உள்நாட்டு உற்பத்தியாளர்கள் புகாரில் DGTR நடவடிக்கை
சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 5 முக்கியப் பொருட்கள் மீது இந்தியா எதிர்-விலை குறைப்பு ((Anti-dumping)) விசாரணைகளைத் தொடங்கியுள்ளது. உள்நாட்டு உற்பத்தியாளர்கள் கொடுத்த புகார்களின் அடிப்படையில், வணிகத் தீர்வுகள் பொது இயக்குநரகம் ((DGTR)) இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
சீன நிறுவனங்கள் மிகக் குறைந்த விலையில் பொருட்களை இந்தியச் சந்தையில் குவிப்பதால் ((Dumping)), தங்களின் தொழில் கடுமையாகப் பாதிக்கப்படுவதாக உள்நாட்டு நிறுவனங்கள் குற்றஞ்சாட்டியுள்ளன.
இந்தி கற்றுக்கொள் அல்லது வேலையை விட்டு வெளியேறு
கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் சொமேட்டோ கிடங்கு மேற்பார்வையாளர், ஊழியர்கள் இந்தி கற்றுக்கொள்ள வேண்டும், இல்லையெனில் வேலையை விட்டு செல்லலாம் எனக் கூறிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், கன்னட அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
பதற்றத்தை தணிக்க மேற்பார்வையாளரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில், அவர் கன்னடத்தில் மன்னிப்பு கோரிய வீடியோவும் வெளியானது.
பாகிஸ்தானில் இருந்து டிரோன்கள் மூலம் போதைப்பொருள் கடத்தல்
பாகிஸ்தானில் இருந்து டிரோன்கள் மூலம் போதைப்பொருட்கள் மற்றும் ஆயுதங்களைக் கடத்தி வந்த கும்பலை ஜம்மு-காஷ்மீர் போலீசார் கைது செய்தனர். உளவுத்துறை கொடுத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், ஜம்மு-காஷ்மீரின் எல்லைப் பகுதியான ஆர்னியா பகுதியில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து கைத்துப்பாக்கிகள், தோட்டாக்கள் மற்றும் பல கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.