Also Watch
Read this
சர்வதேச சந்தையிலும் இந்திய சந்தையிலும் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. முதலீட்டாளர்களும் ஆபரணப் பிரியர்களும் தங்கத்தின் விலையேற்றத்தை உன்னிப்பாக கவனித்து வரும் நிலையில், இணையதளங்களில் 2027ஆம் ஆண்டிற்கான ஒரு சுவாரஸ்யமான கணிப்பு காட்டுத்தீ போல பரவி வருகிறது.
பாபா வங்கா கணிப்பு
பல வரலாற்று நிகழ்வுகளை முன்கூட்டியே கணித்ததாகக் கூறப்படும் பல்கேரியாவைச் சேர்ந்த புகழ்பெற்ற தீர்க்கதரிசி பாபா வங்கா, 2027ல் தங்கத்தின் விலை பெரிய அளவில் உயரும் என்று கணித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேவேளையில், முன்னணி சர்வதேச வங்கிகளும் தங்கத்தின் எதிர்கால விலை குறித்து தங்களது கணிப்புகளை வெளியிட்டுள்ளன.

40% வரை விலை உயரும்?
இணையத்தில் பரவி வரும் தகவல்களின்படி, 2027ஆம் ஆண்டில் ஏற்படக்கூடிய உலகளாவிய நிதி நெருக்கடி அல்லது தீவிர பணப்புழக்கப் பற்றாக்குறை காரணமாக, பாரம்பரிய வங்கி அமைப்புகள் மீதான நம்பிக்கை குறையக்கூடும் என்று கூறப்படுகிறது. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை நோக்கிப் படையெடுப்பார்கள் என்றும், அதன் விளைவாக தங்கத்தின் விலை 25 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை உயர வாய்ப்புள்ளதாகவும் இணையதளங்களில் பதிவுகள் உலா வருகின்றன.

பார்வையை இழந்து...
1911ல் பிறந்து, தனது 12ஆவது வயதில் சூறாவளியில் சிக்கி பார்வையை இழந்த பல்கேரியாவைச் சேர்ந்த பாபா வங்கா, செப்டம்பர் 11 பயங்கரவாதத் தாக்குதல், செர்னோபில் விபத்து, இளவரசி டயானாவின் மறைவு, 2004 சுனாமி மற்றும் பிரெக்சிட் போன்ற முக்கிய உலக நிகழ்வுகளை கணித்ததாகக் கூறப்படுகிறது. எனினும், தங்கத்தின் விலையேற்றம் குறித்து பாபா வங்கா நேரடியாக கணித்ததற்கான எந்தவொரு அதிகாரப்பூர்வமான அல்லது எழுத்துப்பூர்வமான ஆதாரங்களும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
வங்கிகளின் கணிப்பின்படி...
மறுபுறம், சர்வதேச நிதி நிறுவனங்களான UBS மற்றும் Deutsche Bank ஆகியவை தங்கத்தின் விலை உயர்வு குறித்து அதிகாரப்பூர்வ கணிப்புகளை வெளியிட்டுள்ளன. UBS வங்கியின் கணிப்புப்படி, 2027ஆம் ஆண்டின் முதல் பாதியில் தங்கம் 10 கிராமிற்கு 1,763 டாலர்கள், அதாவது இந்திய மதிப்பில் சுமார் 1,69,049 ரூபாயைத் தொட வாய்ப்புள்ளது. அதேபோல, Deutsche Bank செப்டம்பர் மாத ஆய்வில், 2026ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டிற்குள் 10 கிராம் தங்கம் 1,622 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் சுமார் 1,55,525 ரூபாய் எட்டக்கூடும் என்று தெரிவித்து உள்ளது.

கணிப்பு, விவாதம்
இந்திய உள்நாட்டுச் சந்தையைப் பொறுத்தவரையில், செப்டம்பர் 30 நிலவரப்படி 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமிற்கு 1.46 லட்சம் ரூபாய் முதல் 1.50 லட்சம் ரூபாய் வரை நிலவி வருகிறது. சந்தை வல்லுநர்களின் கணிப்புகள் ஒருபுறம் இருக்க, பாபா வங்காவின் இந்தக் கணிப்பு தங்கம் வாங்குவோர் மற்றும் முதலீட்டாளர்கள் மத்தியில் பெரிய அளவிலான விவாதத்தை கிளப்பியுள்ளது.
பாபா வங்காவின் பெயரால் பரப்பப்படும் இத்தகைய கணிப்புகளுக்கு எழுத்துப்பூர்வ ஆதாரங்கள் எதுவும் இல்லை என்றாலும், சர்வதேச பொருளாதார சூழல் மற்றும் வங்கிகளின் கணிப்புகள் தங்கத்தின் விலை உயர்வையே சுட்டிக்காட்டுகின்றன.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved