Also Watch
Read this
தமிழக அரசியலில், அதிமுகவின் எதிர்காலமே என்னவாகுமோ? என உள்ள நிலையில் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திய விஜயபாஸ்கர், 3 ஆப்ஷன்களை கொடுத்து முடிவையும் அவர்களது கையிலேயே ஒப்படைத்துள்ளதாக கூறப்படுகிறது. அதேநேரம், தவெகவுடன் இணைவது என ஏற்கெனவே விஜயபாஸ்கர் முடிவெடுத்து விட்டு தான் மக்கள் பக்கம் மடையை மாற்றிவிட்டுள்ளதாக கூறும் அரசியல் பார்வையாளர்கள், கேள்விக்குமேல் கேள்வி எழுப்பியும் ஒரே பதிலையே கூறுவதுதான் அரசியலில் புது டிரெண்ட்போல எனவும் விமர்சனம் செய்து வருகின்றனர்.
என்ன செய்ய போகிறார் விஜயபாஸ்கர்?
அதிமுகவில், தனிமரமாக நின்று கொண்டிருக்கும் சி.வி.சண்முகமாவது கடுகடுவென முகத்தில் ஆவேசத்தைக்காட்டி நான் இபிஎஸ் பக்கமும் இல்லை, வேலுமணி பக்கமும் இல்லை என்பதை வெளிப்படையாக காட்டினார். ஆனால், கழுவுகிற மீனில் நழுவுகிற மீன் போன்று, தன்னை நம்பி வாக்களித்த தெய்வங்களாகிய மக்களிடம் கருத்துக் கேட்பேன், அவர்கள் சொல்லும் முடிவுதான் என் முடிவு என மூச்சுக்கு முந்நூறு முறை கருத்து கந்தசாமி போன்று கருத்து கருத்து எனக்கூறி, வளைத்து வளைத்து கேள்வி எழுப்பிய செய்தியாளர்களையும் அதனை கவனித்து கொண்டிருந்த அரசியல் பார்வையாளர்களையும் வெறுக்கவே வைத்துவிட்டார் விஜயபாஸ்கர்.

புதுக்கோட்டையில் விஜயபாஸ்கர்
அதிமுகவில் ஏற்பட்ட விரிசலை சரிசெய்து, சபாநாயகரை சந்தித்தபோதும் சரி, இபிஎஸ் இல்லத்திற்கு சென்றபோதும் சரி, எம்எல்ஏக்களில் 2 தலைகள் மட்டும் மிஸ் ஆனது. அதில், சி.வி.சண்முகம் வெளிப்படையாகவே முரண்டு பிடித்தார் என்பதால் அனைவரது கவனமும் அவர்பக்கம் மட்டுமே சென்றது. ஆனால், விஜயபாஸ்கரும் தலைகாட்டவில்லை. சென்னையில் இருந்து புதுக்கோட்டைக்கு சென்ற அவர் இலுப்பூரில் உள்ள தனது இல்லத்தில் ஆதரவாளர்கள் மற்றும் தொகுதி மக்களை சந்தித்தார். ஒருநாளும் இல்லாத திருநாளாக காற்றே புகாத அளவுக்கு அவரது வீட்டில் கூட்டம் முண்டியடிக்க ஆலோசனையில் 3 ஆப்ஷன்களை அவரது ஆதரவாளர்கள் கையிலேயே விஜயபாஸ்கர் கொடுத்ததாக கூறப்படுகிறது.
கட்டுப்படுவேன் என உறுதி
மன்னிப்பு கடிதம் கேட்டது உட்பட இத்தனை அவமானங்களுக்குப் பிறகும் அதிமுகவிலேயே மீண்டும் தொடரலாமா? அல்லது வேறு கட்சிக்கு செல்லலாமா? அப்படியென்றால் அது எந்த கட்சி? அல்லது அரசியலில் இருந்தே ஓய்வு பெறலாமா? என்பதுதான் அந்த 3 ஆப்ஷன்களாம். அதில், மூன்றாவது ஆப்ஷனைகேட்டு அவரது ஆதரவாளர்கள் கொந்தளித்ததாக சொல்லப்படும் நிலையில் ஆனாலும் ஒரு முடிவை எடுத்துதான் ஆக வேண்டும் என அன்புக்கட்டளை போட்டாராம் விஜயபாஸ்கர். அதுமட்டுமல்லாது, பெரும்பான்மையானவர்கள் எடுக்கும் முடிவுக்கு தான் எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் கட்டுப்படுவதாகவும் அவர்கள் மனதை குளிர வைத்தாராம்.

தொகுதி மக்களிடம் கருத்து
இந்த தகவல் கிடைத்ததும், நியூஸ் தமிழ் செய்தியாளர் ராஜேஷ், விஜயபாஸ்கருக்கு போன் செய்து விவரம் கேட்டார். 4ஆவது முறையாக வெற்றிபெற வைத்த தொகுதி மக்கள்தானே முக்கியம் என பேச ஆரம்பித்த விஜயபாஸ்கர், ஆதரவாளர்களுடன் நடந்தது ஜஸ்ட் டிஸ்கஷன்தான் என்றார். அப்போது, இருதரப்பினரும் இணைந்தபோது நீங்கள் செல்லவில்லையே ஏன்? அதிமுகவில் இருந்து ஒவ்வொருவராக எதற்காக வெளியேறுகிறார்கள்? என செய்தியாளர் கேட்க, அதற்கான பதிலையே தவிர்த்துவிட்டு மக்களிடம் கருத்து கேட்கிறேன், அதனை உள்வாங்குகிறேன் என டிராக்கை மாற்றினார்.
அரசியலில் அவசரம் கூடாது
அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சிலர், நீங்கள் அரசியலில் இருந்தே ஓய்வு பெற நினைப்பதாக சொல்கிறார்களே அதற்கு உங்கள் பதில் என்ன? என செய்தியாளர் கேட்க, லேசாக சிரித்தபடியே பேசிய விஜயபாஸ்கர் இக்கட்டான சூழ்நிலையில் அதுபோன்ற ஒரு மனநிலை ஏற்படுவது உண்மைதான், ஆனாலும் அது நான் மட்டுமே முடிவெடுத்துவிட முடியாது, மக்கள் கையில்தான் உள்ளது என பொடி வைத்துப் பேசினார். இறுதியாக, 25 எம்எல்ஏக்கள் கலந்துபேசி ஒரு முடிவெடுத்தீர்கள் என செய்தியாளர் கேள்வி எழுப்ப, நேரமிருக்கிறது, காலமிருக்கிறது, அரசியலில் அவசரம் கூடாது எனக்கூறி பேச்சையே முடித்துக்கொண்டார் விஜயபாஸ்கர். ஆக மொத்தம், எந்த கேள்விக்கும் அவரது வாயில் பதிலை கறக்க முடியவில்லை என்பதுதான் உண்மை.

மறுபடியும் முதலில் இருந்து...
இதனிடையே, தனது வீட்டில் நடந்த ஆலோசனைக்குப்பின் செய்தியாளர்களை சந்தித்தார் விஜயபாஸ்கர். அனைவரது கருத்திற்கும் செவிமடுக்க வேண்டும் என கிளிப்பிள்ளைபோன்று சொன்னதையே சொல்லிய அவர், மறைந்த முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா வழியில் பயணம் தொடர்கிறது என்றார். சரி அந்த கருத்திலாவது நிலையாக இருப்பார் என எதிர்பார்த்தால் அதேநேரம் தன் தொகுதி மக்களின் கருத்துக்கு தான் முன்னுரிமை என மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பித்தார்.
மக்கள் கருத்தே...
தொலைபேசியில் நியூஸ் தமிழ் செய்தியாளரிடம் என்ன பேசினாரோ, அதில் ஒரு வார்த்தையைகூட மாற்றாமல் செய்தியாளர் சந்திப்பிலும் பேசிய விஜயபாஸ்கரிடம், தவெகவில் இணைவதாக தகவல் வருகிறதே என மற்றொரு செய்தியாளர் கேள்வி எழுப்பினார். இன்னும் எத்தனை செய்தியாளர் வந்தாலும் அதே பதில்தான் என்பதுபோல் ஏற்கெனவே ஓராயிரம் முறை கூறிய ”மக்கள் கருத்தை உள்வாங்குகிறேன்” என்ற பதிலையே கூறினார்.

இது தான் டிரெண்டா?
இதுஒருபுறமிருக்க, கட்சித் தாவலுக்காக ”கருத்து” ஆபரேஷனை கையில் எடுத்த விஜயபாஸ்கரின் பேச்சை கவனித்த பொதுமக்களும், அரசியல் நோக்கர்களும் இரட்டை இலையில் நின்று வெற்றி பெறுவதற்கு முன்பு மக்களிடம் இவர் இத்தனை கருத்து கேட்டாரா? கேட்கின்ற கேள்விக்கு ஆம், இல்லை என பதில் சொல்லாமல் கருத்து கருத்து என சுற்றலில் விட்டு கடைசியில் தவெகவில் இணைவதுதான் அவர் ஐடியாவா? அதற்காகதான் மக்களிடம் கருத்து கேட்கிறன் என நேரத்தை கடத்தி கொண்டிருக்கிறாரா? ஏற்கெனவே முடிவெடுத்துவிட்டு மக்கள் கூறியதால்தான் இப்படி ஒரு முடிவெடுத்தேன், அதிமுகவில் இருந்து விலகினேன் என நேக்காக ஜகா வாங்குவதுதான் அவர் திட்டமா? என கேள்வி எழுப்பி வருகின்றனர். அதோடு, மக்களிடம் கருத்துக் கேட்கிறேன் என இறங்கி உள்ளது அரசியலில் புதுவித டிரெண்டா? இவரைப் போன்றே அடுத்து கட்சிவிட்டு கட்சி தாவும் அரசியல்வாதிகளும் இதே கருத்து டிரெண்டைதான் கையில் எடுப்பார்களா? எனவும் கலாய்த்து வருகின்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved