ஹோர்முஸ் நீரிணையில் ஏற்பட்டுள்ள பாதுகாப்பு சவால்கள் மற்றும் பிராந்திய பாதுகாப்பு குறித்து இந்தியா மற்றும் ஓமன் நாடுகளின் அதிகாரிகள் தீவிர ஆலோசனை நடத்தினர்.
டெல்லியில் நடைபெற்ற இந்தியா - ஓமன் 15-வது மூலோபாய ஆலோசனைக் குழு கூட்டத்தில் ஹோர்முஸ் நீரிணையில் வணிக கப்பல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் மற்றும் அங்கு நிலவும் பதற்றமான சூழல் குறித்து அதிகாரிகள் விரிவாக விவாதித்தனர்.
அரசியல் மற்றும் மூலோபாயக் கூட்டாண்மை, வர்த்தகம், முதலீடு, எரிசக்தி, டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் கலாச்சார உறவுகளை மேம்படுத்துவது குறித்தும் இரு தரப்பினரும் ஆய்வு செய்தனர்.
17,000 அடி உயரத்தில் விமானத்தை தாக்கிய மின்னல்
பாட்னாவில் இருந்து லக்னோவிற்கு சென்ற இண்டிகோ விமானம் நடுவானில் 17 ஆயிரம் அடி உயரத்தில் பறந்தபோது திடீரென்று மின்னல் தாக்கியது. இதில், விமானத்தின் முன்பகுதி சேதமடைந்த நிலையில், மின்னல் தாக்கியதை அறிந்த விமானிகள் உடனடியாக லக்னோ விமான நிலையத்துக்கு தகவல் தெரிவித்து அவசரமாக தரையிறக்க கோரிக்கை வைத்தனர்.
இதற்கு உடனடியாக ஒப்புதல் வழங்கப்படவே, திட்டமிட்டதை விட 8 நிமிடங்களுக்கு முன்பாக இண்டிகோ விமானம் பத்திரமாக தரையிறங்கியது. நல்வாய்ப்பாக, விமானி சாதுர்யமாக செயல்பட்டு தரையிறக்கியதால் அதிர்ஷ்டவசமாக 110 பேர் உயிர் தப்பினர்.
குருகுல பள்ளியில் விஷவாயு தாக்கி 4 மாணவர்கள் பலி
உத்தரப் பிரதேசத்தில் குருகுல பள்ளியின் தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்ய முயன்ற மாணவர்கள் 4 பேர் விஷவாயு தாக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மதுராவில் சமஸ்கிருத குருகுல பள்ளியில் உள்ள 12 ஆழமுள்ள நிலத்தடி தண்ணீர் தொட்டியில் இருந்து துர்நாற்றம் வீசவே, மாணவர்கள் சுத்தம் செய்ய முயன்றனர்.
அப்போது, முதலில் உள்ளே இறங்கிய மாணவர் விஷவாயு தாக்கி மயக்கமடைந்த நிலையில், அவரை மீட்பதற்காக அடுத்தடுத்து 4 மாணவர்கள் உள்ளே இறங்கினர். இதில், 3 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், ஒரு மாணவர் மீட்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.