Also Watch
Read this
பள்ளி இடைநிறுத்தலுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், ஊட்டச்சத்தை அளிக்கவும் தொடங்கப்பட்ட காலை உணவு திட்டம், தற்போது பெருந்தலைவர் காமராஜர் பெயரில் 6 முதல் 8ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்பட்டு உள்ளது. திட்ட விரிவாக்கத்தை சென்னையில் தொடங்கி வைத்த முதலமைச்சர் விஜய் பள்ளிக் குழந்தைகளுக்கு தனது கரங்களாலேயே உணவு பரிமாறியதோடு, மாணவர்களுடன் அமர்ந்து தாமும் உணவருந்தி மகிழ்ந்தார்.

காலை உணவுத்திட்டம் விரிவாக்கம்
பள்ளிக் குழந்தைகளிடையே ஊட்டச் சத்து குறைபாட்டை தடுப்பது, மாணவ, மாணவிகளின் பள்ளி வருகையை அதிகரிப்பது, இடைநிற்றல் இல்லாத தொடர்ச்சியான கல்வியை வழங்குவது என்ற உயரிய நோக்கத்துடன் செயல்படுத்தப்பட்ட காலை உணவு திட்டத்துக்கு பெருந்தலைவர் காமராஜர் பெயர் சூட்டப்பட்டு, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 6 முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கும் விரிவுபடுத்தப்படுள்ளது.

முதல்வர் விஜய்
பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்ட விரிவாக்கத்தை, சென்னை திருவான்மியூரில் உள்ள காந்திகிராமம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார். வேட்டி, சட்டை அணிந்து வந்த முதலமைச்சர் விஜய், தனது கரங்களாலேயே மாணவ, மாணவிகளுக்கு சர்க்கரை பொங்கலை பரிமாறி திட்டத்தை தொடங்கி வைத்தார்.

மாம்பழமாம் மாம்பழம் என்ற RHYMES
மாணவ, மாணவிகளுடன் சேர்ந்து தரையில் அமர்ந்து உணவருந்திய முதலமைச்சர் விஜய், பின்னர் ஒவ்வொரு வகுப்பறையாக சென்று அங்கு உணவருந்திக் கொண்டிருந்த மாணவர்களை சந்தித்து உணவு சுவையாக உள்ளதா? என்று கேட்டு கலந்துரையாடினார். அப்போது முதலமைச்சரை பார்த்து உற்சாகமடைந்த குழந்தைகள், மாம்பழமாம் மாம்பழம் என்ற RHYMES பாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

19.34 லட்சம் மாணவர்களுக்கு...
கடந்த 2022ல் முந்தைய திமுக ஆட்சியின் போது அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒன்று முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் மூலம் 37,447 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், 19.34 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு வழங்கப்பட்டு வந்தது.

காமராஜர் பெயரில்...
தவெக ஆட்சி அமைந்த பிறகு காலை உணவுத் திட்டத்துக்கு காமராஜர் பெயர் சூட்டப்பட்டு 6 முதல் 8ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கும் விரிவாக்கம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. தந்தை பெரியாரின் பிறந்தநாளான கடந்த செப்டம்பர் 17ஆம் தேதி தொடங்கிவைக்கப்பட இருந்த திட்டம், முதலமைச்சரின் லண்டன் பயணத்தால் ஒத்தி வைக்கப்பட்டு 22ஆம் தேதியன்று தொடங்கி வைக்கப்பட்டது.

ரூ.724 கோடி ஒதுக்கீடு
இதன் மூலம் கூடுதலாக 7,537 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், 15.30 லட்சம் மாணவ, மாணவிகள் பயன்பெறுவார்கள். ஒட்டுமொத்தமாக இத்திட்டத்தின் மூலம் 44,984 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், 34.64 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு வழங்கப்படும். இத்திட்டத்துக்காக ஒட்டுமொத்தமாக 724 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் காரணமாக, தேர்தல் நடத்தை விதிகளால் செங்கல்பட்டு, திருப்பூர் மாவட்டங்களில் மட்டும் காலை உணவு திட்ட விரிவாக்கம் செயல்படுத்தப்படவில்லை.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved