Also Watch
Read this
தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷின் மனைவிக்கு சொந்தமான நிலத்தில் அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டி, முறைகேடு செய்ததாக கூறப்படும் வழக்கில் தனியார் கட்டுமான நிறுவன உரிமையாளர் மீது குண்டர் சட்டம் பாய்ந்த நிலையில், ஐபிஎஸ் அருணை ஆஜராக சொன்னது ஏன்? என சென்னை உயர்நீதிமன்றம் விளக்கம் அளித்துள்ளது. தன் மீது ஒரு புகார்கூட இல்லையென வாதிட்டஅருண் ஐபிஎஸ், தன்னால் நடவடிக்கைக்கு ஆளான குற்றவாளிகளும், அயோக்கியர்களும் சேர்ந்து சோஷியல் மீடியாக்களில் விஷம பிரச்சாரம் செய்து வருவதாகவும், பேச்சு சுதந்திரம் உள்ள அவர்களைவிட அரசுப்பணியில் இருக்கும் தங்களுக்குதான் நீதிமன்றம் உறுதுணையாக இருக்க வேண்டும் எனவும் பரபரப்பு வாதத்தை முன்வைத்தார்.

குடியிருப்பு கட்டுவதில் முறைகேடு
சென்னை, கொளத்தூர் ராமதாஸ் நகரில் தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷின் மனைவி பூர்ணஜோதிக்கு சொந்தமான 2 ஏக்கர் 10 சென்ட் நிலம் உள்ளது. அதில், 234 அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டி, 78 குடியிருப்புகளை எல்.கே.சுதீஷ் மற்றும் பூர்ணஜோதிக்கு ஒதுக்குவதாக தனியார் கட்டுமான நிறுவன உரிமையாளர் சந்தோஷ் சர்மா ஒப்பந்தம் செய்திருந்தார். ஆனால், குடியிருப்புகளை வழங்குவதில் போலி கையெழுத்து மூலம் 43 கோடி ரூபாய் முறைகேடு செய்ததாக எழுந்த புகாரில் சந்தோஷ் சர்மா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

குண்டர் சட்டத்தில் நடவடிக்கை
அதன்பின்னர், பிணையில் அவர் விடுதலையான நிலையில், வாங்கிய குடியிருப்புகளை ஒப்படைக்காமல் ஏமாற்றிவிட்டதாக கடந்த 2025ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டு மீண்டும் கைது செய்யப்பட்டார். அவரை குண்டர் சட்டத்தில் அடைக்க சென்னை மாநகர காவல் ஆணையர் அதே ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி உத்தரவிட்டார். அந்த உத்தரவை எதிர்த்து சந்தோஷ் சர்மாவின் மகள் வர்ஷா சர்மா சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார்.

இடைக்கால கோரிக்கை மனு
2019 - 2023 ஆண்டுகால இடைவெளியில் நடந்த சம்பவத்திற்கு 2 ஆண்டுகளுக்குப் பின்னர், அதாவது 2025ஆம் ஆண்டு சந்தோஷ் சர்மா குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்கப்பட்டு உள்ளதாகவும், ஒரே குற்ற சம்பவத்திற்கு கைதாகி பிணையில் விடுதலை ஆன நிலையில் அதே குற்றச்சாட்டுக்கு மேலும் இரண்டு வழக்குகளை பதிவு செய்து, குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டது சட்டவிரோதமானது எனவும் வர்ஷா சர்மா தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து வழக்கு ஜூன் மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டது. இதனிடையே, வர்ஷா சர்மா உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், அதனால் மகளை கவனித்துக்கொள்ள தனது கணவருக்கு 4 வாரங்கள் பிணை வழங்க வேண்டும் எனவும் சந்தோஷ் சர்மாவின் மனைவி கல்பனா சர்மா இடைக்கால கோரிக்கை மனு தாக்கல் செய்திருந்தார்.

அருண் ஆஜராக உத்தரவு
இந்த மனு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், வி.லட்சுமி நாராயணன் ஆகியோர் அமர்வில் கடந்த வாரம் விசாரணைக்கு வந்தபோது, குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்க உத்தரவு பிறப்பித்த காவல்துறை ஆணையர் அருண் நேரில் ஆஜராக உத்தரவிட்டனர். இதன்படி, தற்போது லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் ஆணையர் அருண், நீதிபதிகள் முன்பு காலையில் ஆஜரானார். அப்போது, நீதிமன்றத்தின் சம்மனை மே 26 அன்று வழங்க சென்ற அதிகாரியை பிற்பகல் 3.05 முதல் 5.15 வரை காத்திருக்க வைத்தது ஏன்? நீதிமன்ற உத்தரவின்படி சம்மன் வழங்க சென்ற அதிகாரியை ஏன் 2 மணி நேரம் காத்திருக்க வைக்க வேண்டும்? அப்படி காக்க வைத்த ஊழியரும் ஆஜராக வேண்டும், அதுவரை இந்த வழக்கை விசாரிக்க முடியாது எனவும், அதுவரை அருண் ஐ.பி.எஸ் நீதிமன்றத்தில் காத்திருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தி வழக்கை நீதிபதிகள் பிற்பகலுக்கு தள்ளி வைத்தனர். அனைத்து வழக்குகளும் முடிந்து இறுதியாக 6 மணி நேரத்திற்கு பின்னர், இந்த வழக்கு மீண்டும் மாலையில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது.

நீதிமன்ற ஊழியரை காக்க வைத்தது ஏன்?
அப்போது, நீதிமன்ற பணியாளரை காக்க வைத்த, குறிப்பிட்ட அந்த லஞ்ச ஒழிப்புத் துறை ஊழியரும் ஆஜராகியிருந்தார். அவரிடம், நீதிமன்ற பணியாளரை காக்க வைத்த உங்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது? என நீதிபதிகள் சரமாரி கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த காவல் துறை தரப்பு மூத்த வழக்கறிஞர் ஜான் சத்யன், அனைத்து குண்டர் சட்டமும் உரிய விசாரணைக்கு பிறகுதான் பாய்கிறது எனவும் குற்றம் சாட்டப்பட்ட சந்தோஷ் சர்மா மீது பல வழக்குகள் இருந்ததால்தான் குண்டர் சட்டம் பாய்ந்துள்ளதே தவிர நீதிமன்ற ஊழியரை காக்க வைத்ததில் எந்த உள்நோக்கமும் இல்லை என தெரிவித்தார். அதோடு, அருண் ஒரு கூட்டத்தில் பங்கேற்று இருந்ததால் அவர் வரும்வரை காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது எனவும் விளக்கமளித்தார்.

அருண் ஐபிஎஸ் விளக்கம்
இதனை தொடர்ந்து, ஆஜரான ஐபிஎஸ் அருண், தனது 28 ஆண்டுகால காவலர் பணியில், தன் மீது ஒரு புகார் கூட இல்லை, தொழில் ரீதியாக, நேர்மையாக நான் பணி செய்யக்கூடியவன், தவறு நடக்கும்போது நடவடிக்கை எடுப்பேன், அப்படி தன்னால் நடவடிக்கைக்கு உள்ளான குற்றவாளிகளும், அயோக்கியர்களும் ஒன்று சேர்ந்து, சமூக ஊடகங்களில் தன் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை வெளியிடுகின்றனர் எனக்கூறினார். மேலும், சந்தோஷ் சர்மாவால் 199 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர், போலி கையெழுத்து மூலம் பலகோடி ரூபாய் மோசடி செய்து உள்ளார், பாதிக்கப்பட்டவர்களும் கம்பெனி லா போர்டு முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர், அதனால்தான் நடவடிக்கை எடுக்கப்பட்டது என விளக்கமளித்தார்.

நீதிமன்றம்தான் உறுதுணை
மேலும், சமூக ஊடகங்களில் விஷம பிரச்சாரம் செய்யும் நபர்களுக்கு பேச்சு சுதந்திரம் உள்ளது, ஆனால், அரசு ஊழியர்களான தங்களுக்கு அப்படியான எந்த சுதந்திரமும் இல்லை, ஆகவே நீதிமன்றம்தான் தங்களுக்கு உறுதுணையாக நிற்க வேண்டும் என கூறினார். அதோடு, தனது 28 ஆண்டுகால பணி ரெக்கார்டில் தனக்கு எதிராக ஒரு எழுத்து இருந்தாலும் தன்மீது தாராளமாக நடவடிக்கை எடுக்கலாம் எனவும் வாதிட்டார். இவர்களின் வாதங்களை கேட்ட நீதிபதிகள், சந்தோஷ் சர்மாவை குண்டர் சட்டத்தில் அடைத்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவு அக்கிரமமானது என்பதை தெரிவிப்பதற்காகவே அருணை ஆஜராக உத்தரவிட்டதாக கூறியதோடு, சந்தோஷ் சர்மாவின் 4 வார ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு மீதான உத்தரவை தள்ளி வைத்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved