Also Watch
Read this
பெரம்பூர் தொகுதியில் வெற்றி பெற்றதை எதிர்த்து தாக்கலான தேர்தல் வழக்கை நிராகரிக்க கோரிய முதலமைச்சர் விஜய் வழக்கில், அக்டோபர் 14ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது. அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது.

பெரம்பூர் சட்டப்பேரவைத் தொகுதியில்...
பெரம்பூர் தொகுதியில், 53 ஆயிரத்து 715 வாக்குகள் வித்தியாசத்தில் முதலமைச்சர் விஜய் வெற்றி பெற்றதை எதிர்த்து, தொகுதி வாக்காளர் தினேஷ், சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கை தாக்கல் செய்தார். இந்த வழக்கை நிராகரிக்கக் கோரி, முதல்வர் விஜய் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை நீதிபதி வி.லட்சுமி நாராயணன் விசாரித்தார். விஜய் தரப்பில், வேட்புமனுவில் அனைத்து தகவல்களையும் தெரிவித்து உள்ளதாகவும், எந்த தகவலையும் மறைக்கவில்லை என்றும் வாதிடப்பட்டது.

ரூ.30 கோடி சொத்து...
தேர்தல் வழக்கை தாக்கல் செய்திருந்த வாக்காளர் தினேஷ் தரப்பில் கூறி இருப்பதாவது;
முதல்வர் விஜய் தனது வேட்புமனுவில், பண்ரூட்டியில் வாங்கியிருந்த 30 கோடி ரூபாய் மதிப்பிலான விவசாய நிலம் குறித்த விவரங்களை தெரிவிக்கவில்லை. தகவல்களை மறைத்தது, வாக்காளர்கள் சுதந்திரமாக முடிவெடுக்கும் திறனில் தேவையில்லாத தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. வேட்புமனுவில் தகவல்களை மறைப்பது, வாக்காளர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்துவது தான் என சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பளித்துள்ளது.
அரசு புறம்போக்கு நிலம்
கொடைக்கானல் வில்பட்டி கிராமத்தில் வாங்கியுள்ளதாகக் கூறியுள்ள 50 சென்ட் நிலம், வருவாய் துறை ஆவணங்களின்படி, அரசு புறம்போக்கு நிலம்.
வேட்புமனுக்களில் குற்ற வழக்குகளை மறைப்பது எப்படி விதிமீறலோ, அதேபோல சொத்து விவரங்களை மறைப்பதும் விதிமீறல் மட்டுமல்ல ஊழல் நடவடிக்கை. விவரங்கள் மறைத்தது குறித்து தேர்தல் அதிகாரி முழுமையான விசாரணை நடத்த முடியாது. தேர்தல் வழக்கில் தான் இதுகுறித்து விரிவாக விசாரிக்க முடியும் என்பதால், தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கூடாது.
இவ்வாறு மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

நீதிபதி கேள்வி
அப்போது குறுக்கிட்ட நீதிபதி லட்சுமிநாராயணன், ’ஆக்கிரமிப்பாளர் தேர்தலில் போட்டியிடுவதில் தகுதி இழப்பு ஏற்படுகிறதா? வில்பட்டி நிலம் தொடர்பாக விஜய், விற்பனை பத்திரத்தை வேட்புமனுவில் தாக்கல் செய்துள்ளாரே?’ எனவும் கேள்வி எழுப்பினார். அதற்கு தினேஷ் தரப்பில், வருவாய் துறை ஆவணங்களை தாக்கல் செய்துள்ளதாக விளக்கமளித்தார்.

எப்படி தாக்கத்தை ஏற்படுத்தும்?
முதல்வர் விஜய் தரப்பில் கூறியதாவது;
வேட்புமனுவில் தகவல்களை மறைத்தது வாக்காளர்கள் சுதந்திரமாக முடிவெடுப்பதில் தாக்கத்தை ஏற்படுத்தும் என சென்னை உயர் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு, குற்ற வழக்கு சம்பந்தப்பட்டது. விஜய் வசதிபடைத்தவர் என எல்லா வாக்காளருக்கும் தெரியும். அப்படி இருக்கும் போது, சொத்தை மறைத்ததாகக் கூறி, அது வாக்காளர் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தும் என எப்படி கூற முடியும்?
இவ்வாறு விஜய் தரப்பில் கூறப்பட்டது.

அக். 14ல் தீர்ப்பு
இந்நிலையில், தினேஷின் தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி முதல்வர் விஜய் தாக்கல் செய்த மனு மீதான அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்ததை அடுத்து, மனு மீதான தீர்ப்பை, அக்டோபர் 14ஆம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved