news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news
tv

Also Watch

இது தாமரை விதைகள் இல்லையா? பஞ்சுபோன்று வெடித்து விழும் மக்கானா

விதை முதல் விவசாயம் வரை வியப்பு தான்

41

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

பீகார் மாநில பாரம்பரியத்தின் ஒன்றாக உள்ள மக்கானா பலரது ஸ்நாக்ஸ் பட்டியலில் தவறாமல் இடம்பிடித்து வரும் நிலையில் அது தயாரிக்கப்படும் முறைகள் சற்று சவால் நிறைந்ததாகவும், சுவாரசியமாகவும் உள்ளது. கருப்பு நிற விதைகள் எப்படி பால்போன்று வெள்ளை நிற மக்கானாவாக வெடித்து வெளியேறுகிறது? அதனை விற்பனைக்கு கொண்டு வர ஆகும் காலம் என்ன? அதன் பின்னால் இருக்கும் தொழிலாளர்களின் உழைப்பு எப்படிப்பட்டது?

சத்தான சிற்றுண்டி
பார்க்க பஞ்சு போன்று குண்டு குண்டாக இருக்கும் இதனை பலரும் தாமரை விதைகளில் இருந்து தயாரிக்கப்படும் பாப்கார்ன் போன்ற ஒரு சிறுதீனி என்றே நினைப்பதுண்டு. ஆனால் அதுதான் இல்லை. Euryale ferox என்ற நீர்வாழ் தாவரத்தின் விதையில் இருந்து தயாரிக்கப்படும் மக்கானா என்ற சத்தான சிற்றுண்டி.

சவால் நிறைந்த சாகுபடி
பீகார் என்றாலே வரலாற்று சிறப்புமிக்க நாளந்தா, புத்தர், மிதிலா ஓவியங்கள் உள்ளிட்டவை தான் கண்முன் வரும். இந்த வரிசையில் தற்போது உலக அளவில் மக்கானா விவசாயமும் கவனம் பெற்றுள்ளது. பெரும்பாலான விவசாயங்கள் நிலத்தை சார்ந்தே இருக்கும் நிலையில் மக்கானா நீருக்குள் விளைவதுதான் அதன் தனிச்சிறப்பு.

‘Fox Nut, Gorgon Nut’ உள்ளிட்ட பெயர்களாலும் அழைக்கப்படும் இந்த மக்கானா பீகாரின் வடக்கு மாவட்டங்களில் உள்ள குளங்கள், நீர்நிலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் அதிக அளவில் பயிரிடப்படுகிறது. நீரின் மேற்பரப்பில் பரந்து விரிந்து கிடக்கும் இந்த செடியின் தண்டுகளில் காணப்படும் முள்போன்ற கூர்மையான அமைப்பு சாகுபடியை சவால் நிறைந்தாகவே ஆக்குகிறது.

கடினமான விதைகள்
சுமார் 8 மாதங்கள் உழைப்புடன் கூடிய பல படிநிலைகளை கடந்தால்தான் மக்கானாவை வெள்ளை நிறத்தில் பாக்கெட்டிலேயே அடைத்து சந்தைப்படுத்த முடியும். முதலில் செடியாக வளர்ந்து, பூக்களாக மலர்ந்து, பின்னர் பழமாக கனிந்து, இறுதியில் முதிர்ந்து விதைகள் நீருக்குள் விழும். நீர்நிலையின் அடிப்பகுதியில் படியும் இந்த விதைகளை சேகரிப்பதுதான் மக்கானா விவசாயத்தின் மிகவும் கடினமான கட்டம்.

இதனை சேகரிக்க யார் வேண்டுமானாலும் நீருக்குள் இறங்கிவிட முடியாது. திறன் மிகுந்த வேலையாட்கள்தான் லாவகமாக சேகரிக்க முடியும். சேறு, நீருக்குள் சூழ்ந்து கிடக்கும் மற்ற செடிகள், மக்கானா செடியின் முட்கள் என பல சிரமங்களுக்கு மத்தியில்தான் கருப்புநிற குன்றிமணி போன்ற கடினமான விதைகளையே தொழிலாளர்கள் சேகரிப்பார்கள்.

பதத்திற்கே வரும் மக்கானா
மாதக்கணக்கில் நீருக்குள்ளேயே ஊறிப்போய் கிடந்த அந்த விதைகளை வெயிலில் உலர்த்தி அதனை அளவுவாரியாக தரம் பிரிப்பார்கள். அதோடு மக்கானா தயாராகிவிடுமா? அடுத்துதான் முக்கிய பிராசஸ். தகதகவென எரியும் நெருப்பில் விதைகளை வறுப்பார்கள்.

முதல் வறுவலிலேயே சொல்பேச்சு கேட்கும் அளவுக்கு வெளிப்புற ஓடு ஒன்றும் அவ்வளவு வளைந்து கொடுக்காது. இந்த சூடெல்லாம் தனக்கு போதாது இன்னும் வேண்டும் என்பதுபோல் கருகருவென அப்படியேதான் விதைகள் இருக்கும். அதனால், முதல் வறுவலுக்கு பிறகு பதப்படுத்தும் தொழிலாளர்கள் சில நாட்களுக்குப் றகு மீண்டும் கடாயில் கொட்டி விதைகளுக்கு நெருப்பு காட்டுவார்கள். இரண்டாவது வறுவலில் அடம்பிடித்தால் அவ்வளவு சரியில்லை என்பதுபோல் அப்போதுதான் ஓரளவுக்கு பதத்திற்கே வரும் மக்கானா.

பால் போன்ற நிறத்தில்...
மீண்டும் வறுக்கப்பட்ட விதைகளின் சூடு ஆறியதும் அவற்றின் தலையில் சுத்தியலால் ஓங்கி அடிப்பார்கள் அந்த விவசாயத்தில் கை தேர்ந்தவர்கள். அப்போதுதான், கடினமான அந்த கருப்பு நிற ஓடுகளே ஒருவழியாக உடைந்து வெளியேறும். பால் போன்ற நிறத்தில் மக்கானாவும் தெறித்து விழும். அதன்பிறகுதான், அதில் உள்ள தூசிகள் நீக்கப்பட்டு கடைகளுக்கே வருகிறது. முந்தையகாலத்தில் எந்த மாசாலாவும் இல்லாமல் அப்படியே உண்ணப்பட்டு வந்த மக்கானா தற்போதைய காலகட்டத்திற்கு ஏற்ப உப்பு, மசாலா, பெரி பெரி உள்ளிட்ட சுவைகள் சேர்க்கப்பட்டு இணையவழி விற்பனை, சூப்பர் மார்க்கெட் மற்றும் ஏற்றுமதி நிறுவனங்கள் மூலம் விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிலோ எவ்வளவு?
பீகாரில் பிறக்கும் இந்த மக்கானா சென்னையில் ஒரு கிலோ ஆயிரம் முதல் 2 ஆயிரம் ரூபாய் வரை அதன் தரம் மற்றும் அளவு பொறுத்து விற்பனையாகிறது. அதேபோல், வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்படும் மக்கானா கிலோ ரூ.3,500 வரை விலை போகிறது.

அனைத்து பகுதிகளிலும் மக்கானாவை அத்தனை எளிதில் வளர்த்துவிட முடியாது. அதற்கான இயற்கை காரணி இருந்தால் மட்டுமே இயைந்து போகும். அந்த காரணிகள் எல்லாம் வட பீகாரில் உள்ள தர்பங்கா, மதுபனி, பூர்ணியா, கதிஹார், சஹர்சா, சுபால், மதுபுரா, அராரியா பகுதிகளில் இருப்பதால்தான் அங்கு அதிகமாக சாகுபடி செய்யப்படுகிறது.

புவிசார் குறியீடு
அதிலும், மிதிலா பகுதி மக்களின் வாழ்க்கையோடு பல நூற்றாண்டுகளாக பின்னிப் பிணைந்துள்ளது மக்கானா. அவை இல்லாமல் பாரம்பரிய உணவு, திருமண நிகழ்ச்சிகள், வழிபாடு உள்ளிட்ட எந்த நிகழ்வுமே இருக்காது. குறிப்பாக திருமணமாகி வீட்டிற்கு வரும் மணப்பெண்களுக்கு இதனை பரிசாக அளிக்கின்றனர்.

அதேபோல், மக்கானாவை பயன்படுத்தி லட்டு, ரைத்தா, பேல், கிச்சடி உள்ளிட்ட பல்வேறு உணவுப் பொருட்களும் செய்யப்படுகின்றன. மிதிலா மக்கானாவுக்கு 2022ம் ஆண்டு புவிசார் குறியீடு வழங்கப்பட்டதே அவர்களின் பாரம்பரியத்திற்கு கிடைத்த அங்கீகாரம்.

உலக அங்கீகாரம்
மக்கானாவில் புரதம், கார்போஹைட்ரேட் மற்றும் பல்வேறு கனிமச் சத்துக்கள் உள்ளதாக கூறப்படும் நிலையில் கொழுப்பும் குறைவாகவே உள்ளது. உடலுக்கு தேவையான ஆற்றல் கிடைப்பதுடன் குறைந்த அளவு சாப்பிட்டதுமே வயிறு நிறைந்த உணர்வையும் ஏற்படுத்தும்.

அதனால்தான் உடல் எடை குறைக்க விரும்புபவர்கள் இதனை விரும்பி உட்கொள்வார்கள். ஆனாலும், மக்கானா எந்த நோயையும் குணப்படுத்தும் மருந்து என்று கூறிவிட முடியாது. ஒரு காலத்தில் பீகாரின் குளங்களில் மட்டுமே அதிகமாக காணப்பட்ட மக்கானா இன்று விவசாயப் பொருளை தாண்டி உலக பிராண்டாக மாறியுள்ளது.

Related Link

"கேப்டன் ஸ்மித் மச்சார் ஒரு ஹீரோ" என பிரதமர் மோடி நெகிழ்ச்சிப் பதிவு

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஈராக்கிலிருந்து வெளியேறிய அமெரிக்கா, சதாம் உசேனை வீழ்த்தியது சாதனையா?

28
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved