Also Watch
Read this
கோவையில், கஞ்சா போதை சிறுவனின் சில்மிஷத்தில் இருந்து மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை தெருநாய் காப்பாற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பெட்டிக்கடைக்கு தீவைத்த வழக்கை விசாரிக்க சென்ற போலீஸாருக்கு கிடைத்த அதிர்ச்சி சம்பவம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.

சிசிடிவி காட்சியில்...
கோவை, துடியலூர் அருகே உள்ள என்.ஜி.ஜி.ஓ.காலனி அசோகபுரம் பகுதியில் உள்ள பெட்டிக்கடைக்கு மர்ம நபர்கள் தீவைத்து விட்டனர். இது குறித்த புகாரின் பேரில் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். அப்போதுதான், அந்த அதிர்ச்சி சம்பவம் தெரியவந்தது.

மனநலம் பாதிக்கப்பட்ட பெண்
அதாவது, அசோகபுரம் பகுதியை சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர், அப்பகுதியில் உள்ள ரயில்வே மேம்பாலத்தின் கீழ் சாலையோரம் அமர்ந்திருந்தார். அப்போது, அவ்வழியாக சென்ற போதை ஆசாமியை பார்த்து தெருநாய் ஒன்று குறைத்துக்கொண்டே பின்தொடர்ந்து வந்தது. உடனே, அந்த நபர் அந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பார்த்து, "இது உங்க நாயா? பாரு, பின்னாடியே வந்துக்கிட்டு இருக்கு" என கேட்டான்.

அதிர்ச்சி சம்பவம்
அதற்கு அந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண், "கல்லை எடுத்து அடிங்க, ஓடிப் போயிரும், இது கூடத் தெரியாதா?," என கூறவே, அந்த போதை ஆசாமியும் அங்கு கிடந்த கல்லை எடுத்து நாயை துரத்தினான். உடனே, அந்த நாய் சிறிது தூரம் ஓடி நின்றது. இதன் பிறகு அந்த ஆசாமி செய்ததுதான் அதிர்ச்சி சம்பவம்.

காலைக் கடித்த நாய்
நைசாக அந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை நோக்கி நடந்து வந்தவன், திடீரென அவரை கட்டிப் பிடித்து பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றான். உடனே, அந்தப் பெண் கத்தி கூச்சலிட்டபடியே தன்னால் முடிந்த அளவுக்கு எதிர்த்துப் போராடினார். இதைக் கண்ட அந்த தெருநாய், ஓடிவந்து அந்த ஆசாமியின் காலை கடித்து இழுத்து அந்த பெண்ணிடம் இருந்து விடுவிக்க முயன்றது.

காப்பாற்றிய தெருநாய்
ஒருபுறம் அந்த பெண் எதிர்த்து போராட, மறுபுறம் அந்த நாயும் காலை கடித்து விரட்ட முயல, வேறு வழியின்றி அவன் அந்த பெண்ணை விட்டு விட்டு ஓட்டம் பிடித்தான். ஆனாலும், அந்த நாய் விடுவதாக இல்லை. அந்த ஆசாமியை சிறிது தூரம் விரட்டிச் சென்ற பிறகே விட்டது.

சிறுவன் கைது, மக்கள் பாராட்டு
இந்த அதிர்ச்சி சம்பவத்தைக் கண்ட துடியலூர் போலீஸார், உடனடியாக விசாரணையை தொடங்கினர். விசாரணையில், அந்த நபர் கணேஷ் நகர் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவன் என்பதும், கஞ்சா போதையில் இப்படியொரு இழி செயலை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து, அந்த சிறுவனை கைது செய்த போலீஸார் சிறுவர் சீர்த்திருத்தப் பள்ளியில் அனுமதித்தனர். போலீஸாரின் இந்த செயல் அப்பகுதி மக்களிடையே பாராட்டை பெற்றுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved