Also Watch
Read this
ஜெம் வீரமணி வழக்கில் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ள அருண் ஐ.பி.எஸ். உள்ளிட்ட காவல் அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்ய சண்முகம் வலியுறுத்தி உள்ளார். சாட்சிகளை கலைக்க வாய்ப்பிருப்பதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நீதிபதி உத்தரவிட்டதன்...
இதுதொடர்பாக, மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சண்முகம் கூறியதாவது;
ஆகஸ்ட் 19ஆம் தேதி, போக்சோ நீதிமன்ற நீதிபதி, ’குளோஷர் ரிப்போர்ட்டை ஏற்க மாட்டேன், மீண்டும் விசாரணை செய்யுங்கள்,’ என்று உத்தரவிட்டதன் அடிப்படையில் தான் இது பூதாகரமாக கிளம்பி இருக்கிறதே தவிர, இடைத்தேர்தலுக்கும் இதற்கும் எந்த சம்மந்தமும் இல்லை.

வழக்கை முடித்து வைக்க முடியுமா?
திமுக ஆட்சிப் பொறுப்பில் இருந்த காலத்தில் புகார் அளிக்கப்படுகிறது. முறையாக எஃப்ஐஆர் பதிவு செய்யப்படுகிறது. எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டதற்குப் பிறகு ஏன் மேல் விசாரணை நடத்தப்படவில்லை? வீடியோ என்பது தெளிவாக இல்லை என்கிற ஒற்றைக் காரணத்தைச் சொல்லி இவ்வளவு பெரிய வழக்கை முடித்து வைக்க முடியுமா? என்கிற கேள்வியை எழுப்ப விரும்புகிறேன். அப்படியென்றால் இதற்கான அரசியல் அழுத்தத்தைக் கொடுத்தது யார்?

காங்கிரஸ் நிர்வாகி புகார்
திமுக ஆட்சியில் இருந்த காலத்தில், 2024ஆம் ஆண்டு நவம்பர் மாதமே இந்த புகார் எழுத்துப் பூர்வமாகக் கொடுக்கப்பட்டு, எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டதாக காங்கிரஸ் நிர்வாகி, இப்போது சொல்கிறார். எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு விசாரணையே நடத்தப்படாமல் ஆதாரங்கள் இல்லை, ஆவணங்கள் இல்லை, தெளிவாக இல்லை என்கிற பெயரில் இந்த வழக்கை முடிப்பதற்கு திமுக ஆட்சி காலத்தில் முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.

கடந்து செல்ல முடியாது...
ஆகவே, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், இதை அவ்வளவு சுலபமாக, இன்றைக்கு அறிக்கை விட்டிருப்பதைப் போல கடந்து சென்றுவிட முடியாது. தன்னுடைய ஆட்சி காலத்தில் பெரிய வலைப்பின்னலைப் போல ஒரு பாலியல் குற்றம் நிகழ்ந்திருக்கிற போது,

அதற்கான தார்மீகப் பொறுப்பை, ‘என்னுடைய ஆட்சிக்காலத்தில் உரிய முறையில் விசாரணை நடத்தாததற்கு நான் பொறுப்பேற்கிறேன், அதற்கு காரணமான அதிகாரிகள், அல்லது உரிய முறையில் என்னுடைய கவனத்திற்கு இந்தப் பிரச்சனை கொண்டு வரப்படவில்லை,’ என்ற முறையில் தான் அவர் பதில் சொல்வது நேர்மையாக இருக்குமே தவிர, இதில் எங்களுக்கு எந்தவிதமான சம்மந்தமும் இல்லை என்று கடந்து போவதனால் இந்தப் பிரச்சனையை மூடி மறைத்துவிட முடியாது.

கூட்டு சதி...
ஆகவே, அதிமுக ஆட்சி, திமுக ஆட்சி, அந்தந்த காலகட்டத்தில் இருந்த காவல்துறை அதிகாரிகள், இவர்கள் அனைவருக்கும் இதிலே ஒரு கூட்டுச் சதி செய்து குற்றத்தை மூடி மறைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர்.

பல கோடிக்கணக்கான ரூபாய் இதிலே கைமாற்றப்பட்டு உள்ளது. இது வழக்கமான காவல்துறை மூலமாக விசாரணை நடத்தப்படுவது என்பது முழுமையான உண்மையை வெளிக்கொண்டு வருவதற்கு உதவி செய்யாது.
இவ்வாறு சண்முகம் கூறி உள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved