Also Watch
Read this

கேரளத்தின் ஓணம் பண்டிகையையொட்டி, கன்னியாகுமரி தோவாளை மலர் சந்தையில் விடிய விடிய நடந்த விற்பனையால் சந்தை களைகட்டியது.

ஓணம் கோலாகலம்
ஓணம் பண்டிகையின் போது, மலையாள மக்கள் தங்களது வீடுகளில் அத்தப்பூ கோலமிட்டு மகாபலி மன்னனை வரவேற்பர். இதற்காக பூக்களை வாங்க கேரளத்தைச் சேர்ந்த வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் தோவாளை மலர் சந்தையில் குவிந்தனர். 2 ஆயிரம் டன் பூக்கள் விற்பனையானதாக கூறியுள்ள வியாபாரிகள் பூக்களின் விலையும் கனிசமாக உயர்ந்துள்ளதாக தெரிவித்தனர்.

தோவாளை மலர்ச்சந்தை
தமிழ்நாட்டில் அமைந்துள்ள மலர் சந்தைகளில் மலர்கள் விற்பனைக்கு, மிக முக்கியமான சந்தையாக திகழ்ந்து வருவது குமரி மாவட்டம் தோவாளையில் உள்ள மலர் சந்தை. இங்கு மதுரை, திண்டுக்கல், ஒசூர் என வெளி மாவட்டங்களில் இருந்தும் குமாரபுரம், ஆரல்வாய்மொழி, செண்பகராமன் புதூர், தோவாளை மற்றும் சுற்று வட்டார உள்ளூர் பகுதிகளில் இருந்தும் தினந்தோறும் பூக்கள் வரத்து இருந்து வருகிறது. இங்கிருந்து கேரளத்துக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

திருவிழாவைப் போல...
இதனிடையே, நாளை ஆகஸ்ட் 25ஆம் தேதி, மலையாள மக்களின் பெரும் பண்டிகையான ஓணம் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், மகாபலி மன்னனை வரவேற்கும் விதமாக மலையாள மக்கள் தங்களது வீடுகளில் அத்தப்பூ கோலமிட்டு கொண்டாட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

அத்தப்பூ கோலமிடுவதற்கு தேவையான பல்வேறு வகையான பூக்களை வாங்குவதற்காக கேரளாவைச் சேர்ந்த வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை மலர் சந்தையில் குவிந்து வருகின்றனர். ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பூ விற்பனை தொடங்கிய நிலையில், இரவு முழுவதும் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனால் தோவாளை மலர் சந்தை திருவிழா போல் களைகட்டி காணப்பட்டது.

5,000 டன் மலர்கள்...
ஓணம் சிறப்பு விற்பனைக்காக சுமார் 5000 டன்னுக்கு மேல் பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இதனை வாங்குவதற்காக கேரளாவைச் சேர்ந்த பூ வியாபாரிகள் கூட்டம் கூட்டமாக பெரிய வாகனங்களில் தோவாளை சந்தைக்கு வந்து, பூக்களை போட்டி போட்டு வாங்கிச் செல்கின்றனர். இதன் காரணமாக தோவாளை மலர் சந்தையில் பூ வியாபாரம் களை கட்டியுள்ளது. ஓணம் பண்டிகையை முன்னிட்டு வண்ண வண்ண பூக்களுக்கான தேவை அதிகரித்துள்ளதால், பல்வேறு வகையான பூக்களின் விலையும் உயர்ந்துள்ளது. சிகப்பு கேந்தி 100 ரூபாய்க்கும், மஞ்சள் கேந்தி 100 ரூபாய்க்கும், ரோஸ் 250 ரூபாய்க்கும் செவ்வந்தி 170 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved