Also Watch
Read this
By: Fyrose Banu

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த பெருந்தோட்டம் கிராமத்தில் செங்கமலவல்லி தாயார் சமேத ஆதிகேசவ பெருமாள் கோவில் உள்ளது. அபிமான ஸ்தலம். குமுதவல்லி நாச்சியார் விருப்பப்படி திருமங்கை ஆழ்வார் தினமும் 1008 வைணவர்களுக்கு அன்னதானம் செய்து வந்தார். அதற்கான காய்கறிகள் விளைவிக்க பரந்த தோட்டத்தை அமைத்தார்.
அந்த பெரிய தோட்டமே தற்போது பெருந்தோட்டம் என்ற பெயரால் வழங்கப்படுகிறது. இத்தகைய சிறப்பு மிக்க பெருந்தோட்டத்தில் ஆதி கேசவப் பெருமாள், செங்கமலவல்லி தாயார், கருடாழ்வார் தனி தனி சன்னதியில் அருள் பாலிக்கின்றனர். இக்கோவிலில் உள்ள பழமை வாய்ந்த கிணற்றில் நீராடி பெருமாளை சேவிக்கும் பக்தர்களுக்கு நீண்ட ஆயுளும், நிறைந்த செல்வமும் கிடைக்கும் என்பது ஐதீகம். இந்த கோவிலில் திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டு இன்று கும்பாபிஷேகம் விமர்சியாக நடைபெற்றது. 
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 17ஆம் தேதி பூர்வாங்க பூஜைகள் செய்து முடிக்கப்பட்டு 18ஆம் தேதி முதல் காலை யாகசாலை பூஜை தொடங்கியது. இன்று காலை கோ பூஜை, மண்டல பிம்ப அக்னி ஆராதனம் செய்யப்பட்டு மூன்றாம் கால யாகசாலை பூஜை மற்றும் மகா பூர்ணாஹுதி நடந்தது. இதனை அடுத்து யாகசாலையில் இருந்து கடங்கள் புறப்பாடு செய்யப்பட்டு மங்கள வாத்தியங்கள் இசைக்க கோவிலை வலம் வந்து விமானத்தை அடைந்தது. கோவில் அர்ச்சகர் பாலாஜி பட்டர் தலைமையில் சர்வ சாதகம் மன்னார்குடி பிரசன்ன வெங்கடேச தீக்ஷிதர் உள்ளிட்டோர் வேத மந்திரங்கள் ஓதி பெருமாள், தாயார், கருடாழ்வார் சன்னதி விமான கலசங்களில் புனித நீர் சேர்த்து கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். தொடர்ந்து மூலவர்களுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved