Also Watch
Read this
By: Fyrose Banu

நிலக்கரி ஏற்றி வந்த டாரஸ் லாரி கட்டுப்பாட்டை இழந்து வேப்பமரத்தின் மீது மோதி மின்கம்பங்களை சாய்த்து வீட்டுக்குள் புகுந்து நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த பயங்கர விபத்தில் நல்வாய்பாக வீட்டுக்குள் இருந்த குடும்பத்தினர் உயிர்த்தப்பினர். மேலும் லாரி ஓட்டுநர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வீட்டுக்குள் புகுந்த டாரஸ் லாரி
காரைக்கால் தனியார் துறைமுகத்திலிருந்து கரூர் அனல் மின் நிலையத்திற்கு லாரி மூலம் நிலக்கரி ஏற்றப்பட்டு கொண்டு வரப்படுகிறது. இந்த நிலையில் இன்றும் காரைக்கால் தனியார் துறைமுகத்திலிருந்து நிலக்கரி ஏற்றிக்கொண்டு கரூர் நோக்கி வந்த டாரஸ் லாரி ஒன்று திருவாரூர் அருகே சீனிவாசபுரம் என்கிற பகுதியில் அதிவேகமாக வந்து கொண்டிருந்த பொழுது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி திடீரென சாலை ஓரத்தில் இருந்த பெரிய வேப்ப மரம் மீது மோதி அடுத்துள்ள மின்கம்பத்தின் மீது மோதி சித்தார்த்தன் என்பவர் வீட்டின் உள்ளே புகுந்து நின்றுள்ளது. இந்த சத்தம் கேட்டு சித்தார்த்தன் மற்றும் அவரது குடும்பத்தினர் வீட்டிலிருந்து வெளியே ஓடி வந்ததால் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர்.
நல்வாய்ப்பாக தப்பிய குடும்பம்
இந்த லாரி மோதியதில் சுமார் 50 ஆண்டுகள் பழமை வாய்ந்த ராட்சத வேப்பமரம் அடியோடு சாய்ந்துள்ளது. அதேபோல மின் கம்பங்களும் சாய்ந்ததால் அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும் விபத்து ஏற்படுத்திய லாரி ஓட்டுநருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது உடனடியாக பகுதி அக்கம் பக்கத்தினர் 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

வேகத்தடை அமைக்க கோரிக்கை
இதுகுறித்து உடனடியாக அக்கம் பக்கத்தினர் திருவாரூர் நகர காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்த தன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் வழக்கு பதிவு செய்து இந்த விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக காரைக்கால் தனியார் துறைமுகத்தில் இருந்து கரூர் அனல் மின் நிலையத்திற்கு தினம் தோறும் லாரிகள் மூலம் நிலக்கரி ஏற்றப்பட்டு திருவாரூர் வழியாக வந்து கொண்டிருக்கிறது. மேலும் அதிக அளவு வாகனங்கள் வருவதால் இந்த சாலையில் வேகத்தடை அமைக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved