Also Watch
Read this
நெல்லை அருகே அரசு புறம்போக்கு நிலத்திற்கு பட்டா வாங்கி தருவதாககூறி, வழக்கறிஞர் தம்பதி ஏமாற்றியதாவும், அதனால்தான் ஒரு கூலித்தொழிலாளி பூச்சி மருந்து குடித்து உயிரை மாய்த்துக் கொண்டதாகவும் புகார் எழுந்துள்ளது.
கூலித்தொழிலாளி பூச்சி மருந்து குடித்தபோது எந்தவித பதற்றமும் இல்லாமல் வழக்கறிஞர் தம்பதி நின்று கொண்டிருந்த வீடியோ வெளியாகி உள்ள நிலையில், கூலித்தொழிலாளியின் 14 வயது மகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்படுகிறது.

அரசு புறம்போக்கு நிலத்தில்...
நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் பகுதியை சேர்ந்தவர் விவசாயி ராமசாமி. இவர், தனது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் அங்குள்ள ஒரு அரசு புறம்போக்கு நிலத்தில் வீடுகட்டி கடந்த சில ஆண்டுகளாக வாழ்ந்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில், அந்த நிலத்தை மீட்கக்கோரி அம்பை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார் வழக்கறிஞர் மலையரசி.
ரூ.10 லட்சம் தந்தால்...
மின் கட்டணம், குடிநீர் வரி என அனைத்தும் கட்டி வாழ்ந்து வருவதாகவும், பிள்ளை குட்டிகளுடன் இனி தான் எங்கு செல்ல முடியும் எனவும் கூறி, மலையரசியிடம் ராமசாமி நியாயம் கேட்க, பத்து லட்சம் கொடுத்தால் புறம்போக்கு நிலத்தையே சொந்தமாக்கி பட்டா வாங்கி தருவதாகவும், அதோடு அருகில் உள்ள மற்றொரு புறம்போக்கு நிலத்திலும் வீடு கட்டிக் கொள்ளலாம் எனவும் மலையரசியின் கணவரும், அரசு வழக்கறிஞருமான கணேசபெருமாள் என்பவர் கூறியதாக தெரிகிறது.

ரூ.50 லட்சம் கேட்டு...
அதனை நம்பிய ராமசாமி, கடன் வாங்கி ரூ.10 லட்சத்தை கணேச பெருமாளிடம் கொடுத்ததாகவும், அருகே உள்ள புறம்போக்கு நிலத்தில் ஒரு வீட்டை கட்டியதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே, கடந்த ஆண்டு ராமசாமியின் வீட்டுக்கு வந்த நீதிமன்ற ஊழியர்கள் சர்வே எண் தவறாக உள்ளதாகவும், அதனால் உடனே வீட்டை காலி செய்ய வேண்டும் எனவும் கூறினர்.
இதனால், மீண்டும் கணேச பெருமாளை தேடி ஓடிய ராமசாமியிடம் ரூ.50 லட்சம் கொடுத்தால்தான் வீடு சொந்தமாகும், இல்லாவிட்டால் சர்வே எண் தன்பெயரில் மாறிவிடும் என வழக்கறிஞர் மிரட்டியதாக சொல்லப்படுகிறது. இதனால், விரக்தியடைந்த ராமசாமி அம்பை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததோடு சர்வே எண்ணையும் தனக்கு சாதகமாக அமையும்படி திருத்தி வாங்கியதாக தெரிகிறது.

மிரட்டல், செல்போன் பறிப்பு
இதனால் ஆத்திரமடைந்த கணேச பெருமாள், சட்டம் தெரிந்த தன்னிடமே உன் வேலையை காட்டுகிறாயா? எனக்கூறி ராமசாமியை மிரட்டியதாகவும், நீதிமன்றத்தில் வைத்தே ஒரு ஜூனியர் வழக்கறிஞரிடம் கண்ணைக்காட்டி ராமசாமியின் செல்போனை பறித்துச் சென்றதாகவும் கூறப்படுகிறது.
அந்த செல்போனில்தான் ராமசாமிக்கு கொடுத்த ரூ.10 லட்சத்திற்கான ஆதாரம் முதல் கடைசியாக ரூ.50 லட்சம் கேட்டதுவரை உள்ள அத்தனை ஆடியோ மற்றும் வீடியோ ஆதாரங்கள் இருப்பதாக தெரிகிறது.
இதனிடையே, கடந்த 29ஆம் தேதி காலை 11.30 மணியளவில் ராமசாமியின் வீட்டிற்கு கூலிப்படையை சேர்ந்த இருவர், காவலர் சீருடையில் ஒருவர், நீதிமன்ற ஊழியர் எனக்கூறி ஒருவர், வீடியோ எடுக்க ஒரு கேமராமேன், கணேச பெருமாள், அவரது மனைவி மலையரசி என மொத்தம் 7 பேர் வந்துள்ளனர்.

பூச்சி மருந்து குடித்து...
வீட்டை உடனே காலி செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாககூறி அழுத்தம் கொடுக்க, நான் எங்கு செல்வது சாகத்தான் முடியும் எனக் கூறி உள்ளார் ராமசாமி. இதற்கு, செத்தாலும் கவலையில்லை, வீட்டை காலி செய்ய வேண்டும் என அவர்கள் கூற விரக்தியடைந்த ராமசாமி
பூச்சி மருந்தை குடித்துள்ளார்.
அப்போதும்கூட, அந்த 7 பேரும் எந்த பதற்றமும் படவில்லை. மாறாக ராமசாமியின் 14 வயது மகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகவும், அதனால் சிறுமி மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றதாகவும் அவரது உறவினர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

ராமசாமி உயிரிழப்பு
இதனிடையே, அம்பை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் கொண்டு செல்லப்பட்ட ராமசாமி சம்பவம் நடந்த 10 நாட்களுக்குப்பிறகு உயிரிழந்தார்.
ஆனால், கணேசபெருமாள் மற்றும் அவரது மனைவி மீது நடவடிக்கை எடுக்காமல் சடலத்தை வாங்கமாட்டோம் என ராமசாமியின் உறவினர்கள் விடாப்பிடியாய் நிற்கின்றனர். இதனால், கடந்த 4 நாட்களாக ராமசாமியின் சடலம் மருத்துவமனையில்தான் இருக்கிறது. காவல்துறை தரப்பிலும் எந்த நடவடிக்கையும் இல்லை.

இது ஒருபுறமிருக்க, ராமசாமி வீட்டை காலி செய்ய வேண்டும் என்றால் வருவாய்த்துறை அதிகாரிகள்தான் நேரில் சென்றிருக்க வேண்டும், ஆனால் கணேசபெருமாள், அவரது மனைவி உள்ளிட்ட 7 பேர் சென்றதே சரியான நடைமுறை இல்லை, அதன் பின்னால் பெரும் குழப்பேமே உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved