Also Watch
Read this
அரிசி, பருப்பு துவங்கி அன்றாட சமையலுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களின் விலை, கிடு கிடுவென உயர்ந்திருப்பதன் எதிரொலியாக, நாட்டின் சில்லறை விலை பணவீக்கமும், உணவு பணவீக்கமும் இதுவரை இல்லாத வகையில் உயர்ந்திருப்பது, சாமான்ய மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.
அத்தியாவசிய பொருட்களின் விலை
நாட்டின் பொருளாதார வளர்ச்சியை தீர்மானிப்பதில் அதிமுக்கிய காரணியாக இருப்பது அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி தான். இப்படிப்பட்ட அரிசி, பருப்பு, எண்ணெய் போன்ற அத்தியாவசிய பொருட்களை வாங்குவதே, ஆடம்பரமாக தோன்றும் அளவுக்கு விண்ணை முட்டியிருக்கிறது விலைவாசி.
மளிகை பொருட்கள் தான் இப்படி என்றால், வெங்காயம், இஞ்சி, பூண்டு உள்ளிட்ட காய்கறிகளின் விலையும் அதற்கு இணையாக உயர்ந்திருப்பதால், ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் தங்கள் அன்றாட செலவுகளையும், மாதாந்திர வருமானத்தையும் ஈடுகட்டி இழுத்து பிடிக்க முடியாமல் கடும் நெருக்கடிக்கு ஆளாகி வருகின்றனர்.

சில்லறை விற்பனை விலை கடும் உயர்வு
கடந்த ஓராண்டில், சமையலுக்கு தேவையான 41 அத்தியாவசிய பொருட்களின் சில்லறை விற்பனை விலை கடுமையாக உயர்ந்து இருப்பதாகவும், அதனால் சில்லறை பணவீக்கமும், உணவு பண வீக்கமும் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகரித்துள்ளதாகவும், அதிர்ச்சி தகவல் தெரிய வந்திருக்கிறது.
கடந்த ஆகஸ்ட் மாதம் 4.8 சதவீதமாக இருந்த நாட்டின் சில்லறை விலை பணவீக்கம், கடந்த 2 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு செப்டம்பர் மாதம் 5.5 சதவீதமாக உயர்ந்துள்ளது.
அதே போல் ஆகஸ்ட் மாதம் 5.97 சதவீதமாக இருந்த உணவு பணவீக்கம், கடந்த 21 மாதங்களில் இல்லாத அளவுக்கு செப்டம்பரில் 7.7 சதவீதமாக அதிகரித்துள்ளது.

கிராமபுறங்களில் பணவீக்கம்
ஒட்டுமொத்த பணவீக்கமும் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில், தேசிய சராசரியை காட்டிலும் உயர்ந்து அச்சுறுத்தலாக மாறியிருக்கிறது. அதிலும், குறிப்பாக நகரங்களை விட கிராமப்புறங்களில் பணவீக்கம் அதிகரித்து இருப்பதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
சாதாரண அரிசியின் சில்லறை விற்பனை விலை 12 சதவீதம் வரை உயர்ந்து ஒரு கிலோவுக்கு ரூ.47 வரை அதிகரித்துள்ளது. பருப்பு வகைகளில் அதிகபட்சமாக விலை உயர்ந்திருப்பது துவரம் பருப்பு தான். கடந்த ஆண்டு ஒரு கிலோ 113 ரூபாய்க்கு விற்பனையான துவரம் பருப்பு, தற்போது 129 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
சென்னை, மும்பை, பெங்களூரு போன்ற பெருநகரங்களில் துவரம் பருப்பு ஒரு கிலோ 145 வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது. அதே போல், கடந்த ஆண்டு கிலோ 85 ரூபாய்க்கு விற்பனையான ஒரு கிலோ கடலை பருப்பு, தற்போது 91 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

எண்ணெய் விலை உச்சத்தில்...
சமையல் எண்ணெய் வகைகளில், சூரியகாந்தி எண்ணெய் தான் அதிகபட்சமாக 18 சதவீதம் வரை விலை உயர்ந்து, ஒரு லிட்டர் 191 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதற்கடுத்தபடியாக பாமாயில் 15.2 சதவீதமும், சோயா எண்ணெய் 14.6 சதவீதமும் அதிகரித்துள்ளது.
ஒரு லிட்டர் கடுகு எண்ணெய் விலை 188 ரூபாயிலிருந்து, 204 ரூபாயாக உயர்ந்து உள்ளது. சர்க்கரை விலை கடந்த ஆகஸ்ட் மாதத்தை காட்டிலும் செப்டம்பர் மாதம் சற்றே குறைந்திருந்தாலும், கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 22 சதவீதம் அளவுக்கு விலை உயர்ந்து தான் விற்பனையாகிறது.

காய்கறி விலையும்...
காய்கறிகளில் அதிகபட்சமாக வெங்காயம் விலை 108 சதவீதம் உயர்ந்துள்ளது. அதற்கடுத்தபடியாக இஞ்சி விலை 62.85 சதவீதமும், பூண்டு விலை 54.62 சதவீதமும், எலுமிச்சை 36.41 சதவீதமும் விலை உயர்ந்துள்ளது. அதே சமயம் உருளைக்கிழங்கு, தக்காளி, வெண்டைக்காய் உள்ளிட்ட காய்கறிகளின் விலை குறைந்துள்ளது சற்றே ஆறுதலாக அமைந்துள்ளது.

விலை உயர்வு, என்ன காரணம்?
பொய்த்து போன பருவமழை, சாகுபடி பாதிப்பு, வரத்துக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு, பலவீனமான ரூபாய் மதிப்பு, போர்ச்சூழலால் உயர்ந்து வரும் கச்சா எண்ணெய் விலை என விலைவாசி உயர்வுக்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும், அதன் நேரடி பாதிப்பை சந்திப்பது என்னவோ ஏழை, எளிய, நடுத்தர வர்க்க மக்கள் தான்.

உழைக்கும் மக்களின் உணவை கூட எட்டாக்கனியாக்கும் வகையில் அத்தியாவசியப் பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது, குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் பெறும் குடும்பங்களின் மாதாந்திர பட்ஜெட்டில் சுமையை கூட்டியுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved