Also Watch
Read this
சென்னை போரூரில் நடைபெற்ற நற்பணி இயக்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில், நடிகர் சிவகார்த்திகேயன் பேசிய வீடியோ வெளியாகி உள்ளது.

பிரம்மாண்டமாக...
போரூரில், அரசியல் மாநாடு போன்ற பிரம்மாண்ட சூழலில், கடந்த ஞாயிறன்று, நடிகர் சிவகார்த்திகேயன் ரசிகர்களைச் சந்தித்துப் பேசினார்.

தமிழகம் முழுவதிலும் இருந்து வெள்ளைச் சட்டை அணிந்து வந்திருந்த சுமார் 2,000க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் இடையே உரையாற்றிய சிவகார்த்திகேயன், சினிமா மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த பல முக்கியமான அறிவுரைகளையும் கருத்துகளையும் பகிர்ந்து கொண்டார்.

மக்களால் உருவாக்கப்பட்ட நடிகர்
இந்த இடத்திற்கு, தான் வந்ததற்கு தமது தனிப்பட்ட உழைப்பு மட்டும் காரணமல்ல என்று குறிப்பிட்ட சிவகார்த்திகேயன், "நான் 'செல்ஃப் மேட்' ஸ்டார் கிடையாது, மக்களாகிய உங்களால் உருவாக்கப்பட்ட 'பீப்பிள் மேட்' ஸ்டார்," என்று உணர்ச்சிப்பூர்வமாக பேசி, தமது ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.

விமர்சனங்களுக்கு பதிலடி
திரையுலகில், தனக்கு எதிராக வரும் விமர்சனம் மற்றும் எதிர்மறை கருத்து குறித்துப் பேசிய நடிகர் சிவகார்த்திகேயன், "குறை சொல்கிறவர்கள் எதைச் செய்தாலும் குறை சொல்லிக் கொண்டு தான் இருப்பார்கள்.

ஒரு நதி எவ்வாறு தனக்கான பாதையைத் தானே உருவாக்கிக் கொண்டு ஓடுகிறதோ, அதேபோல நாம் மற்றவர்களின் எதிர்மறைப் பேச்சுகளைக் கண்டு, திசை மாறாமல் நம்முடைய பணிகளைச் சரியாகச் செய்துவிட்டுப் போய்க் கொண்டே இருக்க வேண்டும்," என்று விமர்சனங்களுக்கு பதிலடி தந்தார்.

ரசிகர்களுக்கு அட்வைஸ்
சினிமா கொண்டாட்டங்களுடன் நிறுத்திக் கொள்ளாமல், ரசிகர்கள் தங்களின் தனிப்பட்ட வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்று, நடிகர் சிவகார்த்திகேயன் வலியுறுத்தினார்.

வாழ்க்கையில் எதைச் செய்தாலும், எந்தக் சூழ்நிலையிலும் தங்களது குடும்பத்திற்குத் தான் முதல் முன்னுரிமை தர வேண்டும். சமூக வலை தளங்களில் வீணாக அதிக நேரத்தைச் செலவிடுவதைக் குறைத்துக் கொள்ள வேண்டும்.

அதற்கு மாற்றாக, சிந்தனைத் திறனை வளர்க்கும் வகையில் தினமும் குறைந்தபட்சம் 15 நிமிடங்களாவது புத்தகங்களை வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். ரசிகர்கள் தங்களது கல்வியில் அதிக கவனம் செலுத்த வேண்டும், நன்றாக உழைத்துச் சம்பாதித்து தங்களை உயர்த்திக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

கவனம் ஈர்த்த கூட்டம்
இந்தக் கூட்டத்தின் நுழைவாயில் கோட்டை போல வடிவமைக்கப்பட்டிருந்தது. ரசிகர்கள் அனைவரும் அரசியல் கட்சித் தொண்டர்களைப் போல ஒரே மாதிரியான வெள்ளைச் சீருடையில் திரண்டிருந்தனர். இதனால், நடிகர் சிவகார்த்திகேயன் அரசியலில் நுழையப் போகிறாரா? என்ற விவாதம் எழுந்து உள்ளது.

இந்த கூட்டத்தில் அரசியல் ரீதியாக நேரடியாக எதுவும், சிவகார்த்திகேயன் பேசவில்லை. "மக்களுக்கு முடிந்த நற்பணிகளைத் தொடர்ந்து செய்ய வேண்டும்," என்ற நோக்கில் மட்டுமே இந்தக் கூட்டம் நடத்தப்பட்டதாக நிர்வாகிகள் கூறி உள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved