்கள் கூறுகின்றன. விதிகளின்படி பார்த்தால், நீதிமன்ற தடையை காட்டி ஒவ்வொரு கடையிலிருந்தும் நாளொன்றுக்கு வெறும் 100 ரூபாயை மட்டுமே மாநகராட்சி வசூலித்து வருகிறது.

ஆனால், திரைக்கு பின்னால் நடக்கும் வசூல் வேட்டையோ வேறு ரகம். மாநகராட்சி அதிகாரப்பூர்வமாக ஒதுக்கிய கடைகளை தாண்டி, சந்தையின் ஆக்கிரமிப்பு பகுதிகளில், ’உனக்கு கடை போட்டு தருகிறேன்,’ என விவசாயிகளிடமும், வியாபாரிகளிடமும் ஆசை வார்த்தை கூறி, ஒரு கடைக்கு 10 லட்சம் முதல் 40 லட்சம் ரூபாய் வரை வசூலித்திருக்கிறார் லோகேஷ். இப்படி கறந்த பணம் மட்டும் சுமார் 35 கோடி ரூபாய் என்கிறார்கள்.

போலியாக ஒரு சங்கம்
இந்த மெகா வசூல் வேட்டையை லோகேஷ் மட்டும் தனியாக செய்யவில்லையாம். இதற்காகவே, வ.உ.சி. மார்க்கெட் அனைத்து வியாபாரிகள் நலச்சங்கம் என்ற பெயரில் ஒரு போலி சங்கத்தை உருவாக்கி, அதற்கு தானே கெளரவ தலைவராகவும் அமர்ந்து கொண்டார்.

இந்த மாஃபியா கும்பலில் தலைவராக திமுக பிரமுகர் வெங்கடேசன், செயலாளராக எஸ்.எம்.கே முருகேசன், பொருளாளராக கே.எம் தமிழ்ச்செல்வன், சுங்க கட்டணம் வசூல் செய்ய செந்தில் என

தங்களுக்கு தாங்களே பதவிகளை பங்கிட்டுகொண்டு, ஒரு பக்கா சிண்டிகேட் அமைத்து இந்த 35 கோடி ரூபாய் மோசடியை அரங்கேற்றியுள்ளனர்.

இதற்கான வீடியோ ஆதாரங்கள் தற்போது நியூஸ் தமிழ் தொலைக்காட்சிக்கு கிடைத்துள்ளன.

தொடர்ந்து வசூல் வேட்டை
லட்சக்கணக்கில் பணத்தை இழந்து நடுத்தெருவில் நிற்கும் வியாபாரிகள், சேலம் நகர காவல்நிலைய குற்றப்பிரிவில் கண்ணீரோடு புகாரளித்தனர். ஆனால், காக்கிகள் தரப்பிலோ மெளனம் காக்கப்பட்டு வரும் நிலையில், இதுவரை FIR கூட பதியாமல் தயங்குவது ஏன்? என்ற கேள்வியும் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

உண்மைகளை மறைத்து, இந்த சிண்டிகேட் தொடர்ந்து தங்களது வசூல் வேட்டையை நடத்தி வருவது சேலம் மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்திருக்கிறது.

அரசு மீட்டுத்தருமா?
போலி சங்கத்தின் பெயரில், தங்களின் உழைப்பை உறிஞ்சிய இந்த ஊழல் சிண்டிகேட் மீது நடவடிக்கை பாயுமா? புரையோடி போயிருக்கும் சட்ட சிக்கல்களை உடைத்தெறிந்து, வெளிப்படையான மறு ஏலம் நடத்தி தாங்கள் இழந்த பணத்தை அரசு மீட்டு தருமா? என்று கொந்தளிப்புடன் கேள்வி எழுப்புகின்றனர் சேலம் மக்கள்.

Related Link
வட்டாட்சியர் பெயரை கூறி, ரூ.3.50 லட்சம் வாங்கிய கிராம உதவியாளர்

வட்டாட்சியர் பெயரை கூறி, ரூ.3.50 லட்சம் வாங்கிய கிராம உதவியாளர்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அமைச்சர் கீர்த்தனாவிடம் மன்னிப்பு கேட்ட கனிமொழி

28
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved