ஸ்பெயினில் நடைபெறும் லா லிகா கால்பந்து தொடரில் பார்சிலோனா எஃப்சி அணி தொடர்ந்து 9 போட்டிகளிலும் வெற்றிபெற்று சாதனை படைத்துள்ளது. ரியல் பெட்டிஸ் உடன் மோதிய போட்டியில் பார்சிலோனா 5-க்கு 2 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் பார்சிலோனாவின் லமின் யமால் ஆட்ட நாயகன் விருது வென்றார்.
முதல் பாதியில் 2-க்கு 1 என முன்னிலை வகித்த பார்சிலோனா, 2-வது பாதியில் மேலும் 3 கோல்கள் அடித்து வெற்றிபெற்று, புள்ளி பட்டியலில் முதலிடத்தில் நீடிக்கிறது.
இங்கிலாந்தில் நடைபெறும் பிரீமியர் லீக் கால்பந்து தொடர்
இங்கிலாந்தில் நடைபெறும் பிரீமியர் லீக் கால்பந்து தொடரில் மான்செஸ்டர் சிட்டி அணி, 129 ஆண்டுகளுக்கு பின் விளையாடிய 7 போட்டிகளிலும் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது.
இப்ஸ்விச் சிட்டி அணிக்கு எதிரான 7 வது போட்டியில், மான்செஸ்டர் சிட்டி அணி 3-க்கு 2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியுடன் பிரீமியர் லீக் நடப்பு சீசனில் அனைத்து போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றிகளை குவித்துள்ளது.
தமிழகத்துக்கு எதிரான ரஞ்சி கோப்பை போட்டி
தமிழகத்துக்கு எதிரான ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் உத்தரகாண்ட் அணி 134 ரன்னில் சுருண்டது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் போட்டியில், டாஸ் வென்ற தமிழ்நாடு பந்துவீச்சை தேர்வு செய்தது.
முதலில் பேட்டிங் செய்த உத்தரகாண்ட் அணி, தமிழகத்தின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 56.2 ஓவர்களில் 134 ரன்னில் சுருண்டது. தொடர்ந்து, முதல் இன்னிங்சை தொடங்கிய தமிழக அணி ஆட்ட நேர முடிவில் 27 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 85 ரன்கள் எடுத்துள்ளது.