10 மீட்டர் "ஏர் பிஸ்டல்" பிரிவில் உதய்வீர் சித்து அசத்தல்
உலக கோப்பை துப்பாக்கி சுடுதலில் இந்தியாவின் உதய்வீர் சித்து தங்கம் வென்றார். எகிப்து தலைநகர் கெய்ரோவில் நடைபெற்ற ஆண்களுக்கான தனிநபர் 10 மீட்டர் ‘ஏர் பிஸ்டல்’ தகுதிச் சுற்றில் இந்தியா சார்பில் அஜேந்திரா சிங் சவுகான், சரப்ஜோத் சிங், உதய்வீர் சித்து உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதில் 585.19 புள்ளிகளுடன் 3-வது இடம் பிடித்த உதய்வீர் இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார். இதில் அசத்திய உதய்வீர், 240.6 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து இந்தியாவுக்கு முதல் தங்க பதக்கத்தை பெற்றுத் தந்தார்.
ஆஸ்திரேலியா மகளிர் அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டி
ஆஸ்திரேலியா மகளிர் அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் வங்கதேச வீராங்கனை சோபானா மொஸ்டரி வரலாற்று சாதனை படைத்துள்ளார். இந்த போட்டியில் 134 பந்துகளில் 118 ரன்கள் விளாசியதின் மூலம், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒருநாள் சர்வதேச போட்டியில் சதமடித்த முதல் வங்கதேச வீராங்கனை என்ற பெருமையை பெற்றார்.
எனினும், அவரது அபாரமான ஆட்டம் வங்கதேச அணியின் வெற்றிக்கு உதவவில்லை. ஆஸ்திரேலியா 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது.
ஆஸ்திரேலியா "ஏ" அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டி
ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் இந்தியா ஏ அணி 49 ரன் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றி பெற்றது. எனினும், ஆஸ்திரேலியா ஏ அணி 2-க்கு 1 என தொடரை கைப்பற்றியது.
புதுச்சேரியில் நடைபெற்ற போட்டியில், டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய இந்தியா ஏ அணி 47.3 ஓவரில் 275 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியா ஏ அணி, 46.2 ஓவரில் 226 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி தோல்வியடைந்தது.