Also Watch
Read this
செம்மண் குவாரி முறைகேடு வழக்கில் பொன்முடி, அவரது மகன் கவுதம சிகாமணி உள்ளிட்ட 7 பேரும் விடுதலை செய்யப்பட்டு உள்ளனர்.

போதிய சாட்சிகள் இல்லை
28 கோடி ரூபாய் இழப்பை ஏற்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் போதிய சாட்சிகள் இல்லை என கூறி, விழுப்புரம் முதன்மை அமர்வு நீதிமன்றம் விடுதலை செய்து உத்தவிட்டது. பொன்முடி வழக்கில் முன்னாள், இந்நாள் அரசு அதிகாரிகள் 57 பேர் சாட்சிகளாக சேர்க்கப்பட்ட நிலையில் 30 பேர் பிறழ் சாட்சியம் அளித்தனர். மூல வழக்கே ரத்தான நிலையில், அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்கில் பொன்முடிக்கு நிம்மதி ஏற்பட்டு உள்ளது.

வழக்கின் பின்னணி
கடந்த 2006 முதல் 2011 வரையிலான திமுக ஆட்சியின்போது, உயர்கல்வித் துறை அமைச்சராக இருந்த பொன்முடி, கூடுதலாக கனிமவளத் துறைக்கும் அமைச்சராக இருந்து வந்தார். அப்போது, விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா பூந்துறை கிராமத்தில் செம்மண் குவாரியில் அளவுக்கு அதிகமாக செம்மண் அள்ளியதில் அரசுக்கு 28 கோடி வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக புகார் எழுந்தது.

பொன்முடி மீது வழக்கு
இதுதொடர்பாக முன்னாள் அமைச்சர் பொன்முடி, அவரது மகனும் திமுக முன்னாள் எம்பியுமான பொன்.கவுதம் சிகாமணி, திமுக நிா்வாகிகள் கோதகுமார், சதானந்தன், ஜெயச்சந்திரன், ராஜ மகேந்திரன், கோபிநாத் ஆகிய 7 பேர் மீது, கடந்த 2012ஆம் ஆண்டில் தமிழக லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட லோகநாதன் உடல்நலக்குறைவால் இறந்துவிட்டார். 2012 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட வழக்கு, பிறகு கிடப்பில் போடப்பட்ட நிலையில், மீண்டும் விசாரணை தீவிரமடைந்தது. இந்த வழக்கை அடிப்படையாகக் கொண்டு அமலாக்கத் துறையினர், பொன்முடி மற்றும் அவரது மகன் கவுதமசிகாமணி தொடர்புடைய இடங்களில் கடந்த 2023ஆம் ஆண்டு சோதனை நடத்தினர்.

30 பேர் பிறழ் சாட்சி
இந்நிலையில், இந்த வழக்கில் அரசு தரப்பு சாட்சிகளாக சேர்க்கப்பட்ட முன்னாள், இந்நாள் அரசு அதிகாரிகள் 57 பேரில் 30 பேர் பிறழ் சாட்சிகளாக மாறினர். ஏப்ரல் 2ஆம் தேதி தீர்ப்பு அளிக்கப்பட உள்ளதாக கடந்த மார்ச் 2ஆம் தேதி விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி மணிமொழி அறிவித்திருந்தார். அதன்படி இன்று இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தீர்ப்பிற்காக வந்தது. அப்போது வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் அமைச்சர் பொன்முடி அவரது மகன் கெளதம்சிகாமணி, கோதகுமார், சதானந்தம் உள்ளிட்ட ஏழு பேர், விழுப்புரம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜராகினர்.

குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை
அதிகளவில் செம்மண் எடுத்து அரசுக்கு ரூ.28 கோடி இழப்பு ஏற்படுத்திய வழக்கில் இருந்து முன்னாள் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் கௌதமசிகாமணி விடுதலை செய்யப்பட்டு உள்ளனர். குற்றச்சாட்டுகளை அரசு தரப்பில் நிரூபிக்காத காரணத்தால் பொன்முடி உள்ளிட்டோர் விடுதலை செய்யப்படுவதாக நீதிபதி தீர்ப்பளித்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved