Also Watch
Read this
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் கோரிக்கையை ஏற்று, கோதாவரி - காவிரி இணைப்புத் திட்டம் அமல்படுத்தப்படும் என்று அறிவித்துள்ள ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, சென்னைக்கு 3 டிஎம்சி தண்ணீர் வழங்க ஒப்புதல் அளித்துள்ளார்.
ஆந்திர முதலமைச்சரை சந்தித்த போது முதலமைச்சர் விஜய் வைத்த கோரிக்கைகள் என்ன? அதனால் தமிழகத்திற்கு என்ன பயன்? என்பதை விரிவாக பார்க்கலாம்.

ஆந்திராவில் முதல்வர் விஜய்
தமிழ்நாடு முதலமைச்சராக பதவியேற்ற பிறகு, முதன் முறையாக ஆந்திர மாநிலத்திற்கு சென்ற விஜய்க்கு விமான நிலையம் முதல் அனைத்து இடங்களிலும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஆந்திர முதலமைச்சர் இல்லத்திற்கு சென்ற முதலமைச்சர் விஜயை வாசலுக்கு வந்து வரவேற்று அழைத்து சென்றார் அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு. அப்போது அவரது மகனும் அமைச்சருமான நாரா லோகேஷ் உடனிருந்தார்.

ஆந்திர முதல்வரிடம் கோரிக்கை
இதையடுத்து முதலமைச்சர் விஜய், ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ஆகிய இருவரும் மாநிலங்களின் பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை மேற்கொண்டனர். அப்போது முதலமைச்சர் விஜய், கோதாவரி - காவிரி இணைப்பு திட்டம் மற்றும் தலைநகர் சென்னைக்கு கூடுதலாக கிருஷ்ணா நதிநீர் விடுவிப்பது குறித்த கோரிக்கை மனுவை ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபுவிடம் வழங்கினார்.

மேலும் கோதாவரி - காவிரி இணைப்பு திட்டமானது, இரு மாநிலங்களின் மேற்பரப்பில் நீர் இருப்பை அதிகரிப்பதற்கான வாய்ப்பாக அமையும் என்று எடுத்து கூறிய முதலமைச்சர் விஜய், தென்னிந்திய மாநிலங்களுக்கு பயனளிப்பதுடன், விவசாயத்திற்கு உறுதுணையாக இருப்பதோடு, குடிநீர் பாதுகாப்பை வலுப்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளார்.

சென்னைக்கு கிருஷ்ணா நீர்
அதே போல், கிருஷ்ணா நீர் சென்னையின் குடிநீர் பாதுகாப்பிற்கு மிகவும் முக்கியமானது என்றும், சென்னையின் 5 குடிநீர் தேக்கங்களின் மொத்த கொள்ளளவில் தற்போது 35 சதவீதம் மட்டுமே தண்ணீர் உள்ளதாகவும் குறிப்பிட்ட முதலமைச்சர் விஜய், நடப்பு ஆண்டில் கூடுதலாக தண்ணீர் விடுவிக்குமாறு ஆந்திர முதலமைச்சரை கேட்டு கொண்டார்.

விஜயவாடா உத்சவ் நிகழ்ச்சி
இந்த சந்திப்புக்கு பிறகு, புன்னமி காட் பகுதியில் நடைபெற்ற விஜயவாடா உத்சவ் நிகழ்ச்சியில் பங்கேற்ற முதலமைச்சர் விஜய், அம்மாநிலத்தின் சிறப்புகளை எடுத்துரைக்கும் வகையில் நடைபெற்ற கலைநிகழ்ச்சிகளை கண்டு ரசித்தார்.
மேலும் தெலுங்கில் உரையை தொடங்கியதும் அங்கிருந்த தொண்டர்கள் ஆர்ப்பரித்தனர்.

ஒப்புதல் தந்த முதல்வர் சந்திரபாபு
இந்நிகழ்ச்சியில் பேசிய ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கோதாவரி - காவிரி இணைப்பு திட்டம் அமல்படுத்தப்படுமென அறிவித்தார். மேலும் ஆற்று நீர் என்பது ஒத்துழைப்பிற்கான ஆதாரமாக இருக்க வேண்டுமே தவிர மோதலுக்கானதாக இருக்க கூடாது என்று கூறினார்.

அதே போல் சென்னைக்கு அடுத்த இரண்டரை மாதங்களில் 3 டிஎம்சி தண்ணீர் வழங்க ஒப்புதல் அளித்துள்ளார்.
கோதாவரி - காவிரி நதிநீர் இணைப்புத் திட்டம் என்பது தென்னிந்திய நதிகளை இணைக்கும் ஒரு முக்கிய தொலைநோக்குத் திட்டம் என்பதோடு, தமிழகத்தில் உள்ள திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், திருச்சி ஆகிய மாவட்டங்கள் மட்டுமின்றி ஆந்திராவில் உள்ள 5 மாவட்டங்கள், தெலங்கானாவில் உள்ள 4 மாவட்டங்கள் பயனடையும் என்பது குறிப்பிடத்தக்கது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved