Also Watch
Read this
இடைத்தேர்தல் தோல்வியால், மீண்டும் வேலுமணி தரப்பிற்கு இபிஎஸ் மீதான அதிருப்தி ஆழமாக வேரூன்றி உள்ளதாகவும், அதனால் அடுத்தகட்டம் குறித்து தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
புதிய கட்சி தொடங்கலாமா? சில ஆப்ஷன்களை பயன்படுத்தி அதிமுகவை மீட்டெடுக்கலாமா? அல்லது மரகதம் குரவேல், சத்யபாமா போன்று ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் இடைத்தேர்தலை எதிர்கொள்ளலாமா? என ஆலோசனையில் உள்ளதாக கூறப்படும் நிலையில், அதிமுக ஆண்டு விழா பொதுக்கூட்டத்தையே வேலுமணி தரப்பு புறக்கணிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு பிறகு...
2026 இருபெரும் திராவிட கட்சிகளுக்கும் போதாத காலம் என்றுதான் சொல்ல வேண்டும். அரசியல் வித்வான்களின் கணிப்புகளை எல்லாம் காணாமல் போகச்செய்து திமுகவை 2ஆவது இடத்திற்கு தள்ளியது தவெக.
அதேபோல், எதிர்க்கட்சி அந்தஸ்த்தில் இருந்த அதிமுகவும் தானாகவே அடுத்த இடத்திற்கு சென்றது. 3ஆவது இடத்திற்கு சென்ற வருத்தத்தைவிட அடுத்தடுத்து கட்சிக்குள் நடந்த விஷயங்கள்தான் அதிமுகவின் ஆணிவேரையே அசைத்து பார்த்தது.
’நான் சொல்வதுதான் சட்டம்,’ என இபிஎஸ் வீராப்பாக நின்றதே தேர்தலில் தொடர் தோல்விக்கு காரணம் எனக்கூறி சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி தலைமையிலான 25 எம்எல்ஏக்கள் தவெகவுக்கு ஆதரவு தெரிவிக்க, அந்த ஆத்திரத்தில் அவர்களின் கட்சிப்பதவியை பறித்து தனது பவரை காட்டினார் இபிஎஸ்.

அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா
இதனிடையே, மரகதம் குமரவேல், சத்யபாமா, ஜெயக்குமார், சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர், இசுக்கி சுப்பையா உள்ளிட்டோர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைய, கட்சித்தாவல் தடை சட்டத்திற்கு பயந்து எஸ்பி வேலுமணி தரப்பு மன்னிப்புக்கடிதம் கொடுத்து மீண்டும் இபிஎஸ் பக்கமே வந்தனர்.
ஆனால், பறித்த கட்சிப்பதவிகளை வேலுமணி தரப்பிற்கு கொடுக்காத இபிஎஸ், அதற்கு பதில் டம்மியான அலங்கார பதவிகளை கொடுத்து வாயை அடைக்க பார்த்தார். இதனால், தலைமை மீதான அதிருப்தி வேலுமணி தரப்புக்கு அதிகமானது.
இதனிடையே, நடந்து முடிந்த இடைத்தேர்தலில் அதிமுகவின் கோட்டையிலேயே இலை மண்ணைக் கவ்வ இன்னும் அதிருப்திக்குள்ளான வேலுமணி தரப்பு பெரும் புரட்சியை கையில் எடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

முக்கிய ஆலோசனையில்...
இதுதொடர்பாக வேலுமணி இல்லத்தில் முக்கிய ஆலோசனையே நடந்துள்ளதாக கூறப்படுகிறது. நத்தம் விஸ்வநாதன், கே.பி.அன்பழகன் உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் ஒன்றுகூடி அடுத்தகட்டமாக என்ன செய்யலாம் என்பது குறித்து முழுமூச்சாய் இறங்கி ஆலோசித்ததாக தெரிகிறது.
இதனிடையே, வேலுமணி அணி அதிமுகவை கைப்பற்ற சில ஆப்ஷன்கள் உள்ளன. ஒன்று இபிஎஸ்க்கு எதிராக இருக்கக்கூடிய சட்டமன்ற உறுப்பினர்களை தங்கள் பக்கம் இழுப்பது. மற்றொன்று சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை உடைப்பது. தற்போது, அதிமுகவில் 41 எம்எல்ஏக்கள் உள்ளனர். அதில் மூன்றில் 2 பங்கான 28 எம்எல்ஏக்களை தங்கள் பக்கம் இழுத்தாலே வேலுமணி தரப்பின் கை ஓங்கிவிடும்.
அடுத்து, சட்டமன்றத்திற்கு சென்று நாங்கள்தான் உண்மையான அதிமுக என உரிமை கொண்டாடலாம். ஒருவேளை 28 எம்எல்ஏக்களை இழுக்க முடியாவிட்டால் வேலுமணி அணி வெறும் புரட்சி அணியாக மாறிவிடும்.

55ஆவது ஆண்டு தொடக்கம்
இதுஒருபுறமிருக்க, வரும் 17ஆம் தேதி நடக்கவுள்ள அதிமுகவின் 55ஆவது ஆண்டு தொடக்க விழாவில் தங்கள் தரப்பில் யாரும் கலந்து கொள்ளப் போவதில்லை என வேலுமணி தரப்பு முடிவெடுத்துள்ளதாம். இதனிடையே, ஆலோசனையில் பங்கெடுத்தவர்கள் ஆளாளுக்கு விதவிதமான ஐடியாக்களையும் அள்ளி தெளித்திருக்கிறார்களாம்.
புதிதாக கட்சி ஆரம்பிக்கலாம், உண்மையான தொண்டர்களை திரட்டி அவர்கள் மூலம் அதிமுகவை மீட்டெடுப்போம், அதற்கென்றே தனியாக ஒரு அமைப்பை உருவாக்குவோம் என ஆலோசனை கூறியதாக சொல்லப்படுகிறது.
இதற்கு ஒருசிலர், தனியாக கட்சி தொடங்கினால் நாம் அதிமுகவில் இருந்து வெளியேறக்கூடிய சூழல் ஏற்படும், அது தேவையற்றது, உடன் இருந்தே நமக்கான ஆட்களை திரட்டுவோம் என வாதங்களை முன்வைத்தார்களாம்.

தவெகவுக்கு ஆதரவு
இதனிடையே, மீண்டும் தவெகவிற்கு ஆதரவு கொடுக்கலாம் என்ற முயற்சியும் நடந்து வருவதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. மரகதம் குமரவேல் மற்றும் சத்யபாமா இடைத்தேர்தலில் எம்எல்ஏ ஆனதுதான் இந்த முடிவுக்கே காரணம் என்றும் சொல்லப்படுகிறது.
அவர்களைப்போல நாமும் பதவியை ராஜினாமா செய்துவிட்டு இடைத்தேர்தலை எதிர்கொண்டு, மீண்டும் எம்எல்ஏ ஆகலாம் எனவும் நம் பேச்சை மருந்துக்கு கூட மதிக்காத தலைமையிடம் இனி எதையுமே எதிர்பார்க்க முடியாது, அதனால் அதிமுகவில் இனி இருந்து என்ன பயன்? எனவும் பேசி உள்ளார்களாம்.

மொத்தத்தில், ஒன்று அதிமுகவை கைப்பற்ற வேண்டும், இல்லையேல் வெளியேறி தலைமைக்கு பாடம் கற்பிக்க வேண்டும் என்பதுதான் வேலுமணி தரப்பின் எண்ணமாக உள்ளதாம். இதனால்தான், அதிமுக ஆண்டு விழா கூட்டத்தை புறக்கணித்துள்ளதாக அரசியல் வட்டாரம் கூறுகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved